வருமுன் காக்குமா?

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018

தமிழ்­நாடு முழு­வ­தும் போக்­கு­வ­ரத்து தொழி­லா­ளர்­க­ளின் வேலை நிறுத்­தம் 8 நாட்­க­ளுக்­கும் மேலாக இந்த கட்­டுரை எழு­தும் வரை தொடர்ந்­தது. இதன் மூலம் பொது­மக்­க­ளும், மாணவ – மாண­வி­க­ளும் பெரு­ம­ளவு பாதிப்­புக்கு ஆளா­னார்­கள். சென்ற வியா­ழக்­கி­ழமை அர­சுக்­கும், போக்­கு­வ­ரத்து தொழி­லா­ளர்­க­ளுக்­கும் இடையே உள்ள ஊதிய உயர்வு முரண்­பாட்டு பிரச்­னையை தீர்த்து வைக்க ஓய்வு பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி பத்­ம­நா­பன் மத்­தி­யஸ்­த­ராக நிய­மித்து உயர்­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கடந்த சில மாதங்­க­ளா­கவே, அடிக்­கடி போக்­கு­வ­ரத்து தொழி­லா­ளர்­கள் திடீர், திடீ­ரென வேலை நிறுத்­தத்­தில் ஈடு­பட்டு வந்­த­னர். அப்­போ­தெல்­லாம் அர­சுத் தரப்பு பேச்­சுக்­கள் நடத்தி இடைக்­கால தீர்­வை­யும், விரை­வில் முழு கோரிக்­கை­க­ளை­யும் நிறை­வேற்­று­வோம் என்ற உறுதி மொழி­யை­யும் வழங்­கும். அதை ஏற்று தொழி­லா­ளர்­கள் பணிக்­குத் திரும்­பு­வார்­கள். ஆனால், அரசு தந்த கெடு­வுக்­குள் எது­வும் நடக்­கா­த­தால் மீண்­டும் வேலை நிறுத்­தத்தை தொடங்கி விடு­வார்­கள். அதி­லும் கடந்த ஒரு மாதத்­தில், எந்­த­வித அறி­விப்­பும் இன்றி, திடீர், திடீ­ரென வேலை நிறுத்­தத்தை தொடங்­கி­வி­டு­வார்­கள். ஓடு­கிற பஸ்­ஸில் உள்ள பய­ணி­களை இறக்கி விட்டு விடு­வார்­கள். டெப்­போக்­க­ளில் பஸ்ஸை நிறுத்­தி­விட்­டுச் சென்று விடு­வார்­கள். இத­னால் ஏரா­ள­மான பொது­மக்­க­ளும், மாணவ – மாண­வி­ய­ரும் பெரும் அவ­திக்கு ஆளா­வார்­கள். இது­போன்ற நிலைமை உரு­வா­கா­மல் இருக்க அரசு உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும். எந்­த­வொரு பிரச்னை ஆனா­லும் வரும் முன் காப்­பதே நல்­லது.

கடந்த பல ஆண்­டு­க­ளா­கவே போக்­கு­வ­ரத்து துறை பெரும் நஷ்­டத்­தில்­தான் இயங்கி வரு­கி­றது. அர­சாங்­கம் லாப நோக்­கின்றி, சேவை மனப்­பான்­மை­யோடு பஸ்­களை இயக்­கு­வ­தால், போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­கள் தொடர் நஷ்­டத்­திற்கு ஆளாகி வரு­வது உண்­மை­தான். சரி­யான திட்­ட­மி­டு­த­லு­டன் இந்த தொடர் நஷ்­டங்­களை சரிப்­ப­டுத்த ஒரு குழு அமைத்து அதை முறை­யாக அமல்­ப­டுத்­திட வேண்­டும். ஏற்­கெ­னவே, கடந்த 10 ஆண்­டு­க­ளுக்கு முன்பு போக்­கு­வ­ரத்து துறை உயர் அதி­கா­ரி­கள், நிதி நெருக்­க­டியை சமா­ளிக்­க­வும், போக்­கு­வ­ரத்து துறை­யின் வரு­வா­யைப் பெருக்­க­வும் பல்­வேறு ஆலோ­சனை கொடுத்து, அது கண்டு கொள்­ளப்­ப­டா­மலே இருந்­துள்­ளது. கணி­ச­மான கட்­டண உயர்வு, அல்­லது அதற்­கான தொகையை அரசு, போக்­கு­வ­ரத்து கழ­கங்­க­ளுக்கு தரு­வது.

போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளுக்கு சொந்­த­மான இடங்­க­ளில் வணிக வளா­கங்­களை கட்டி வரு­வா­யைப் பெருக்­கு­வது, பெரிய நக­ரங்­க­ளில் நெடுஞ்­சா­லை­களை ஒட்­டி­யுள்ள இடங்­க­ளில் ஹோட்­டல்­கள் அமைப்­பது, சிக்­கன நட­வ­டிக்­கை­யாக தேவை­யற்ற பத­வி­களை நீக்­கு­வது, பணிக்கு வராத தொழிற்­சங்­கத்­தி­னர் மீது நட­வ­டிக்கை எடுப்­பது என்­பது உள்­ளிட்ட ஆலோ­ச­னை­களை அர­சுக்கு வழங்­கி­யும், இதன்­மீது எந்த நட­வ­டிக்­கை­க­ளை­யும் அரசு எடுக்­க­வில்லை.

இத­னால்­தான் போக்­கு­வ­ரத்து கழ­கங்­கள் நஷ்­டத்­தில் இங்­கும் நிலை தொடர்­கி­றது. போக்­கு­வ­ரத்­து­துறை அமைச்­சர், கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சட்­ட­ச­பை­யில் பேசும்­போது, தின­மும் 9 கோடி ரூபாய் வரை நஷ்­டம் ஏற்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்­ளார். மக்­கள் அடர்த்தி அற்ற கிரா­மப்­ப­கு­தி­க­ளுக்கு அந்த மக்­க­ளின் தேவைக்­காக பஸ்­கள் இயக்­கு­வ­தால்­தான் இந்த நஷ்­டம் என்­கி­றார்.

சுமார் 50 கிலோ­மீட்­டர் தூரம் உள்ள ஒரு குக்­கி­ரா­மத்­துக்கு சென்று வரும் ஒரு பஸ்­ஸின் மொத்த வரு­வாயே நாள் ஒன்­றுக்கு 72 ரூபாய் அள­வுக்­கு­தான் இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் கூறு­கி­றார். இத­னால்­தான் எளி­தில் தீர்க்க முடி­யாத அள­வுக்கு சிக்­கல்­க­ளும், பிரச்­னை­க­ளும் உரு­வா­கி­யுள்­ளன.

2001ம் ஆண்டு முதல் போக்­கு­வ­ரத்து தொழி­லா­ளர்­க­ளி­டம் பிடித்­தம் செய்த பணத்தை சம்­பந்­தப்­பட்ட பிரி­வு­க­ளில் செலுத்­தா­மல் நிர்­வா­கச் செல­வுக்கு பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். ஆரம்ப கட்­டத்­தில் இதற்கு தொழிற்­சங்­கங்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­த­போது, அரசு இந்த தொகையை உட­னுக்­கு­டன் செலுத்­தி­வி­டும் என்று தெரி­வித்­துள்­ள­னர்.

ஆனால், அப்­ப­டிச் செலுத்­தா­த­தால் அந்த தொகை கடந்த 15 ஆண்­டு­க­ளில் 7 ஆயி­ரம் கோடி­யாக உயர்ந்­து­விட்­டது. ஆரம்ப நாட்­க­ளி­லேயே இந்த தொகை 100 கோடி 200 கோடி என்று இருக்­கும்­போதே தொழிற்­சங்­கங்­கள் உரத்த குரல் எழுப்பி, போராட்­டங்­களை முன்­னெ­டுத்து தொழி­லா­ளர்­க­ளின் பணத்தை நிர்­வா­கச் செல­வுக்கு எடுக்க விடா­மல் தடுத்­தி­ருக்க வேண்­டும். அப்­ப­டிச் செய்­யா­த­தால், இன்று போக்­கு­வ­ரத்து கழ­கத்­துக்கு பெரும் நிதிச்­சுமை ஏற்­பட்­டுள்­ளது. அர­சுத்­த­ரப்­பும், அப்­போ­தைக்கு எழும் பிரச்­னைக்கு இடைக்­கால தீர்வு கிடைத்­தால் போதும் என்ற மனப்­போக்­கில் செயல்­பட்­டுள்­ளது. இது சரி­யான அணு­கு­முறை ஆகாது.

