வராக் கடன் பிரச்னைக்கான நடவடிக்கை முறையை மாற்றியது ரிசர்வ் வங்கி

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 19:13

மும்பை,

வராக் கடன் பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதற்காக  நடைமுறையை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறைகள் 2016ம் ஆண்டு இன்சால்வன்சி மற்றும் பேங்க்ரப்ட்சி (insolvency and Bankruptcy Code) விதிகளுக்கு இணங்க அமைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி வராக் கடனாகும் ஒரு வங்கிக் கணக்கு, துவக்கி நிலையிலேயே கண்டுபிடிக்க புதிய விதிகள் வகை செய்கின்றன. துவக்க நிலையிலேயே வராக் கடனை அடையாளம் கண்டுவிட்டால் அவற்றின் பிரச்னைக்கு தீர்வு காண்பது எளிதாக அமையும்.

வராக் கடன் ஆகும் நிலையில் உள்ள வங்கி கடன் கணக்குகளை சிறப்பு குறிப்பு கணக்குகள் என ரிசர்வ் வங்கி வகை செய்துள்ளது.

நிலுவைக் கடனுக்கு முந்தைய நிலையில் உள்ள பாதிக்கப்பட்டுள்ள கணக்குகளை குறிப்பிட இந்த புதிய பெயர் பயன்படுத்தப்படும்.

எல்லா வங்கிகளும் வராக் கடன் கணக்குகளை நேர் செய்வதற்கான கொள்கைகள் பற்றி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.

தவணைத்தவறிய கணக்குகள் தீர்வுத் திட்டம் உடனடியாக துவக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தை அமல் செய்ய தவறும் பட்சத்தில் உடனடியாக இன்சால்வன்சி விண்ணப்பம் தாக்கல் செய்யலாம்.

பெரிய வராக் கடன்கள் பற்றி எல்லா வங்கிகளும் ரிசர்வ் வங்கிக்கு ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

2018 பிப்ரவரி 23ம் தேதிக்கு முன்பு முதல் அறிக்கையை ரிசர்வ் வங்கிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.