உச்சநீதிமன்ற நீதிபதிகள் புகார் பேட்டி: தலையிடுவதில்லை என அரசு முடிவு

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018 02:11

புதுடில்லி,

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம், உச்ச நீதிமன்றம் நன்றாக இல்லை, ஜனநாயகம் இல்லை என்று கூறிய பேட்டி விவகாரத்தில் தலையிடுவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பேட்டி பற்றிய விவரங்கள் வெளியானதும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை அழைத்து பேசினார். விவரங்களை யாரும் தெரிவிக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க, நான்கு நீதிபதிகள் பேட்டி முடிவடைந்ததும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

ஆனால், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அரசு தலைமை வழக்கறிஞர் கே. கே. வேணுகோபாலை அழைத்தார். இருவரும் சந்தித்து பேசினார்கள். அரசின் கருத்து என்ன என்பதை கே.கே. வேணுகோபால் தலைமை நீதிபதியிடம் தெரிவித்திருக்க வாய்ப்பு உள்ளது.

உச்ச நீதிமன்ற நிர்வாகம் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நடைமுறைப் பிரச்சனைகள் பற்றியே 4 நீதிபதிகளும் கவலை தெரிவித்துள்ளனர். இது முழுக்க முழுக்க நிர்வாகப் பிரச்சனை. அரசின் தலையீட்டுக்கோ, அரசியல் தலையீட்டுக்கோ இடமே இல்லை. எனவே தலைமை நீதிபதி தான் விரும்பும் வகையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதே பொருத்தமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பிறகே அரசும் தலைமை நீதிபதியும் அமைதி காக்கத் தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்ற 4 நீதிபதிகளின் பேட்டி சுனாமி போன்ற பேரலைகளை அகில இந்திய அளவில் தோற்றுவித்துள்ளது.

ஏதோ பெரிதாக நடந்திருக்கிற வேண்டும். அதனால் தான் 4 நீதிபதிகளைச் செய்தியாளர்கள் சந்தித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

என்ன இருந்தாலும் நீதித்துறையினர் புகார் அளித்திருக்கக் கூடாது என்று கூறினார்கள்.

நான்கு நீதிபதிகளும் பேசியதைக் குறை குறுவதால் எந்த பயனும் இல்லை. பிரதமர் நான்கு நீதிபதிகளிடமும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் தனித்தனியாகப் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண்பதே பொருத்தமாக அமையும் என்று பாஜ எம்பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகள் பிரச்சனையைச் சீர்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளன.