ஆண்டாள் பற்றிய சர்ச்சைப் பேச்சு: கவிஞர் வைரமுத்து மீது நான்கு வழக்குகள் பதிவு

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2018 02:59

சென்னை,

ஆண்டாள் பற்றிய சர்ச்சைப் பேச்சு தொடர்பாக இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் சினிமா பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து மீது சென்னையில் மூன்று  போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்து முன்னணி நகரச் செயலாளர் சூரி அளித்த புகாரில் விருதுநகர்  போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

விருதுநகர், ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டாள் பற்றி வைரமுத்து தவறாகப் பேசியதாக பெரும் சர்ச்சைகள் கிளம்பின.
 பாஜ., செயலாளர் எச். ராஜா மற்றும் இந்து அமைப்புக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமின்றி வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தினர்.
‘அமெரிக்க ஆய்வாளர் ஒருவரது கருத்தைத்தான் தான் சொன்னதாகவும், அது தன்னுடைய சொந்த கருத்து இல்லை என்றும், யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தனக்கு இல்லை என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளாத இந்து அமைப்புக்கள் வைரமுத்துவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜபாளையத்தில் இந்து முன்னணி நகரச் செயலாளர் சூரி அளித்த புகாரில், ‘கடந்த 7ம் தேதி ராஜபாளையத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று பேசிய வைரமுத்து இந்து கடவுளான ஆண்டாள் குறித்துச் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஆண்டாளை அவமதிப்பு செய்த வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதனையடுத்து வைரமுத்து மீது விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னையில் கொளத்தூர், தாம்பரம், சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையங்களிலும் போலீசார்  வைரமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமுதாய நல்லிணக்க பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் அளித்த புகாரின் பேரில் வைரமுத்து மீதும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153 (மத மோதல் உருவாக்குதல்), 295 (ஏ) (மத உணர்வைத் தூண்டுதல்), 505 (2) -3 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) ஆகிய 3 பிரிவுகளில் கொளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் போலீஸ் நிலையத்திலும் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர்அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வைரமுத்து வீடு முற்றுகை

''ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசி, இந்துக்களின் மனதை புண்படுத்திய வைரமுத்து, ஆண்டாள் சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ''இல்லாவிட்டால், அவர் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, மயிலாப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர், பம்மல் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஒரு வாரம் அவகாசம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.