இன்று போராட்­டக் களத்­தில் உள்ள போக்­கு­வ­ரத்து தொழி­லா­ளர்­கள், தங்­க­ளுக்கு அர­சின் மற்ற துறை­க­ளில் வேன்­கள், ஜீப் உள்­ளிட்ட வாக­னங்­களை ஓட்­டும் டிரை­வர்­க­ளுக்கு இணை­யான சம்­ப­ளம் வழங்­கா­தது ஏன்? என கேள்வி எழுப்­பு­கின்­ற­னர். தற்­போது அவர்­க­ளுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்­கப்­பட்­டள்ள நிலை­யில் தங்­க­ளுக்கு 2.44 மடங்­கு­மட்­டுமே ஊதிய உயர்வு வழங்­கு­வதை ஏற்க முடி­யாது என்­கின்­ற­னர்.

அர­சாங்­கத்­துக்கு ஏராள நிதிச்­சுமை இருந்த போதும், ஓர­ளவு முடிந்­த­வ­கை­யில் படிப்­ப­டி­யாக தொழி­லா­ளர்­க­ளுக்கு தர­வேண்­டிய தொகையை வழங்கி வரு­வ­தாக முத­ல­ மைச்­ச­ரும், துறை அமைச்­ச­ரும் தெரி­விக்­கின்­ற­னர். சென்ற புத­னன்று விதி 110–ன் கீழ் சட்­ட­ச­பை­யில் அறிக்கை அளித்த முதல்­வர் இ.பி.எஸ் ஓய்­வு­திய தொகைக்­காக 750 கோடி ரூபாய் அரசு வழங்­கும் என அறி­வித்து, இதை ஏற்று அனை­வ­ரும் பணிக்கு திரும்ப வேண்­டும் என கேட்­டுக் கொண்­டுள்­ளார்.  

இது குறித்து முத­ல­மைச்­சர் நேர­டி­யாக தொழிற்­சங்­கத்­தி­ன­ரு­டன் பேசி தீர்­வு­காண வேண்­டும் என எதிர்க்­கட்­சித் தலை­வர் ஸ்டாலின் கூறு­கி­றார். அமைச்­சர்­கள், அதி­கா­ரி­கள் மட்­டத்­தில் 23 முறை பேச்­சுக்­கள் நடத்­தப்­பட்­டு­விட்­ட­தாக கூறிய முத­ல­மைச்­சர், அமைச்­சர் மட்­டுமே 11 முறை பேச்­சுக்­கள் நடத்­தி­ய­தா­க­வும், அப்­போது ஒவ்­வொரு முறை­யும் தம்­மி­டம் ஆலோ­சனை நடத்­தி ­விட்­டுத்­தான் தமது கருத்­துக்­கி­ணங்க பேச்­சுக்­கள் நடத்தி முடி­வு­களை அமைச்­சர் அறி­விப்­ப­தா­க­வும் கூறி­ய­து­டன், அர­சின் இந்த முடிவை ஏற்று போக்­கு­வ­ரத்து தொழி­லா­ளர்­க­ளின் வேலை நிறுத்­தத்தை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், மற்ற சங்க நிர்­வா­கி­க­ளும் முடி­வுக்கு கொண்­டு­வர வேண்­டும் என கேட்­டுக்­கொண்­டார்.

போக்­கு­வ­ரத்து துறை­யில் இப்­படி அடிக்­கடி வேலை நிறுத்­தம் நடை­பெ­று­வ­தால் மிக அதிக அளவு பொது­மக்­கள்­தான் பாதிப்­புக்கு ஆளா­கின்­ற­னர். இனி, எதிர்­கா­லத்­தில் இப்­படி நடை­பெ­றா­மல் தடுக்க அரசு தீவிர கவ­னம் செலுத்த வேண்­டும். தொழிற்­சங்க நிர்­வா­கத்­தி­ன­ரும், தொழி­லா­ளர்­க­ளும் 10 ஆண்டு, 15 ஆண்­டு­கள் என பிரச்­னையை நீட்­டிக்க விடா­மல், அந்த அந்த கால­கட்­டத்­தில் தீர்வு கிடைக்­கும் வகை­யில் ‘அர­சி­யல்’ கடந்து செயல்­பட வேண்­டும்.