கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வெட்டி கொலை

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 19:18

கண்ணூர்,

கேரள மாநிலம் கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுகைப் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது.

கடந்த வாரம் அப்பகுதியில் நடந்த வன்முறைக்கு பழி வாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
கேரளாவில் இடதுசாரி கூட்டணி அரசு பதவியேற்ற பின், கண்ணூர் பகுதியில் அரசியல் படுகொலைகள் அதிகரித்துள்ளதாகக் கூறி போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மோதிக் கொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று மட்டனூர் அருகே தேரூரில் அப்பகுதி வட்டார இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சுகைப் சாலையோர டீக்கடை ஒன்றில் நண்பர்கள் ரியாஸ் மற்றும் நவுஷாத் உடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் அங்கு வந்த 4 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் கத்தியால் குத்தியும் அவரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் தலசேரியில் உள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுகைப் உயிரிழந்தார். காயமடைந்த அவரது நண்பர்கள் இருவரும் நலமுடன் உள்ளனர்.

இந்தப் படுகொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களே சுகைப்பை படுகொலை செய்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்த படுகொலையைக் கண்டித்து அப்பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.