ஏமாற்றும் பட்ஜெட்

பதிவு செய்த நாள் : 02 பிப்ரவரி 2018

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி முதல் தேதி அன்று மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.தனது வரவு செலவு திட்ட உரையின்போது பட்ஜெட்டின் நோக்கங்களை குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள், கிராமப்புற இந்தியாவின் நலன், இந்திய குடிமக்களுக்கு ,சுகாதார வசதி வழங்குதல், ஏழை மக்களுக்கு கல்வி வழங்குதல் சாதாரண இந்திய குடிமகனின் வாழ்க்கையை எளிமையானதாக மாற்றுதல் ஆகியவைகள் தான் தன்னுடைய வரவு செலவு திட்டத்தின் நோக்கம் என்று அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவு திட்ட உரையை மேலும் படித்துக் கொண்டே செல்லும்போது ஏன் இப்படி ஏமாற்றுகிறார் ஜெட்லி என்ற அங்கலாய்ப்புதான் நமக்கு ஏற்படுகிறது.முதலில் விவசாயிகளின் பிரச்னையை எடுத்துக் கொள்வோம்.

கிட்டத்தட்ட 10 வருட காலத்திற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் தலைமையில் இயங்கிய தேசிய விவசாயிகள் கமிஷன் தன்னுடைய  பரிந்துரைகளின் இறுதித் தொகுப்பில் விவசாயிகளின் உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவீதமாவது அவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் வகையில் வேளாண் விளைபொருட்களை கடையில் விற்க வாய்ப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்தை ஒரு தொழிலாக, படிக்காத விவசாயியாக இருந்தாலும், விவசாய பட்டப்படிப்பு முடித்த விவசாயியாக இருந்தாலும்செய்ய முடியும்.

இந்த பரிந்துரை அரசுக்கு அளிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் ஆட்சி நடந்து முடிந்துள்ளது. பாஜக அரசு தேர்தல் அறிக்கையிலேயே 50 சதவீதம் கூடுதலாக  விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு விலை கிடைக்க வகை செய்வோம் என பாஜக அறிவித்தது.
கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்தை நம்முடைய அரசியல் தலைவர்கள் வீணடித்துவிட்டார்கள்.இந்த 10 ஆண்டு காலத்தில் விவசாயிகள் வேதனையின் விளிம்புக்கு போய்விட்டார்கள்.அதன் விளைவுதான் தற்கொலைகள் அதிகரித்தது ஆகும்.

மத்திய அரசின் முன்னாள் விவசாயத்துறை செயலாளராக இருந்த சிராஜ் விவசாயிகளின் நலன் குறித்து இப்பொழுது தான் உண்மையில் பாஜக அரசு விவசாயிகள் பக்கம் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இதன் பலன் என்னவாக இருந்தாலும் இந்த மாற்றமே வரவேற்கக் கூடியது என வாழ்த்துப் பாடியுள்ளார்.

இந்த 50 சதவீத கூடுதல் லாபம் குறைந்த படச ஆதரவு விலை தேவை என்று பரிந்துரையை வெளியிட்ட சுவாமிநாதன், மத்திய அரசின் பட்ஜெட்டில் அருண் ஜெட்லி என்ன சொல்கிறார் என எனக்கு புரியவில்லை என அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். சுவாமிநாதன் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதை பாஜக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.எந்த அடிப்படையில் உற்பத்தி செலவை கணக்கிட போகிறார்கள் என்பதை குறித்து அரசாங்கம் விளக்கம் தரவேண்டும் என்பதும் அவரது கோரிக்கை.

உற்பத்திச் செலவை கணக்கிடுவதற்கு சி2 முறையை பின்பற்றினால் தான் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். வேறு கணக்கிடும் முறையை பின்பற்றினால் இப்பொழுது அரசு தரும் குறைந்த பட்ச ஆதரவு விலையே 150 சதவீதத்திற்கு மேல் அதிகமாக உள்ளது என்றமுடிவு கிடைக்கக் கூடும் என்பது வேளாண்துறை நிபுணர்களின் கவலை ஆகும்.

விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்றைய அறிக்கையில் பல கருத்துகளை முன் வைத்துள்ளார் சுவாமிநாதன்.

ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து விவசாயத்தை பற்றிக் கவலைப் படாத மத்திய அரசு என்ற கவுரவ பட்டத்தை சூட்டிக் கொண்டது மோடி அரசு.
2014–15ம் ஆண்டு வேளாண் உற்பத்தி 5.57 ஆக இருந்தது.இப்பொழுது 2017–18ல் உற்பத்தி 2.13 சதவீதமாக உள்ளது.ஆக வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கே புரியாத ஒரு திட்டத்தை கம்பீரமாக அருண் ஜெட்லி அறிவித்து இருக்கிறார்.
இந்த திட்டத்திற்கான விவரங்கள் இனிமேல் தான் வகுக்கப்படும் என்று வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். ஆனால் பட்ஜெட்டை வெ ளியிட்ட இரண்டாம் நாளில் அதுவும் வேளாண் விஞ்ஞானியே விளக்கம் தேடும் நிலையில் அணுகுண்டுக்கு சமமான ஹைட்ரஜன் வெடிகுண்டை விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங் எடுத்து வீசி இருக்கிறார்.

