ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி கண்டனம்

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2018 17:07

புதுடில்லி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் அவமானப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தன் கண்டனத்தை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பீகாரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொண்டர்கள் கூட்டத்தின் முன், ராணுவத்தைவிட மிக வேகமாக ராணுவ வீரர்களை நாம் தயார் செய்து டுவோம் என நேற்று பேசினார்.

”ராணுவ வீரர்களை தயார் செய்ய 6 முதல் 7 மாதங்கள் வரை ராணுவத்திற்கு தேவைப்படும். ஆனால் 3 நாட்களில் ராணுவ வீரர்களை நாம் தயார் செய்துவிடுவோம்.

இது நம்முடைய திறன். நாட்டுக்கு அதுபோன்ற தேவைப்படும் சூழல் ஏற்பட்டால் ஸ்வயம் சேவக் முன்னால் நிற்க தயாராக இருக்கிறது. இதற்கு அரசியலமைப்பும் அனுமதி அளித்துள்ளது” என மோகன் பகவத் கூறினார்.

மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,

”ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் அவமானப்படுத்தியுள்ளது. ஏனெனில் நமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை இது அவமரியாதை செய்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும்,”ஒவ்வொரு வீரரும் வணக்கம் செலுத்தும் நமது கொடியை அவமதித்துள்ளது. உயிரிழந்த நமது வீரர்கள் மற்றும் நம்முடைய ராணுவத்தினரை அவமரியாதை செய்துள்ள பகவத்-ஐ நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என ராகுல் காந்தி வன்மையாக கண்டித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் விளக்கம்

இதனிடையே மோகன் பகவத் பேச்சு திரித்து கூறப்படுவதாக ஆர்எஸ்எஸ் விளக்கம் அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அகில பாரத பிரச்சார பிரமுகரான மன்மோகன் வைத்யா இது குறித்த அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில்,”ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பீகார் முசாபர் நகரில் நிகழ்த்திய உரை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தேவைப்படும் சூழல் வந்தால், இந்திய ராணுவம் அதற்கு ஏற்ப மக்களை தயார் படுத்தவேண்டும், அதற்கு 6 முதல் 7 மாதங்கள் ஆகலாம். ஆனால் போர் என்று வந்தால் ஆர்எஸ்எஸ் 3 மாதத்தில் தயாராகி விடும். அந்த அளவிற்கு ஒழுக்கத்தை கடைபிடித்து வருவதாக குறிப்பிட்டார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”மோகன் பகவத் ராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிடவில்லை, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பொதுமக்களை தான் ஒப்பிட்டார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.