நடக்குமா உள்ளாட்சி தேர்தல்?

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018

தமிழ்நாட்டில் மிக அதிகபட்சமாக மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல்தான், மாவட்ட பஞ்சாயத்து, நகர, ஒன்றிய, பேரூர், கிராம அளவில் லட்சக்கணக்கானோர் வார்டு கவுன்சிலர்களாகவும், தலைவர்களாகவும், மேயர்களாகவும் பதவிக்கு வரக்கூடிய தேர்தல்தான் உள்ளாட்சித் தேர்தல். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ௫ ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும்.

இதன் அடிப்படையில் 2016–ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால், திமுக தரப்பில் அதை எதிர்த்து கோர்ட்டுக்குச் சென்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கு எந்த எந்த இடங்கள் என்பதை வரையறுத்து அதுபற்றிய முறையான அறிவிப்பை வெளியிடாமலும், மனுத்தாக்கலுக்கு போதிய கால அவகாசம் தராமலும் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பதை ஏற்க முடியாது என திமுக தரப்பு கோர்ட்டுக்குச் சென்றது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், முறையாக பெண்கள், பழங்குடியினருக்கான இடங்களை கண்டறிவதுடன், குற்றப் பிண்ணனி உள்ளவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுதவிர, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கு எடுப்பின்படி தேர்தலை நடத்தக்கூடாது 2011ம் ஆண்டு கணக்கெடுப்புப்படித்தான் நடத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தொகுதி மறுவரை செய்வதற்கு குழு ஒன்றை அமைத்த தேர்தல் ஆணையம் பெண்கள், மற்றும் பழங்குடியினருக்கான இடங்களை கண்டறிவதிலும் ஈடுபட்டது. இதற்கு அதிக கால அளவு பிடிக்கும் எனக்கருதிய திமுக தரப்பு மீண்டும் கோர்ட்டை நாடியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட் முதலில் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.  அத்துடன் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை தனி அலுவலர்களை நியமிக்கவும் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி ௬ மாத காலத்திற்கு தனி அலுவலர்களை நியமித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சட்டசபை கூட்டம் தொடங்கியதும் அது சட்டமாக்கப்பட்டது. இப்படி இரண்டு முறை தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதுடன் இப்போது மூன்றாம் முறையாகவும் பதவிக் காலத்தை நீடித்து சட்ட மசோதா பேரவையில் சட்டமாக நிறைவேறியுள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் உள்ள தனி அலுவலர்களின் பதவிக் காலத்தையும் நீட்டித்துள்ளனர்.

ஜனநாயக நாட்டில் அதிகார பரவல் இருக்க வேண்டும். மத்தியில் அதிகார குவியல் கூடாது. மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கும் அதே வேளையில், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தி உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்குவதை தாமதப்படுத்தும் செயல் ஏற்கக்கூடியதாக இல்லை.

ஜெயலலிதா உடல் நலக்குறைவாக இருக்கும் நேரத்திலேயே அவசர அவசரமாக தேர்தலை நடத்திட முடிவு செய்த அரசு, இப்போது காலம் தாழ்த்துவது ஏன்? என்ற கேள்வி அரசியல் கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

உட்கட்சித் தகராறு, இரட்டை இலை முடக்கம் உள்ளிட்ட காரணங்களால்  ஆட்சியாளர்கள் தேர்தலை சந்திக்க தயங்குவதாக முன்பு கூறப்பட்டது. அணிகள் இணைந்து, இரட்டை  இலையும் கிடைத்த பிறகு மேலும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து, தேர்தலை நடத்த கால தாமதப்படுத்துவதைப் பார்க்கும் போது, இந்த ஆட்சி இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடக்காதோ? என்ற சந்தேகம் எழுந்துவிட்டது. இரட்டை இலை கிடைத்த பின் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுதான் ஆட்சியாளர்களுக்கு கவலையையும், பயத்தையும் ஏற்படுத்தி விட்டதோ? அதனால்தான் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயங்குகிறார்களோ என மக்கள் பேசத் தொடங்கி விட்டனர்.

தேர்தலை தள்ளிப் போடுவதற்கான காரண, காரியங்களை தேடி அலையாமல், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி நாட்களை கடத்தாமல், வெகுவிரைவில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் பதவிக்கு வருவதற்குரிய வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும் என்பதே, ஆட்சிக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.‘தேசியமும் திராவிடமும்’

தினமலர் ‘செய்தி மலர்’ அடுத்த இதழிலிருந்து (20.1.18) மூத்த பத்திரிகை யாளர் துரை கருணா எழுதும் ‘தேசியமும் திராவிடமும்’ எனும் தலைப்பில் புதிய வரலாற்றுத் தொடர் வெளிவருகிறது.

– ஆசிரியர்