இலங்கை காங்கேசன் துறைமுக மேம்பாட்டிற்கு 4.5 கோடி டாலர் இந்தியா உதவி

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018 03:50

கொழும்பு,

    இலங்கையின் வட பகுதியில் உள்ள காங்கேசன் துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவதற்கும் கடல் சார்ந்த நடவடிக்கைகளுக்கான மையமாக அபிவிருத்தி செய்யவும் 4.52 கோடி டாலர் உதவி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுடில்லியில் ஜனவரி 10ம் தேதி கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி மேலாண்மை இயக்குநர் டேவிட் ரஸ்குயின்காவும் இலங்கை கருவூலத்துறை செயலாளர் சமர துங்காவும் கையெழுத்திட்டனர்.
இந்தியா ஏற்கனவே வழங்கிய மானிய உதவிகள் மூலமாக காங்கேசன் துறைமுகத்தில் பல மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மொத்தம் 6 மேம்பாட்டு பணிகளை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

அதில் 4 பணிகள் இந்திய மானிய உதவியால் நிறைவேற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள 2 மேம்பாட்டு பணிகளை நிறைவேற்ற 4.52 கோடி டாலர் (இலங்கை ரூபாய் 690 கோடி) பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

இலங்கையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவ இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்பதையே இந்த புதிய ஒப்பந்தம் தெளிவு படுத்துகிறது என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.