தாயைக் காப்போம், ஒரு தலைமுறையைக் காப்போம்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018

ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறப்பு. அதனால்தான் கர்ப்பகாலத்தில் தொடங்கி பிரசவ காலம், பாலூட்டும் காலம் ஆகியவற்றில் தாயான பெண்களின் உடல்நலனில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.

ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது அவள் மீது இடைவிடாத கவனம் செலுத்தப்படுகிறது. இப்பிடி நடக்காதே, இப்படி உட்காராதே, இப்படி நிற்காதே என விநாடிக்கொரு ’’கூடாது’’ பிறப்பிக்கப்படுகிறது.

ஆனால் குழந்தை பிறந்ததும் இந்தக் கவனத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்கிறார்கள்.

உண்மையில் கர்ப்ப காலத்தை விட தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் தான் பெண்களின் உடல்நலன் மீது கூடுதலான அறிவார்ந்த கவனம் தேவை என்பதை பலர் அறிவதில்லை.

தமிழ்நாட்டில் பிரசவம் முடிந்த பின் பெண்களை பச்சை உடம்புக்காரி என அழைப்பது வழக்கம். அதற்கு காரணம் பிரசவத்திற்கு பின் தாய்மார்களின் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு மிக எளிதாக நோய்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். எனவே குழந்தையுடன் தாய்மார்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதைத்தான் பச்சை உடம்புக்காரி என்ற இரட்டைச்சொல் குறிப்பிடுகிறது.

தாய்மார்களுக்கான உணவுமுறைகள் 

குழந்தை பிறந்த பின் முதல் 6 மாதகாலத்தில் சராசரியாக எல்லாப்பெண்களும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள். பெண்கள் அதிகளவில்  தாய்ப்பால் கொடுப்பதால் இந்தக் காலத்தில் நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 கிலோ காலரி சக்தியை இழக்கிறார்கள்.

தொடர்ந்து  7 முதல் 12 மாதங்களுக்கு தாய்பால் கொடுக்கும் பொழுது, தாய்ப்பால் அளவு குறைகிறது. ஆனாலும் நாள் ஒன்றுக்கு 400 கிலோ காலரி சக்தி செலவாகிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்கள் இழக்கும் சக்தியை நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகள் மூலம் ஈடுசெய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால் தாய்மார்களின் உடல்நலன் பாதிக்கப்படும். தாயைச் சார்ந்துள்ள குழந்தைகளின் உடல்நலனும் சேர்ந்து பாதிக்கப்படும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் முதல் 6 மாதங்களுக்கு வழக்கத்தைவிட 600 கிலோ காலரி தரும் உணவைக் கூடுதலாகச் சாப்பிட வேண்டும்.

அதே பார்முலா 6 மாதத்திற்குப் பின்னும் பின்பற்றப்பட வேண்டும். 6 மாதத்திற்குப் பின் நாள் ஒன்றுக்கு உணவில் கூடுதலாக 520 கிலோ காலரி இருக்க வேண்டும்.

இதற்காக தானியங்கள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள் பருப்பு வகைகளை தாய்மார்கள் சாப்பிடலாம். அதிகளவு காய்கறிகளையும், பழங்களையும் தாய்மார்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது முக்கியம்.
இரும்பு சத்து அதிகமுள்ள உணவுகளான கீரைகள், பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சைகள், தர்பூசணி, பனங்கற்கண்டு, பாதாம் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களுக்கு அதிகளவு கால்சியம் தேவை. எனவே பால், தயிர், மோர் ஆகியவற்றை உணவில் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதை தவிர கேழ்வரகு, மணத்தக்காளி கீரை, கருவேப்பிலை, மீன், நல்லெண்ணெய் போன்ற கால்சியம் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடவேண்டும்.

மேலும் வைட்டமின் சி நிறைந்த மாம்பழம், அன்னாசிபழம், நெல்லிக்காய் ஆகியவற்றையும் அதிகம் சாப்பிடவேண்டும்.

தாய்ப்பால் நன்கு சுரக்க வெந்தயம், பூண்டு, பாதாம், எள், சீரகம், முருங்கைகாய், காரட், போன்றவற்றை பெண்கள் உணவில் சேர்த்துக் வேண்டும்.