விவசாயிகளின் நலன் காக்க கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பட குறைந்த பட்ச ஆதரவு விலையை உற்பத்திச்செலவில் 150 சதவீதமாக உயர்த்தி தருவோம் என பாஜக வாக்குறுதிதந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங்.

மத்திய அமைச்சர் பொய் சொல்வாரா?குப்பனும் சுப்பனும் ராதாமோகன் சிங் பொய் சொல்வார் என்பதை நம்பவே மாட்டார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள் இந்த பட்ஜெட் ஏமாற்றும் பட்ஜெட்டா?

சுகாதார காப்பீட்டுத் திட்டம்

இந்திய குடிமக்களுக்கு சுகாதார வசதி கிடைப்பதற்காக மற்றொரு திட்டத்தை ஜெட்லி தன்னுடைய உரையில் வெளியிட்டு உள்ளார்.

இந்த திட்டம் முழுக்க முழுக்க புது திட்டம் அல்ல. ஏற்கனவே ராஷ்டிரிய ஸ்வத்திய பீமா யோஜனா திட்டத்தை மத்திய அரசு அமல் செய்து வருகிறது.இந்த திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.30 ஆயிரம் அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை தற்பொழுது விரிவுபடுத்தி இருக்கிறார்கள்.விரிவு படுத்தப்பட்ட திட்டப்படி 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு அல்லது 50 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ரூ.2000 கோடி வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய்செலவிட இந்த திட்டம் வகை செய்கிறது.

இந்த திட்டம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்த திட்டத்தை அமல் செய்ய சுகாதார மற்றும் நல மையங்கள் உருவாக்கப்படும் என ஒருங்கிணைந்த சுகாதார நலத்தை பெறுவதற்கான முறைகள் இந்த மையங்களினால் அமல் செய்யப்படும் என ஜெட்லி அறிவித்துள்ளார்.

டில்லியில் பட்ஜெட் வெளியிட்ட மறுநாள் கருத்தரங்கு ஒன்றில் ஜெட்லி பேசினார்.அவர் முகத்தில் வழிந்த அசடை கைக்குட்டையால் துடைத்து கொண்டு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை அடுத்த ஆண்டு பார்த்து கொள்ளலாம் என்று அரசு நினைக்கிறது.ஏனெனில் இந்த திட்டத்துக்கு நிறைய பணம் செலவாகும். ரூ.2,000 கோடி போதாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த நிதியாண்டில் அரசிடம் பணம் நிறைய இருக்கும்.அதனால் அப்பொழுது பார்த்து கொள்ளலாம் என அரசு நினைக்கிறது என்று அருண்ஜெட்லி கூறினார்.இந்த உரையில் தவிர்க்க முடியாமல் ஒரு கருத்தை அருண் ஜெட்லி குறிப்பிட்டு இருக்கிறார்.பல மாநிலங்கள் இதுபோன்ற நலத்திட்டங்களை ஏற்கனவே அமல் செய்து வருகின்றன என்று கூறியிருக்கிறார்.

மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து திட்டச் செலவை பகிர்ந்து கொள்ளலாம்.அறக்கட்டளை மூலம் திட்டத்தை அமல் செய்யலாம் என்றும் புது கருத்து மழை பொழிந்திருக்கிறார் ஜெட்லி. சென்ற ஆண்டும் இதே சுகாதார திட்டத்தை மத்திய வரவு செலவு திட்டத்தில் இதே ஜெட்லி அறிவித்தார்.ஆனால் அமல்படுத்தவில்லை.இந்தாண்டும் வேட்டு போட்டு மேளம் தட்டி நாதஸ்வர கச்சேரியோடு அறிவிப்பு வெளியானது.இந்தாண்டும் திட்டம் அமல் செய்யப்படவில்லை.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நிதி அமைச்சருக்கு ஒரு திட்டத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பது கூட தெரியாமல் இரண்டாம் நாளே ஒரு வருடத்துக்கு வாய்தா வாங்குகிறார் என்றால் எந்த கல்லில் போய் நாம் முட்டி கொள்வது.

பழைய பீமா யோஜனா திட்டத்தை ஆயுஷ்மான் பாரத் என்ற நாமகரணம் சூட்டி அருண் ஜெட்லி வெளியிட்டு இருக்கிறார்.

