தன்மானத்தையும், வீரத்தையும் விட்டு விடவில்லை: எச். ராஜாவுக்கு பாரதிராஜா கடும் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018 02:48

சென்னை, 

“தமிழை ஆண்டாள்” விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை கடுமையான வார்த்தைகளால் மிக இழிவாக விமர்சித்துள்ள பாஜக தேசியச் செயலர் எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, ஆயுதத்தை மறந்துவிட்டோமே தவிர தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் விட்டு விடவில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து வெளிப்படுத்திய கருத்துக்கு கடந்த சில தினங்களாக பல விவாதங்களை உருவாக்கியது. அதன் நீட்சியாகப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. வைரமுத்து தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் தமிழகக் கலாசாரங்களைப் பதிவு செய்திருக்கும் சேவையையும் மறந்துவிட்டு, அவரை இழிசொல்லால் சிலர் விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்தப் பிரச்னையைத் தொடங்கிவைத்த எச். ராஜாவுக்கும் சேர்த்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

எங்கள் வம்சாவழி, எங்கள் உணர்ச்சிகளின், வடிகாலே ஆயுதங்கள்தான்.

காலமாற்றமும்,  விழிப்புணர்வும்தான் எங்களை ஆயுதக் கலாசாரத்திலிருந்து மாற்றிவைத்தது.

கவிப்பேரரசு வைரமுத்துவை நீ பேசவில்லை. எங்கள் தாய்வழி சகோதர, சகோதரிகளை, எங்கள் தொப்புள் கொடி உறவுகளைக் கொச்சைப்படுத்தி விட்டாய்.

உன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது. தமிழ் உணர்வுகளைச் சிதைத்தது. நீ, தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டாய். பஞ்சைப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ. நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமே யொழிய தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை.

எச்சரிக்கை!

மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்துக்கு ஆளாக்கி விடாதே!

இப்படித்  தவறாகப்  பேசுபவர்களுக்கு உடனிருக்கும் நல்ல தமிழ்த் தலைவர்கள் பாடம் புகட்டக் கடமைப்பட்டவர்கள் என்பதை இந்த அறிக்கையின் மூலமாகப் பதிவு செய்கிறேன்.

என் இனிய தமிழ் மக்களே! தமிழகத்தில், தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாள்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம் என்னை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தின் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள்.

இன்று, நம் கொடுப்பினை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன், கவிப்பேரசு வைரமுத்து அவர்கள் தமிழைத் திசைகள்தோறும் தெரியப்படுத்தியவர். கவிப்பேரரசு வைரமுத்து  இந்திய அரசின் “பத்மஸ்ரீ”, “பத்மபூஷண்”, “சாகித்ய அகாடமி” என தன் படைப்புகளால் தமிழை உலக உச்சிக்குக் கொண்டுபோன பெருமைக்குரிய தமிழன். மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்றால், கவிப்பேரரசு வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை இழிசொற்களால் எப்படிப் பேசலாம்?

வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல; தமிழனத்தின் பெரும் அடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு படைப்பாளன் தன் கருத்துகளைச் சொல்லலாம். இல்லை, மேற்கோள் காட்டலாம் அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக்கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை.

எளிய, ஏழைக்குடும்பத்தில் பிறந்து தமிழை 23 மொழிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தவரை எப்படி உன்னால் பேச முடிகிறது. வைரமுத்துவின் படைப்புகளைப் படித்து, ஆராய்ச்சி செய்து நிறைய பேர் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்கள். அவரின் படைப்புகளைப் பல கல்லூரி, பல்கலைக் கழகங்கள் பாடமாக வைத்திருக்கிறார்கள். அவரது உழைப்பையும், முயற்சியையும் பார்த்து எத்தனையோ இளைஞர்கள் முன்னுக்குவர, நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு ஓர் வழிகாட்டியாக வாழும் ஒரு மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் எப்படிப் பேசமுடியும்? உன்னைப் போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்பட போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது. கவனமாகப் பேசுங்கள் ராசாவே. உன்னைப்போல நிறைய மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து போல சில நல்ல அடையாளங்கள் தான் இருக்கிறது.

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடைதோறும், முழங்கி அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை எப்படி நரம்பில்லாமல் ஒருவன் பேசுவது?

எச். ராசாவே, நீ பேசியது அநாகரிகத்தின் உச்சம். ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளை எளிய மனிதனுக்கும் புரியும் விதத்தில் பேசிய கவிஞனின் பிறப்பை இழிசொல்லால் இழிவுப்படுத்திவிட்டாய். வைணவத்தைத் தமிழாக்கிய திருப்பாவையை, கருவறையிலிருந்து தெருவுக்குக் கொண்டுவந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா? எச். ராசாவே திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ் என்பதை உணர்ந்துகொள்.

கொண்டாட வேண்டிய ஒரு கவிஞனை அநாகரிகமாய் பேசும் ராசாவே, இப்படி பேச உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

உன்னால் தமிழினத்துக்கு வைரமுத்து போல இலக்கியம் படைக்க முடியுமா? சோர்ந்து கிடக்கும் மனிதர்களைத் தட்டி எழுப்ப ஒரே ஒரு பாடல் எழுத முடியுமா? அடையாளப்படுத்தப்பட்ட தமிழனை அழிக்க நினைக்காதே. 

இவ்வாறு, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.