உலகின் வழிகாட்டியாக இந்தியா மீண்டும் உருவாக பணியாற்ற ராஜ்நாத் சிங் அழைப்பு

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018 01:06

உலக நாடுகள் அனைத்திற்கும் வழிகாட்டியாக இந்தியாவை மீண்டும் உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கேட்டுக்கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குஜராத் பிரானசாலா கிராமத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதில், “இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாக வைத்து செயல்படாமல், உலகத்திற்கே வழிகாட்டியாக மீண்டும் இந்திய நாட்டை உருவாக்க வேண்டும். அதற்காக மக்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்” என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

வேதிக் மிஷன் அறக்கட்டளை சார்பில் “ராஷ்டிரிய கதா ஷிபிர்” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஸ்வாமி தர்மபந்து நடத்தினார். இவரை புகழ்ந்து பேசிய ராஜ்நாத் சிங்,”இது போன்ற  நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. தேசிய கலாச்சாரம் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஸ்வாமி தர்மபந்து மிகவும் நல்ல வேலையை செய்துள்ளார்” என்று கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியோடு வருங்காலத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக திகழும் என்பதில் ஐயமில்லை என்று ராஜ்நாத் சிங் பெருமையுடன் கூறினார்.