கொஞ்சம் தமிழ்நாட்டுக்கு திரும்பி வாருங்கள்.இங்கே நகர்ப்புறம் கிராமப்புறம் மற்றும் புறங்களுக்கும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல் செய்யப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் புதிய நோய்களுக்கு இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்படும் என புதிதாக அரசு அறிவிப்புகள் வெ ளியிடப்படுகின்றன.

திமுக ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட இந்த திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து அமல் செய்யப்பட்டு வருகிறது.

நகர்ப்புற நலனுக்காக நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் 1634 கோடியும் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கென 1348 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் 108 ஓட்டைகளை யார் வேண்டுமானாலும் கண்டு பிடிக்கலாம்.ஆனால் சுமார் 10 ஆண்டுகள் சிக்கல் இல்லாமல் அமல் படுத்தப்பட்டு வருகிறது இந்த திட்டம்.

மத்திய திட்டக் கமிஷன் பத்தாம் பசலி. அதற்கு நிபுணத்துவம் போதாது என்று நிதி ஆயோக்  கொண்டு வந்தது மத்திய அரசு. தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அமலில் உள்ள திட்டங்களை பற்றி விவரங்களை திரட்டி முழுமையாக அறிவிக்க முடியாமல் வெறும் 2000 கோடி ரூபாயை முன்பணமாக ஒதுக்கி மத்தாப்பு கொளுத்துகிறார் அருண் ஜெட்லி.

இது ஏமாற்று வேலை இல்லையா?வேறு பெயர் யார் வைக்கிறது.?ஏற்கனவே நிதி கமிஷன் மூலமாக வரி வருமானத்தை இழந்து நிற்கின்றன தமிழகம், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் போன்ற மாநில அரசுகள்.தமிழகமும் வரி வருமானத்தை இழந்து நிற்கிறது.ஜிஎஸ்டி பற்றவைக்கப்பட்ட அணுகுண்டாக இன்னும் புகை மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கின்றது.தமிழகத்திற்கு இழப்பீடாக எவ்வளவு கிடைக்கும் என்று கூறமுடியவில்லை.

இந்தநிலையில் மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு மாநில அரசுகளை கொஞ்சம் சிலுவையிலிருந்து விடுவிக்கலாம்.

அருண் ஜெட்லி தந்த அமிர்தாஞ்சனமாக இருந்தாலும் பழனிசாமி தந்த அமிர்தாஞ்சனமாக இருந்தாலும் தலைவலி மக்களுக்கு போனால் சரி.

தமிழகத்தில் மொத்தம் 586 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.இவற்றில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 651 இடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் சென்ற ஆண்டு இந்த கல்லூரிகளில்  மொத்த அனுமதிக்கப்பட்ட எல்லா இடங்களும் நிரம்பியதா என்றால் இல்லை.

ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 204 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.கிட்டத்தட்ட 90 ஆயிரம் இடங்கள் காலியாக கிடந்துள்ளன.தொழில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கான அரசு நிதி உதவியை 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

இந்த உதவி போதுமா?உயர் கல்வி மட்டுமே சமூகத்தின் கல்வி தேவையை பூர்த்தி செய்து விடுமா?மத்திய அரசு சர்வ சிக்ஷா அபிக்யான் திட்டத்தை கைவிட்டுவிட்டது.ஆரம்பக்கல்வி உயர் நிலைக்கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அதனால் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

சிறுபான்மையோருக்கு அரசியல் சட்டப்படி கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்ட உரிமையை ஒரு கூட்டுச் சதி காரணமாக இழந்து நிற்கிறோம்.

இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றம் மத்திய மேல் நிலை கல்வி போர்டு ஆகியவை மேற்கொண்ட அதிரடி தாக்குதல் காரணமாக சிறுபான்மையோர் அமைப்புகள் நடத்திய கல்வி நிறுவனங்கள் தேங்கி கிடக்கின்றன. உலகப் புகழ்பெற்ற வேலூர் மருத்துவ கல்லூரி நடப்பு ஆண்டில் எம்.பிபிஎஸ் படிப்புக்கு மாணவர்களை சேர்க்கவே இல்லை.

நீட் தேர்வு காரணமாக இளைய தலைமுறை எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் தயங்கி நிற்கிறது.வேலை வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்தாவது வேலைக்கு வழி பிறக்குமா என்று மத்திய தர வகுப்பு பிள்ளைகளும் பெற்றோரும் கைபிசைந்து நிற்கிறார்கள்.

ஆனால் பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் பலகை வைக்க வரவு செலவு திட்டத்தில் அருண் ஜெட்லி திட்டம் அறிவித்துள்ளார்.ஓராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர் விடுமுறை எடுத்தால் பள்ளிக்கூடங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.

பல ஓராசிரியர் பள்ளிகள் மரத்தடியில் இயங்கும் நிலை உள்ளது.பள்ளிக் கட்டிடம் இல்லை.பள்ளிக் குழந்தைகளுக்கு கழிவறை இல்லை. இந்நிலையில் டிஜிட்டல் பலகை வைத்து ஆன்லைனில் கல்வி கற்றுத் தர திட்டமிடுவது எந்த அளவுக்கு பலன் தரும்?.

மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த ஏகலைவன் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்கானிக் விவசாயம், உயர் தொழில் நுட்ப உற்பத்தி கணினி கல்வி மென்சாதன கல்வி ஆகியவை என திறன் மேம்பாட்டுக்கான கல்வியை திட்டமிடும் நாள் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை.

பெட்ரோல் விலையில் ஒரு மாஜிக்

மத்திய அரசு பெட்ரோல் விற்பனையை சர்வதேச சந்தையுடன் இணைத்தது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியா முழுக்க பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் மத்திய அரசு செலவுக்கு பணம் வேண்டும் என எண்ணெய் கம்பெனிகள் மூலம் ஏழை நடுத்தர மக்களின் பாக்கெட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக பணத்தை உறிஞ்சிக் கொண்டு இருக்கிறது.

இப்பொழுது பெட்ரோல் டீசல் விலையையும் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரும்படி பெட்ரோல் விற்பனை நிலையங்களும் நுகர்வோரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தர்மசங்கடமான சூழ்நிலை இப்பொழுது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.அதனால் பெட்ரோல் மீதான விலையில் ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் அளவுக்கு அடிப்படை எக்சைஸ் தீர்வையை குறைக்கப்போவதாக அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

டீசலுக்கு இந்த எக்சைஸ்தீர்வை குறைப்பு இரண்டு ரூபாயாக இருக்கும்.ஆனால் இந்த எக்சைஸ் குறைப்பின் காரணமாக பொதுமக்களுக்கு பைசா லாபம் கிடைக்கப்போவதில்லை.

பெட்ரோல் டீசல் விலையின் மீது ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் செஸ் வரி விதிக்கப்போவதாக வரவு செலவு திட்டத்திலேயே அருண் ஜெட்லி குறிப்பி்ட்டுள்ளார்.ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 6 ரூபாய் குறைப்பார்.அதே அருண் ஜெட்லி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு செஸ் புதிதாக விதிப்பார்.ஆக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இப்பொழுது நாம் கூடுதலாக இரண்டு ரூபாய் கொடுத்தாக வேண்டும்.

ஹைஸ்பீடு டீசலை பொறுத்தமட்டில் இரண்டு ரூபாய் குறைகிறது..மற்றொருபுறம் ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் செஸ் என்ற பெயரில் உயர்த்தப்படுகிறது.

எப்படியும் தலை மொட்டை அடிக்கப்படுவது உறுதி.

நடுத்தர வகுப்பு மக்களுக்கு நாமம் போடும் மற்றொரு ஏரியா வருமான வரித்துறை.வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.வங்கியிலும் அஞ்சலங்களிலும் சேமிப்புக்கான வட்டி மீது விதிக்கப்படும்வருமான வரிக்கு விலக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து அலவன்சு, மெடிக்கல் அலவன்சு மூலமாக வருமான வரி செலுத்துவோர் ரூ.40 ஆயிரம் வரை விலக்கு பெற்று வந்தனர்.

இப்பொழுது இந்த அலவன்சுகளுக்கு பதிலாக ரூ.40 ஆயிரம் வரை ஸ்டாண்டர்டு டிடக்ஷன் என்ற பெயரில் நிலைக்கழிவு அனுமதிக்கப்படும் என பட்ஜெட் கூறுகிறது.ஆனால் வருமான வரியுடன் வசுலிக்கப்படும் ஹெல்த் மற்றும் கல்வி செஸ் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் கதைதான் இங்கும்.நிலைக்கழிவாக 40 ஆயிரத்தை அனுமதித்துவிட்டு செஸ்வரியை ஒரு சதவீதம் ஜெட்லி உயர்த்தி இருக்கிறார்.

இந்த செஸ் வரியை பொறுத்த மட்டில் மத்திய அரசுக்கு ஒரே ஜாலிதான்.ஏனெனில் எந்த மாநில அரசுக்கும் இந்த செஸ் வரியை பிரித்துக் கொடுக்க வேண்டியதில்லை.முழுக்க முழுக்க மத்திய அரசு செலவிடலாம்.

பெட்ரோலில் குறைத்த எக்சைஸ் வரி செஸ் வரியாக உருமாறியது.இப்பொழுது வருமான வரி அலவன்சுகளும் செஸ் வரியாக உருமாறிவிட்டது.பொதுமக்களுக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு மாநில அரசுகளுக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.அருண் ஜெட்லி கெட்டிக்காரர் தான்.

                             


கட்டுரையாளர்: க.சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation