ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு மற்றொரு நெருக்கடி: மோதல் போக்கில் டிரம்ப்-ஈரான்

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2018 02:03

வாஷிங்டன்,

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்கா பரிந்துரைக்கும் திருத்தங்களை சேர்க்க இதுதான் கடைசி வாய்ப்பு. புதிய திருத்தங்களை சேர்த்தால்தான் நீட்டிப்பு ஒப்பந்த மசோதாவில் கையெழுத்து போடுவேன்  என டிரம்ப கூறியுள்ளார். அந்த திருத்தங்களை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான், அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதாக கூறி அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அந்த பொருளாதார தடைகளை நீக்குவதற்காக அமெரிக்கா, ஈரான் மற்றும் 5 ஐரோப்பிய நாடுகளின் ஒருங்கிணைப்பில் 2015ம் ஆண்டு ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது. அதற்கு பதிலாக ஈரான் மீதுள்ள தடைகள் விலக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரானும் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருக்க புதுப்பிப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திடவேண்டும்.

ஆனால் இதில் கையெழுத்திடவேண்டு என்றால் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் முக்கியமான 4 திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஈரானில் உள்ள அனைத்து தளங்களையும் சோதனையிடுவது, ஈரான் அணு ஆயுத சோதனையில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பது, ஈரான் ஒப்பந்தத்தை மீறினால் அமெரிக்கா உடனடியாக தடைகளை விதிக்க அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார்.

‘‘அடுத்த 120 நாட்களுக்குள் இந்த 4 திருத்தங்களை ஒப்பந்தத்தில் சேர்க்க அமெரிக்காவின் கூட்டணி ஐரோப்பிய நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும். ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படாமல் இருக்க இதுவே கடைசி வாய்ப்பு’’ என டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தை மீறி ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதை தொடர்ந்து ஈரானை சேர்ந்த தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பை ஏற்கமுடியாது என ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் புதிதாக எந்த திருத்தங்களையும் ஏற்க முடியாது என ஈரான் வெளியுறவு அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோதல் பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பும் உள்ளது.