சுன்ஜ்வான் தாக்குதல்: மேலும் ஒரு ராணுவ வீரர் உடல் கண்டெடுப்பு - முதல்வர் முப்தி அஞ்சலி

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 16:42

ஜம்மு,

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுன்ஜ்வான் ராணுவ முகாம் துப்பரவு பணியின் போது மேலும் ஒரு ராணுவ வீரர் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ராணுவ வீரர்கள் உடலுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி அஞ்சலி செலுத்தினார்.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கடந்த 10-ந்தேதி ராணுவ முகாமிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் மற்றும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு சுன்ஜ்வான் ராணுவ முகாமை துப்பரவு செய்யும் போது மேலும் ஒரு ராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி தேவேந்தர் ஆனந்த் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி காஷ்மீரை சேர்ந்த 4 வீரர்களின் உடல்களுக்கு 11 மணியளவில் விமானநிலையத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் 4 வீரர்களது உடல்களும்  அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என்றும் ஆனந்த் தெரிவித்தார்.

சுன்ஜ்வான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 5 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்ட வீரர் ஒருவரின் தந்தை உட்பட 6 பேர் பலியாகினர். இரண்டு ராணுவ அதிகாரிகள், 6 பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

இது தவிர ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேரது உடல்களும் தேடுதல் வேட்டையின் போது கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

கடந்த 7ஆம் தேதி போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி நவீத் ஜாட்டை பயங்கரவாதிகள் மீட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது.