கிறிஸ்தவர்களுக்கான பல்கலை கழகம் அமைக்க மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2018 03:33

புதுடில்லி,

முஸ்லிம்களுக்கென அலிகார் முஸ்லிம் பல்கலை கழகம், ஜலியா மிலியா இஸ்லாமியா ஆகிய பல்கலை கழகங்கள் இருப்பது போல கிறிஸ்தவர்களுக்கென அரசு செலவில் பல்கலை கழகம் அமைக்கபட வேண்டுமென மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


தேசிய சிறுபான்மையினர் ஆணையம் 2016-17ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில், முஸ்லீம்களுக்கென அலிகார் முஸ்லிம் பல்கலை கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகங்கள் இருப்பது போல் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கென அரசு நிதியில் பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அது தவிர கிறிஸ்தவ சிறுபான்மையினர் நலனுக்கென 7 ஆண்டுகளுக்கான திட்டம் ஒன்றை வகுத்து அரசு அமுல் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கல்வியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட குழுக்களில் இடம் அளிக்க வேண்டும். நிபுணர் குழுக்களிலும் அவர்களுக்கு இடம் தரப்பட வேண்டியது அவசியம். கிறிஸ்தவர்களுக்கென தேசிய சிறுபான்மையினர் ஆணையம் வழங்கி உள்ள பரிந்துரைகள் அடங்கிய இந்த ஆண்டறிக்கை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது அவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரிந்துரை பற்றி கேட்ட போது, தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சையது காயோருல் ஹசன் ரிஸ்வி, கிறிஸ்தவர்களுக்கென தனிப் பல்கலைக் கழகம் அமைப்பதன் மூலம் கிறிஸ்தவர்களின் கல்வி அந்தஸ்து உயர்த்தப்படும் என கூறினார்.

இந்த பல்கலை கழகம் கிறிஸ்தவர்களுக்கென அமைக்கப்பட்டாலும் பிற சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடம் தர வேண்டும். அத்தகைய நிலை தான் அலிகார் மற்றும் ஜமியா மிலியா இஸ்லாமிய ஆகிய பல்கலை கழகங்களில் உள்ளது என தெரிவித்தார்.

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பின் ஒத்துழைப்புடன் அரசு நிதியில் கிறிஸ்தவ பல்கலை அமைக்கப்பட வேண்டும்

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 7 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களின் கல்வி குறித்த புள்ளிவிவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிறிஸ்தவ சிறுவர்களில் 74.34 சதவீதம் பேர் கல்வி கற்று வருகிறார்கள். இந்து சிறுவர்களில் 36.4 சதவீதமும் முஸ்லிம்களில் 42.72 சதவீதமும் சீக்கியர்களில் 32.49 சதவீதமும் புத்த மதத்தினரில் 28.17 சதவீதத்தினரும் கல்வி கற்கவில்லை எனவும் ரிஸ்வி தெரிவித்தார்.