ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்கள்: விசாரணை ஆணையத்தில் அப்போலோ தாக்கல்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018 03:24

சென்னை,

ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று தாக்கல் செய்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மஹால் கட்டிடத்தில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று தாக்கல் செய்தது. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் 2 பெரிய பெட்டிகளில் கொண்டு வரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் சுவாமிநாதன் இன்று ஆஜரானார். சிகிச்சை தொடர்பாக விளக்கம் தந்தார். ஜெயலலிதாவின் இதயம் செயலிழந்த போது அவருக்கு சிகிச்சை அளித்தவர் தான் மருத்துவர் சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு அப்போலோ நிர்வாகம் 2 வார கால அவகாசம் கோரியிருந்தது. இதனை ஏற்ற விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஜனவரி 12 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டு இருந்தது.