தைப்பூச திருவிழா: பழனியில் தேரோட்டம் துவங்கியது – பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பதிவு செய்த நாள் : 31 ஜனவரி 2018 13:28

பழனி,

    தைப்பூச திருவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தேரோட்டம் துவங்கியது. அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.


முருகப் பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபடுவதுதான். 

இந்த வருடத்துக்கான தைப்பூசத் திருவிழா கடந்த 25–ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவை முன்னிட்டு தினந்தோறும் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்

தைப் பூசத் திருநாளில் அலகு குத்திக்கொண்டு காவடி ஆட்டம், பால் காவடி, காவடி எடுத்தல் நிகழ்வுகளும் நடைப்பெறுவதுண்டு.

6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன் பிறகு சிறப்பு ஆராதனையும், கன்னிகாதானம், மாங்கல்ய பூஜை நடைபெற்றது.

பின்னர் இரவு 9.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.

7-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதன் பிறகு காலை 10 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில்  தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பிறகு முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பின்னர், பக்தர்கள் திருத்தேரை இழுத்து வழிபட்டனர்.  

தேர் நிலையை அடைந்தவுடன் தந்தப் பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர் ரத வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி உலா வந்தபோது  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள்  முருக கோஷம் எழுப்பினர்.

தைப் பூச திருநாளை முன்னிட்டு தமிழகம், மற்றும் மலேசியாவின் பெனாங் நகரிலும் உள்ள முருகன் கோவிலில் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.