,மேலும் பெண்கள் அதிகளவு நீர் மற்றும் பழச்சாறு குடிக்க வேண்டியது அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பாலூட்டும் தாய்மார்கள் காப்பி குடிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைவாக அருந்த வேண்டும். ஏனென்றால் காப்பியில் இருக்கும் காஃபைன் என்ற வேதிப்பொருள் தாய்பால் சுரப்பதில் இடையூறு விளைவிக்கும். தாய்ப்பால் மூலம் குழந்தையின் வயிற்றில் சென்று எரிச்சலை உண்டு பண்ணும். குழந்தையின் தூக்கத்தை கெடுக்கும்.

பெண்களுக்கு மீன் மிகவும் சிறந்த உணவு. ஆனால் மீன்களை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சில மீன்களில் பாதரசம் அளவு அதிகமாக இருக்கும். இது தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடலில் சென்று அவர்களின் நரம்பு மண்டலங்களை பாதிக்கும். எனவே பாதரசம் அதிகம் கொண்ட கானாங்கெழுத்தி, சுறா போன்ற மீன்களை தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு வயிற்று எரிச்சல், வயிறு உப்புசம், சில நேரங்களில் வாந்தி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே பாலூட்டும் பெண்கள் மிகவும் காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது.

தாய்மார்கள் பாலூட்டும் சமயத்தில்  காய்கறிகளை சாப்பிடலாம். ஆனால் வாயுக்களை உருவாக்கும் முட்டைகோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இது தாய்மார்களுக்கும் குழந்தைக்கும் வாயு தொல்லைகளை ஏற்படுத்தலாம்.

அமிலத்தன்மை அதிகமுள்ள ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை குறைவாக சாப்பிடுவது நல்லது. அதிகளவில் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகளை ஏற்படுத்தலாம். மிகவும் ஆசையாக இருந்தால் மாம்பழம், அன்னாசிபழங்களை சாப்பிடலாம்.

பாலில் புரதம் அதிகமிருந்தாலும் பசும்பாலில் உள்ள புரதம் தாய் மற்றும் சேய்க்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். எனவே தாய்மார்கள் பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை அளவாக சாப்பிடுவது நல்லது. ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பால் சாப்பிட முடியாத நிலையில் புரதம் மற்றும் கால்சியத்தை ஈடுசெய்யும் வகையில் பயிறு வகைகள், தானியங்கள், கீரைகள், முட்டை, மீன் போன்றவற்றை தாய்மார்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க பெண்களுக்கு பூண்டு கொடுப்பது வழக்கம். பூண்டு உடல்நலனுக்கு நல்லது என்றாலும் அதிகளவில் உட்கொண்டால் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். எனவே பூண்டை அளவாக சேர்த்துக்கொள்வது நலம்.

சாக்லெட் மற்றும் இனிப்புகளை குறைவான அளவில் சாப்பிடவேண்டும். அதிகளவில் இனிப்புகள் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்பக்காலத்தில் பல பெண்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்தகொதிப்பு வரக்கூடும்.. எனவே பிரசவத்திற்கு பின் பெண்கள் தங்கள் உடலை நன்கு பரிசோதித்து அதற்கேற்ப இனிப்புகள் மற்றும் உப்பின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். சர்க்கரை நோய் உள்ள பெண்கள் செயற்கை இனிப்பூட்டிகளை குறைத்துக் கொள்வது நலம்.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப்பொருட்களை கண்டறிந்து அதை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக சில குழந்தைகளுக்கு கோதுமையில் உள்ள குளூட்டன் என்ற புரதம் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். அப்போது தாய்மார்கள் கோதுமை நிறைந்த உணவுகளைத் தொடக் கூடாது.

அசைவ உணவுகளை சாப்பிடும் போது மிகவும் கொழுப்பு அதிகமுள்ள மாமிசத்தை பாலூட்டும் பெண்கள் சாப்பிடக்கூடாது. நன்கு வேகவைத்த கோழி இறைச்சி, ஈரல், மீன், முட்டை ஆகியவற்றை சாப்பிடலாம். மேலும் எண்ணெயில் வறுத்த உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.

இதை தவிர பாலூட்டும் பெண்கள் ஆல்கஹால் நிறைந்த உணவுப்பொருட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உணவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் விவரங்களை வெளியே ஒட்டியுள்ள அட்டையில் நன்கு படித்தபின் சாப்பிட வேண்டும்.

பாக்கெட் உணவுகளில் உள்ள ரசாயனங்கள் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அவற்றை சாப்பிடாமல் இருப்பது நலம்.

மேலும் தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைக்கு பின்புதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் மாத்திரையின் பக்கவிளைவு குழந்தைகளையும் பாதிக்கும். எனவே தாய்மார்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

குடும்பத்தினரின் அக்கறை தேவை

பிரசவத்திற்கு பின் பெண்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள். முதல் மூன்று மாதங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்பால் கொடுக்க வேண்டும். அடிக்கடி குழந்தை பால் குடித்தால்தான் பால் சுரப்பு தூண்டப்படும். அதனால் அவர்களுக்கு போதிய உறக்கம் கிடைக்காமல் போகலாம். அதிக வேலைப்பளு இருந்தால் அவர்களின் உடல்நலன் பாதிக்கும். அது தாய்ப்பால் சுரப்பதையும் குறைத்துவிடும்.எனவே பிரவசத்திற்கு பின்பும் அந்த தாய்க்கு அவளது குடும்பத்தினர் வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும். வீட்டு வேலைகளை பகிர்ந்துகொண்டு அப்பெண் தூங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் நேரம் கொடுக்க வேண்டும்.

தனிக்குடித்தனம் அல்லது வெளிநாடுகளில் உள்ள பெண்களுக்கு உறவினர்கள் உடன் இல்லாமல் போகலாம். மேலும் வேலைக்கு செல்லவேண்டிய நிலையில் பெண்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் அழுத்தம் அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் கணவன்மார்கள் கவுரவம் பார்க்காமல் வீட்டு வேலைகளிலும் குழந்தை பராமரிப்பிலும் தங்களை கட்டாயம் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.பிரசவத்திற்கு பின்னர் சில பெண்கள் மன அழுத்ததால் பாதிக்கப்படுவர். அப்போது அந்த பெண்ணுக்கு அவளது குடும்பத்தினரின் ஆதரவு மிக அவசியம். அந்த பெண்ணுக்கு வேண்டிய தைரியமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறந்த மனநல ஆலோசகரிடம் கூட்டிச் செல்வது நலம்.

உடற்பயிற்சி அவசியம்

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடல் எடை மற்றும் ஊளைச் சதை அதிகரிக்கும். பிரவசத்திற்கு பின் உடற்பயிற்சி  மூலம் அவற்றை குறைக்க வேண்டும். மேலும் பிரசவகாலத்தில் ஏற்படும் சில தசைபிடிப்புகள், மூட்டு வலி, முதுகு வலி ஆகியவற்றை குறைக்கவும் உடற்பயிற்சி, யோகா உதவும்.

உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்யும் முன் அவற்றை குறித்து நிபுணர்களிடம் ஆலோசிப்பது அவசியம். ஏனோதானோ என்று இஷ்டத்திற்கு உடற்பயிற்சிகளை செய்ய கூடாது.

பெண்கள் அதிகம் தாய்ப்பால் கொடுத்தால் உடல் எடை குறையும் என்ற பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் முதல் 6 மாதங்கள் வரை எடை பெரிதாக குறையாது. இருப்பினும் உடற்பயிற்சி செய்வது நலம்.

குழந்தை தாய்ப்பாலுடன் வேறு உணவுகளை சாப்பிட துவங்கிய பின்பு தான் பெண்களுக்கு உடல் எடை நன்கு குறையும். எனவே முதல் ஆறு மாதங்களிலேயே உடல் எடை சீராக வேண்டும் என அதிகளவு உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள கூடாது. அது பால் சுரப்பதை குறைப்பதோடு பெண்களின் உடலை பலவீனமடைய செய்யும். எனவே பெண்களுக்கு கவனம் மற்றும் பொறுமை அவசியம்.

 

 

   


கட்டுரையாளர்: நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation