ரூ. 50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி: ராஜஸ்தான் முதல்வர் பட்ஜெட்டில் அறிவிப்பு,

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 16:52

ஜெய்ப்பூர்,

   ராஜஸ்தான் மாநிலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் ரூ. 50 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே பட்ஜெட் உரையில் இன்று அறிவித்தார். ஆனால் முழு விவசாயக்கடனும் ரத்துச்செய்யப்பட வேண்டும். பயிர்க்கடன் ரத்து என்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலை என எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் வசுந்தரா ராஜே அரசின் இறுதி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் ரூ. 50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் விவசாய கடன் நிவாரண ஆணையம் அமைக்க உள்ளதாகவும் முதல்வர் ராஜே அறிவித்தார்.

குறு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் அளித்த நிலுவையில் உள்ள குறுகிய கால விவசாயக் கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூ. 8,000 கோடி செலவு ஏற்படும்என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக நியமிக்கப்படும் நிவாரண ஆணையம் நிரந்தரமாக செயல்படும். இந்த ஆணையத்தில் விவசாயிகள் அளிக்கும் முறையீட்டு மனு தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என வசுந்தரா ராஜே தெரிவித்தார்.

மேலும் நில வருவாய் விலக்கு அளிக்கப்படுவதால் 50 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.

முழு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதால் விவசாயிகளுக்கு பயனில்லை என்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர்.  இது விவசாயிகளை ஏமாற்றும் வலை என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் சேவை துறையை ஊக்குவிக்கும் வகையில் வட்டிக்கு அளிக்கப்படும் மானியம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ. 7.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்றும் முதல்வர் பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நாற்பது வயது வரையிலான பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோருக்கான வட்டி மானியம் 5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட பகுதியில் ரூ.50 கோடியில் முதலீடு செய்யும் வேளாண் பொருள் பதப்படுத்துதல், வேளாண் விற்பனை, உயிரி தொழில் நுட்பம் மற்றும் ஐடி துறையினர் உள்கட்டமைப்புக்கு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை மானியம் அளிக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் கொடுக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நந்தி கோசாலைக்காக ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படும். .

ஜெய்ப்பூரில் ரூ.5 கோடி செலவில் ஓட்டகப் பால் பதப்படுத்தி விற்பனை செய்யும் சிறிய நிறுவனம் ஒன்று துவக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது.