ட்ரம்ப் வழக்கறிஞர் செக்ஸ் பட நடிகைக்கு 1.30 லட்சம் டாலர் கொடுத்ததாக புகார்

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2018 02:17

வாஷிங்டன்,

செக்ஸ் நடிகை ஒருவருடன் தனக்கிருந்த தொடர்பு பற்றிய செய்தியை யாரிடமும் அவர் கூறாமலிருக்க அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சமயத்தில் ட்ரம்ப் பணம் கொடுத்ததாக புகார் மீண்டும் கிளம்பி உள்ளது.

வழக்கறிஞர் ஒருவர் மூலம் அந்த நடிகை பணம் வாங்கினார் என்றும் செய்தி வெளியானது. இந்தச் செய்தியை அந்த வழக்கறிஞரும் நடிகையும் மறுத்துள்ளனர்.

அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்ட இந்த செய்திக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் செக்ஸ் பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோகென் இதனை அநாகரீகமான குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

என்னுடைய கட்சிக்காரர் மீது இரண்டாவது முறையாக இது போன்று அநாகரீகமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த பொய்யான கட்டுக்கதையை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு முதலே அனைத்து கட்சியினரும் இந்த கதையை நம்ப மறுத்து விட்டனர். என்று வழக்கறிஞர் கோகென் தெரிவித்தார்.

கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் பிரபல டோஹ் ஏரியில் கோல்ஃப் போட்டிகள் நடந்த போது அதிபர் ட்ரம்பும் செக்ஸ் பட நடிகை ஸ்டெஃபானி கிளிஃபோர்டும் தொடர்பில் இருந்ததாக பத்திரிகை செய்தியில் கூறப்பட்டது.

அதிபர் தேர்தலுக்கு முன் வெளிவந்த, வன்மையாக மறுக்கப்பட்ட கட்டுரையை மீண்டும் வெளியிட்டு அரைத்த மாவையே அந்த பத்திரிகை அரைத்துள்ளது என அதிபர் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ‘நியூயார்க் டெய்லி நியூஸ்’ என்ற தினசரி வெளியிட்டுள்ள செய்தியில், ட்ரம்ப் உடன் தனக்கு எந்த விதமான செக்ஸ் தொடர்போ அல்லது காதல் விவகாரமோ இல்லை என மறுப்பு தெரிவித்து ‘ஸ்டார்மி டேனியல்’ என்ற பெயரில் கையெழுத்திட்ட 2 பத்திகள் கொண்ட கட்டுரை ஒன்றை இ-மெயில் மூலம் நடிகை கிளிஃபோர்டு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது.

மெலானியா- ட்ரம்ப் திருமணம் 2005ல் நடந்தது. ஆனால் நடிகை கிளிஃபோர்டு சமபந்தப்பட்ட சம்பவம் 2006ல் நடந்ததாக செய்தி வெளியானது. மெலானியாவுக்கு உண்மையான கணவராக ட்ரம்ப் இருக்கவில்லை என்ற புகாரும் எழுந்ததால் அந்த பிரச்சினை முழுக்க அமுக்க பணம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.