குமரியில் தொடங்கியது சிவாலய ஓட்டம்

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2018 18:54

கன்னியாகுமரி:

   மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில்  பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் இன்று தொடங்கினர்.

மகா சிவராத்திரி அன்று சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மகா சிவராத்திரி நாளில் குமரி மாவட்டத்தில் மட்டும் நடக்கும் சிவராத்திரி ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடியேச் சென்று வழிபடுவது தான் சிவாலய ஓட்டம், சிவராத்திரி ஓட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13ம் தேதி மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஏகாதசி நட்சத்திரத்தில் விரதத்தை தொடங்குவார்கள். அவர்கள் காவி வேட்டி, காவி துண்டு அணிந்து கொண்டு கோவில்களில் காணிக்கையிட சிறு துணிப்பையில் பணமும் வைத்திருப்பர். 

மகா சிவராத்திரிக்கு முன்தினம் தொடங்கப்பெறும் சிவாலய ஓட்டம் முஞ்சிறை திருமலை சிவன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருப்பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, நட்டாலம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். கல்குளம், விளவங்கோடு தாலுக்காக்களில் இந்த ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களுக்கான மொத்த ஓட்ட தூரம் 102 கிலோ மீட்டர் ஆகும்.

சிவாலயங்களுக்கு ஓடி செல்லும் பக்தர்களுக்கு வழிப்பாதையில் மோர், பானைக்காரம், சுண்டல் மற்றும் கஞ்சி ஆகியவை வேண்டுதலுடன்  இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ஓட்டமாக மட்டுமல்லாமல், இருசக்கர  வாகனங்கள், கார், வேன், பஸ்களிலும் சென்று 12 சிவாலயங்களையும் பக்தர்கள் தரிசிக்கின்றனர்,