பிரிட்டன் பாராளுமன்ற நிழல் அமைச்சரவையில் முதல் சீக்கிய பெண் எம்பி

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2018 01:47

லண்டன்

பிரிட்டன் பாராளுமன்றத்தின் முதல் சீக்கிய பெண் உறுப்பினர் ப்ரீத் கவுர் கில்-ஐ, நிழல் அமைச்சராக எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின் இன்று நியமனம் செய்துள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தங்களிடம் உள்ள மூத்த உறுப்பினர்களை தங்கள் நிழல் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளலாம். நிழல் அமைச்சரவை என்பது ஆளும் கட்சியில் உள்ள அமைச்சரவையை போன்றே அனைத்து துறைகளிலும் இயங்கும்.
இந்த நிழல் அமைச்சர்களுக்கு தங்கள் துறைப்பணிகள் குறித்து கேள்வி கேட்க அதிகாரம் உண்டு. இதன்மூலம் எதிர்கட்சி ஒரு மாற்று அரசாங்கத்தின் பிரதிபலிப்பாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரீத் கவுர் கில் (வயது 44) பிர்மிங்கம் எட்பாஸ்டன் தொகுதியில் போட்டியிட்டு வென்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரானார். கடந்த ஜூலை மாதம் உள்விவகாரத்துறை தேர்வுக்குழுவில் தேர்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது நிழல் அமைச்சரவையில், சர்வதேச வளர்ச்சிக்கான நிழல் அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருடன் கிளைவ் லூவிஸ்-ஐ கருவூல நிழல் அமைச்சராகவும், ஜாக் ட்ராமேவை ஓய்வூதிய நிழல் அமைச்சராகவும், கரண் லீ தீயணைப்புத்துறை நிழல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நியமனங்கள் குறித்து பேசிய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின்,”எங்கள் தொழிலாளர் கட்சி மாற்று அரசை பிரதிபலிக்கும் விதமாக நிழல் அமைச்சர்களை நியமனம் செய்துள்ளோம். அவர்களுடன் பணியாற்ற ஆவலாக காத்திருக்கின்றேன் என்றார், இந்த நிழல் அரசாங்கம் சிலருக்கு மட்டும் மாற்று அரசாங்கமாக இல்லாமல், அனைவருக்குமான ஒரு அரசாங்கமாக மாறப் பாடுபடுவோம்” என்று ஜெரிமி கார்பின் கூறினார்.