தலித், பழங்குடியினருக்கு ’கோவில் குருக்கள்’ பயிற்சி அளிக்கிறது திருப்பதி தேவஸ்தானம்

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2018 14:56

திருப்பதி,

    சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே பக்தி இயக்கத்தை புதுப்பிக்க திருப்பதி தேவஸ்தானமும் மாநில அறநிலையத் துறையும் இணைந்து தலித்கள் மற்றும் பழங்குடியினருக்கு கோவில் குருக்களாக பணியாற்ற பயிற்சி அளிக்க உள்ளன.


இதன் முதல் கட்டமாக, தலித்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு திருப்பதி தேவஸ்தானமும் மாநில அறநிலையத் துறையும் செல்லும் அந்த கிராம மக்களிடம் உங்கள் ஊரில் யார் கோயில் கட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?  யாருக்கு குருக்கள் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று அவர்களிடமே கேட்டு அவர்கள விருப்ப அடிப்படையில் முடிவு செய்வார்கள். . அவர்கள் கேட்ட பழங்குடியினர் கிராமங்களில் 80 சதவீதம் ராமர் கோயில் கட்டித் தருமாறு கேட்டார்கள்.

இது தவிர வெங்கடாஜலபதி, பிள்ளையார், சிவன், துர்க்கை அம்மனுக்கும் கோயில் கட்டித் தர கேட்டுள்ளனர்.

லம்பாடா சமூகத்தினர் மட்டும் சற்று வித்தியாசமாக துறவி சேவாலால் நாயக் கோயில் கட்டித் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி என்.முக்தேஸ்வர ராவ் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படும் கோயில்களில் குருக்களாக கிராம மக்கள் கூறுவோரையே தேர்ந்தெடுத்து அவருக்கே பயிற்சி அளிக்கப்படும் கோயில் குருக்களாக பணியாற்ற 500 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 30 முதல் 40 பேர் கொண்ட 10 குழுக்களுக்கு கோயில் நடைமுறைகள், குருக்களின் பங்கு, சிலை வழிபாடு, கோயிலுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செஞ்சு சுப்பையா கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 120 கோயில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. தற்போது 300 கோயில்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் அனைத்து கோயில்களும் கட்டி முடிக்கப்படும்.

திறமைகளை வளர்க்கவும் பயிற்சி

திருப்பதி தேவஸ்தானத்தின் பங்களிப்பு ரூ.5 லட்சத்துடன் மக்களின் பங்களிப்பும் சேர்ந்து குவிந்து வருகிறது. பஞ்சாங்கப்படி ராசி பலன் கணிப்பது, மூலிகை மருந்துகளை பரிந்துரைப்பதன் மூலம் ஆயுர்வேத வைத்தியம் அறிவது உள்ளிட்ட துணைத் திறமைகளை வளர்த்து கொள்ளவும் குருக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதி தேவஸ்தானம் மீனவர் சமூகத்திற்கு இது போன்றதொரு திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது. ஆனால் எதிர்பார்த்த வேலைவாய்ப்பை உருவாக்க முடியாததால் அத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

தர்மிக் ஆர்வலர் என பெயரிடப்பட்டுள்ள குருக்கள் பயிற்சியில் கோயிலை மையமாகக் கொண்ட பஜன், நாட்டுப்புறக் கலை மற்றும் நடனப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கட்டாய மதமாற்றம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறையில் இருந்து விடுபட்டு கடவுளின் பெயரால் பக்தி வாழ்க்கையில் நிலை கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.