பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்கள் அதிக விலையில் விற்பனை: தமிழக மாணவர்கள் வாங்கிப் படிக்க சிரமம்

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2018 17:50

சென்னை:

    பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்கள் மிக அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றன. தமிழக மாணவர்கள் இந்த புத்தகங்களை வாங்கிப் படிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.


சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் வரலாற்றில் இளங்கலை படிக்கும் மாணவி எம். வெள்ளையம்மாள். இவர் பிறக்கும்போதே தன் பார்வை திறனை இழந்தவர். இவர் கூறுகையில், ”என்னைப்போல் உள்ள பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்களின் விலை மிக உயர்வாக உள்ளன. என்னுடன் படிக்கும் சக மாணவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நமது வழக்கமான பாட புத்தகங்களை படித்து ஒலியை பதிவுசெய்துகொள்ளுங்கள். அதனை மீண்டும் மீண்டும் கேட்பதன் மூலம் அனைத்துப் பாடங்களும் எளிதில் புரிந்துவிடும்” என்று கூறியுள்ளார்.

”அரசியல் ஒப்பீடு போன்ற பாடங்களுக்கான புத்தகங்கள் பிரெய்ல் பதிப்புகளில் இல்லை. தேவையான பாடங்களுக்கு பிரெய்ல் பதிப்புகளில் புத்தகங்கள் இருந்தாலும், அதன் விலை மற்ற பதிப்புகளின் புத்தகங்களைக் காட்டிலும் 30 சதவீதம் உயர்வாக உள்ளது. மேலும் சாதாரண புத்தகங்களை காட்டிலும் 50 - 60 சதவீதம் அதிக விலையில் விற்கப்படுகின்றன” என்று பார்வைத் திறனால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு மாணவி விக்னேஸ்வரி தெரிவித்தார்.

சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரி போன்ற கல்லூரிகளில் படிக்கும் வெள்ளையம்மாள் போன்ற மாணவிகள் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி சமூகத்தில் இருந்து வந்துள்ளனர். இவர்களால் அதிக விலை கொடுத்து இந்த புத்தகங்களை வாங்கி படிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.

கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், நாட்டில்  மொத்தமுள்ள 11,79,963 பார்வையற்றவர்களில், 1,27,405 பேர் தமிழகத்தில் மட்டும் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.