தமிழகத்திற்கு வரும் திட்டங்களை அமைச்சர்கள் தடுக்கின்றனர்: பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 15:58

நாகர்கோவில்,

    தமிழகத்திற்கு வரும் மத்திய அரசின் திட்டங்களை தமிழக அமைச்சர்கள் தடுக்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை திறப்பதை பலர் அரசியல் நோக்கத்துடன் பார்க்கிறார்கள். அரசு அலுவலகங்களிலும், விடுதிகளிலும் ஜெயலலிதா படம் இருந்தது. அப்போது ஏன் யாரும் வழக்கு தொடரவில்லை?
காவி நிறத்தை ரஜினி அணிகிறாரா அல்லது கமல் அணிகிறாரா என்பது முக்கியமல்ல. காவி என்பது இந்துக்கள் மத்தியில் பெருமையாகவும், தியாகத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

எனவே, கமல்போல காவியை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம். திராவிடம் என்பது குஜராத் வரை நீண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் தமிழ் வாழ வேண்டும். நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். எந்த மதத்தினரும் தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடாது; பிறரும் வாழ வேண்டும் என்றுதான் நினைக்க வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீப்பற்றிய சம்பவம் சதி வேலையாக இருக்க வாய்ப்புள்ளது. அரசு விசாரணை கமிஷன் அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் ராகுல்காந்தி விவசாயத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்.

இனயம் துறைமுக திட்டம் கைவிடப்படவில்லை, இடம்தான் மாற்றப்பட்டுள்ளது. துறைமுகத் திட்டத்தை கைவிட்டதாக யாரும் தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

ஆமைகளின் இனப்பெருக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை ஆய்வு செய்த பிறகுதான் துறைமுகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. துறைமுக திட்டத்தால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

கொக்கு முட்டை இடுவதை காரணம் காட்டியும், மீன் வலைகள் அறுபடும் என்றும் காரணம் கூறி தமிழக அமைச்சர்கள் திட்டங்களைத் தடுக்கின்றனர் என்றும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விமானநிலையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டால் அதை தமிழக அமைச்சர்கள் தடுப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி பேசினார்.