வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் உள்ளாட்சிக்களுக்கான தேர்தல், சென்ற வருடம் பிப்ரவரி முதல் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள பெண் வேட்பாளர்கள், அவர்களின் வேட்புமனுவை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மாணவர்கள், பழங்குடியின அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இவர்கள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் பல அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். இதே போல் வேட்பு மனுவை வாபஸ் வாங்காத பெண் வேட்பாளர்களை, சமூகத்தைவிட்டு தள்ளி வைப்பதாகவும் மிரட்டல் விடுத்தனர். பழங்குடியின அமைப்புகளின் கோபத்திற்கு காரணம், டி.ஆர்.ஜிலாங் தலைமையிலான அரசு, பத்தாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், நகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 33 சதவிகித வார்டுகளை ஒதுக்கியதே.
திமாபூர் போராட்டக்காரர்களால் முற்றுகை இடப்பட்டு இருந்த போது, நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் டோகிலி கிகான் (59), அவரது வீட்டை பாதுகாக்க 300 பேரை வேலைக்கு அமர்த்தினார். கிராம ஊராட்சி தலைவரான டோகிலி கிகான், போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சத்தில் நாகாபாரி என்ற கிராமத்தில் உள்ள வீட்டை விட்டு வெளியேறினார்.
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாகா மதர் அசோசிஷன் என்ற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் நீண்டகாலமாக போராடி வந்தனர். இந்த அமைப்பைச் சேர்ந்த ரோஸ்மேரி, அபியு மீரு ஆகிய இருவரும் 2011ல் கவுகாத்தி உயர்நீதி மன்றத்தில், நாகாலாந்து முனிஷிபல் கவுன்சில் சட்டம்–2001 ஐ அமல்படுத்தக்கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்ப்பட்டது. பிறகு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
உச்சநீதி மன்றம் 2016, ஏப்ரல் மாதம் இட ஒதுக்கீடு வழங்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. நாகாலாந்து மாநில அரசு, டிசம்பர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெறும் என்றும், வாக்குப்பதிவு தேதியையும் அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் திமாபூரில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் பலியானார்கள். இதற்கு பிறகு முதல்வர் டி.ஆர்.ஜிலாங் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தார். அதன் பிறகு பிப்ரவரி முதல் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் இருந்து மிரட்டல் வந்த போதிலும் டோகிலி கிகான், போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார். இவருக்கு அவரது கட்சியும், அவர் சார்ந்த சுமி, லோதா பழங்குடியினர் சமூகத்தினரும் ஆதரவாக இருந்தனர். ஆனால் இவரது நெருங்கி நண்பரான மேடம் கேரி என்பவர் 23 வது வார்டில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் சார்ந்த அங்காமி பழங்குடியின அமைப்பு, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. மேடம் கேரி வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால், ஜாதியில் இருந்து தள்ளி வைப்பதாகவும் மிரட்டியது.
மேடம் கேரியை கடத்தி சென்று, வேட்புமனுவை வாபஸ் பெற நிர்ப்பந்தமாக கையொப்பம் வாங்கினார்கள். வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால், அவரை டைவர்ஸ் செய்து விடுவதாக, அவரது கணவரும் மிரட்டினார் என்று டோகிலி கிகான் தெரிவித்தார். நாகாலாந்தில் கிராம ஊராட்சி தலைவராக டோகிலி கிகான், கிராம மேம்பாட்டு வாரிய செயலாளராக சுனிகோ ஜிமோமி, லோக்சபா உறுப்பினராக ரானா எம்.சாஜியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் விதி விலக்காக உள்ளனர். ரோஸ்மோரி டிஜிவிசு என்ற பெண், “ ஆண்கள், பெண்கள் முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு வருவதை எதிர்க்கின்றனர். 85 வார்டுகள் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டால், இவற்றில் இருந்து பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதே மாதிரி தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பெண்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதையும், அவர்கள் நிதியை கையாள்வதை குறிப்பாக ஆண்கள் எதிர்க்கின்றனர்” என்று கூறுகின்றார்.
நாகாலாந்தில் 2005ல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் பிரச்னை முதன் முதலாக எழுந்தது. அப்போது கிடோலி சிசி என்ற பெண் கவுகாத்தி உயர்நீதி மன்றத்தில், நாகாலாந்து முனிசிபல் சட்டம்–2001ல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் பிரிவை சேர்க்க வேண்டும் என்று பொதுநல வழக்கை தொடர்ந்தார். இதற்கு முன் ‘நாகா மதர் அசோசிஷன்’ என்ற பெண்கள் அமைப்பும், நாகா பழங்குடியின சங்கங்களும், பழங்குடி மக்களுக்கு இடையே ஒற்றுமை, அமைதி வழியில் அரசியல் தீர்வு அடைய வேண்டும் என்று கருதினர்.
