மக்களின் கவனத்தை திசை திருப்பவே சிதம்பரம் வீட்டில் சோதனை: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2018 02:37

லக்னோ,

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் புகார் பேட்டி குறித்த மக்களின் கவனத்தை திசை திருப்பவே காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை, புதுடில்லி வீடுகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனை நடத்தியது. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பேட்டி பற்றிய மக்களின் கவனத்தை திசை திருப்பவே என்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர். அகிலேஷ் கூறினார்.
மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் பாஜகவினர் கைத்தேர்ந்தவர்கள். உச்ச நீதிமன்றத்தின் மிக முக்கிய பிரச்சனை குறித்து நீதிபதிகள் நேற்று பேட்டி அளித்த நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் பண மோசடி வழக்கு தொடர்பாக ப சிதம்பரம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது என்றும் அகிலேஷ் தெரிவித்தார்.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் ‘கீழ்த் தரமானவர்’ என கூறியதை அரசியலாக்கி எப்படி கீழ்த் தரமான அரசியல் செய்தனரோ அதே போல தற்போதும் நடந்து கொண்டுள்ளனர் என்று அகிலேஷ் குறிப்பிட்டார்.

இந்திய தொழில்களை முடக்கும் ஜிஎஸ்டியை அமல்படுத்தியது, சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய முதலீடுக்கு அனுமதி அளித்திருப்பது ஆகியவற்றை செய்த பாஜ அரசுக்கு ‘சுதேசி இயக்கம்’ என்றால் என்னவென்று தெரியுமா என்று உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசியல் லாபத்துக்காக எந்த நேரமும் மத அரசியலை தூண்ட தயாராக இருக்கும் பாஜகவிடம் ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.