பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மற்றும் சீனா முன்னுதாரணமாக திகழ்கின்றன : ஐநா பாராட்டு

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2018 01:52

நியூயார்க்,

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியாவும் சீனாவும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக ஐநா பொதுசெயலாளர் ஆண்டோனியோ கட்டாரஸ் பாராட்டியுள்ளார்.

நேற்று ஐநாவில் ஜி77 அமைப்பின் தலைமை பொறுப்பை ஈகுவேடாரிடம் இருந்து எகிப்துக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ கட்டாரெஸ் ‘‘பருவைலை மாற்றத்தால் நாம் வீழ்ந்துவிடக்கூடாது. ஆனால் அதேசமயம் இந்த போரில் நாம் வெற்றிபெறும் நிலையில் இல்லை என கூறினார். அவரது உரையின் விவரம் :
மாறிவரும் பருவநிலையால் உலக நாடுகளில் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆனால் எனக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் பருவநிலை மாற்றத்தால அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ஜி77 நாடுகள் தான். ஆப்பரிக்கா நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி, கடல் மட்டம் உயருவதால் சில தீவுகளில் ஏற்பட்ட சூறாவளி தாக்குதல்கள் ஆகியவை இதற்கான உதாரணங்கள்.

ஆனால் அதேசமயம் ஜி77 நாடுகளில் உலகின் பெரிய பொருளாதார சக்திகளாக விளங்கும் இந்தியாவும் சீனாவும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அவர்களின் அர்ப்பணிப்பால் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகள் தோல்வியடைந்து வரும் நிலையில் இந்தியாவும் சீனாவும் இந்த விஷயத்தில் மற்ற நாடுகளுக்கு தலைமை வகித்து வருகின்றன.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இந்த அச்சுறுத்தல்களை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என ஆண்டோனியோ கட்டாரெஸ் தெரிவித்தார்.