1984ம் ஆண்டு 16 நாகா பெண்கள் சங்கங்கள் அமைக்கப்பட்டது. (ஒவ்வொரு பழங்குடியினத்திற்கும் ஒரு சங்கம்) இந்த சங்கங்களுடன் இணைந்து நாகா மதர் அசோசிஷன் பணியாற்றியது. இதற்கு பிறகு 1994ல் பெரும்பான்மையாக உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், எல்லா பழங்குடியின சங்கங்களையும் உள்ளடக்கிய “நாகா பழங்குடியின மத்திய சங்கத்தை” அமைத்தனர். ‘இரத்தத்தை மேலும் சிந்துவதில்லை’ என்ற கோஷத்தின் கீழ் அமைந்த மத்திய சங்கம், அமைதி ஏற்படுத்தவும், பழங்குடியின பிரிவுகளுக்கு இடையேயும், தலைமறைவாக உள்ள அமைப்புகளிடையும் பிரச்னை எழும் போது தலையிட்டு சமரசத்தையும், அமைதியையும் ஏற்படுத்தியது.
கோஹிமாவாவில் நாகா பழங்குடியின மக்களின் மத்திய அமைப்பின் தலைவர் சுபா ஒஜிகும் கூறுகையில், “பெண்கள் அதிகாரத்திற்கு வருவதையும், அரசியலுக்கு வருவதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. எங்கள் பாரம்பரிய வழக்கப்படி, பெண்களுக்கு என இட ஒதுக்கீடு வழங்குவது பொருந்தி வராது. நீங்கள் 33 சதவிகித இட ஒதுக்கீடு என்று கூறுகின்றீர்கள். ஆனால் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, இதை விட அதிகரித்து விடுகிறது. பெண்களுக்கு முன்பு வாக்குரிமை இல்லை. அதை வழங்கினோம். அவர்கள் தலைவராக கூட வரமுடியும்” என்று கூறினார்.
இந்திய அரசியல் சட்டம் 371ஏ பிரிவின் கீழ் நாகாலாந்துக்கு பாதுகாப்பு உள்ளது. பார்லிமென்டில் இயற்றும் சட்டத்திற்கு, நாகாலாந்து சட்டசபையில் நிறைவேற்றி அங்கீகாரம் வழங்க வேண்டும். இல்லையெனில் நாகாலாந்து, பார்லிமென்ட் இயற்றும் சட்டத்தை பின்பற்ற தேவையில்லை. “இந்திய அரசியல் சட்டத்தில் 243டி (243T)பிரிவு சேர்க்கப்பட்டபோது, நாகாலாந்து பார்லிமென்ட் உறுப்பினரோ அல்லது நாகாலாந்து அரசோ பார்லிமென்டில் பிரச்னையை எழுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது எங்கள் தவறு” என்று சுபா ஒஜிகும் கூறினார்.
2016, நவம்பரில் நாகாலாந்து சட்டசபையில் இந்திய அரசியல் சட்டம் 9 ஏ (Part IXA) பிரிவின் கீழ் நாகாலாந்தை கொண்டு வருவதற்கு சட்டம் இயற்றப்பட்டது. இதனால் 371ஏ பிரிவின் கீழ் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாகாலாந்தில் கிராமப்
புறத்தைச் சேர்ந்த பெண்கள், இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். பீக் நகர பெண்கள் நல சங்க செயலாளர் வெக்கோலு காமோ, “இதற்கு முன் நாங்கள் போட்டியிட கூட நினைத்து பார்க்க முடிந்ததில்லை” என்று கூறுகிறார்.
நாகாலாந்து பழங்குடியின மத்திய கவுன்சில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. சுமி பழங்குடியினத்தைச் சேர்ந்த ஹிகுளி டி வோட்சா (58). நான் போட்டியிடுவதை பற்றி சுமி பழங்குடியின சங்கம் பெரிதாக கவலைப்படவில்லை. திமாபூரில் 9 வது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த இவர், கடைசிவரை போட்டியிடவே முயற்சித்தார். ஏனெனில் வேட்புமனுவை வாபஸ் பெற்றால், இவரை எதிர்த்து போட்டியிடும் நாகா மக்கள் முன்னணி வேட்பாளக்கு சாதகமாக போய்விடும் என்று கருதினார்.
கடந்த 25 வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ஹிகுளி டி வோட்சா என்ற பெண், பெண்கள் போட்டியிட கூடாது என்று எச்சரிக்கை விடும் பழங்குடியினத்தினரின், பழங்குடி இனத்தில் இருந்து போட்டியிட பெண்கள் இல்லை. எனவே இவர்கள் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். நான் சார்ந்துள்ள சுமி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்னை போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கூறினார்கள். மற்றவர்கள் போட்டியிடும் வரை நானும் போட்டியிடுவேன் என்று தெரிவித்தேன் என்கின்றார்.
பீக் மாவட்டத்தில் போட்டியிடும் எட்டு பெண்களை ( நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட) சேக்கிசங்க் (Chakhesang) என்ற பழங்குடியின அமைப்பு, இவர்களை ஜாதியை விட்டு விலக்கி விடுவதாக எச்சரித்தது. வேட்புமனுவை வாபஸ் வாங்குவதற்கு கடைசி நாளான சென்ற வருடம் ஜனவரி 17ம் தேதிக்குள் வாபஸ் வாங்காவிட்டால், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் அவர்களது வீட்டை அடித்து நொறுக்குவார்கள் என்றும் எச்சரித்தது. இவர்கள் ஏற்கனவே இரண்டு பெண் வேட்பாளர்களின் வீட்டை அடித்து நொறுக்கிவிட்டனர். மற்றொரு பெண் வேட்பாளர் வீடு மயிரிழையில் தப்பியது.
பீக் மாவட்ட மதர் அசோசிஷனைச் சேர்ந்த வேட்பாளர் விடுஹூலு என்ற பெண், எங்கள் வீட்டை எப்போது அடித்து நொறுக்குவார்கள் என்ற பயத்திலேயே எனது மகன் இருந்தான். திமாபூரில் உள்ள உறவினர் வீட்டில், மூன்று மாதம் குழந்தைகள் தஞ்சம் அடைந்தனர் என்று கூறுகின்றார். இந்த எட்டு பெண் வேட்பாளர்களும் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள சம்மதித்தனர். ஆனால் இவர்களை கோஹிமாவில் அவர்கள் கட்சி தலைவர்கள் பிடித்து வைத்திருந்ததாக தனது பெயரை தெரிவிக்காமல் ஒரு வேட்பாளர் தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்துள்ள சேக்கிசங்க் மத்திய அமைப்பு சென்ற ஜனவரி 17ம் தேதியில் இருந்து சேக்கிசங்க் மக்கள் வாழும் பகுதியில் இருந்து, இவர்களை ஒதுக்கி வைப்பதாக கடிதம் மூலம் மிரட்டியது.
இந்த அமைப்பின் தலைவர் கிக்வாங்கிலோ வியா, “ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், சமூக முடிவை அமல்படுத்துபவர்கள். இவர்கள் நிலைமையை கண்காணித்துக் கொண்டிருந்தனர். சில நேரங்களில் அதிக அளவில் இளைஞர்கள் கூடிவிடுகின்றனர். இவர்களை கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருந்தது. ஆனால் நாங்கள் தாக்குதல் நடத்துங்கள் என்றோ, சேதம் ஏற்படுத்துங்கள் என்றோ கூறவில்லை” என்று தெரிவித்தார்.
நாகாலாந்தில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது. வரும் மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் உள்ளாட்சி தேர்தலின் போது, எந்த நாகா தேசிய குழுவும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட முயற்சித்த பெண் வேட்பாளர்களை, அவர்கள் தார்மீக ரீதியாக ஆதரவு தெரிவித்ததாக கூறுகின்றனர்.
நாகாலாந்தில் பெண்கள் ஒதுக்கப்படுவதால் பல்வேறு கஷ்டங்களை அவர்கள் அனுபவித்தாலும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தீர்க்கமான முடிவு எடுக்காவிட்டாலும் கூட, அரசியல் ரீதியாக தீர்வு ஏற்பட்டு அமைதி ஏற்பட வேண்டும் என்று இந்த பெண்கள் நினைக்கின்றனர்.
மத்திய அரசுடன் நாகா பிரச்னைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சிலிடம் (இசாக்–முய்வா) பேச்சுவார்த்தையின் போது, நாகா மதர் அசோசிஷன் பிரதிநிதிகளையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று ரோஸ்மேரி டிஜிவிசு தெரிவித்தார். இவர் மேலும் கூறுகையில், நாங்கள் பெண்கள் சுய அதிகாரம் பெற வேண்டும். எந்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும், இறுதி முடிவு எடுப்பதில் பெண்களுக்கும் பங்கு வேண்டும் என்று எழுத்துபூர்வமாக தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் நாகாலாந்து பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பாக பேசும் பிரதி நிதி, சென்ற வருடம் அக்டோபர் மாதம் 23ம் தேதி ஆறு நாகா அரசியல் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் பெண்கள் சார்பாக ஒரு பிரதிநிதிகூட இடம் பெறவில்லை. வரவுள்ள சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு, சட்டமன்றத்தில் நாகாலாந்து நகராட்சிகள் சட்டம் –2006 ஐ ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் இருந்து அரசு நாகாலாந்தின் மக்கள் தொகையில் 50 சதவிகிதமாக உள்ள பெண்களை பற்றி கவலைப்படவில்லை. தற்போது அரசியல் ரீதியாக தீர்வு காண சிக்கலாக உள்ள நேரத்தில், பெண்களின் உரிமையை மதிக்காதவரை நிரந்தர அமைதிக்கு சாத்தியமில்லை என்று ரோஸ்மேரி டிஜிவிசு கூறுகின்றார். பெண்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக, மக்கள் சிவில் உரிமைகள் அமைப்பு தொடுத்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நன்றி: ஸ்கோரல் டாட் இன் இணைய தளத்தில் மாக்பீசு சில்டிஸ்கு