வருமான வரி இலாகா அனுப்பி மாயமான குட்கா ஊழல் அறிக்கை வேதா நிலையம் சசிகலா அறையில் சிக்கியது

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 23:41

சென்னை,

    குட்கா விவகாரம் தொடர்பாக டிஜிபி அசோக் குமாருக்கு வருமான வரித்துறையினர் அளித்த அறிக்கை காணாமல் போன நிலையில் கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் சசிகலா வசித்த அறையில் கிடைத்துள்ளது.

அந்த அறிக்கையை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் சமர்ப்பித்தனர். தமிழகத்தின் சுகாதார அமைச்சர், தலைமை காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரது ஊழல் குறித்து இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் உள்ள சில முக்கிய ஆதாரங்களை அழிக்க முயற்சிகள் நடப்பதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதைதொடர்ந்து  கடந்த நவம்பர் மாதம் வேதா இல்லத்தில் சசிகலாவின் அறையை வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது 2016ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு டிஜிபி அசோக்குமார் அனுப்பிய அறிக்கை மற்றும் வருமான வரித்துறையின் புலனாய்வு துறை தலைவர் அனுப்பிய ரகசிய கடிதத்தின் நகல் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்ட இந்த இரு ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் இன்று சமர்ப்பித்தனர். இந்த அறிக்கைகள் தொடர்பாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவின் தலைவர் சூசி பாபு வர்கீஸின் வாக்குமூலமும் உடன் சமர்பிக்கப்பட்டது.

அந்த வாக்குமூலத்தின் படி  எம்.டி.எம் குட்கா தயாரிப்பாளரான மாதவ ராவ் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு அளித்த சாட்சியத்தில் அவர் தமிழகத்தின் சுகாதார அமைச்சருக்கு 01/04/2016 முதல் 15/06/2016 வரை 56 லட்சம் ரொக்கமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த தொகை பல்வேறு அதிகாரிகள் மூலம் பரிமாற்றப்பட்டதாகவும் ஆவணங்களில் எச்.பி சிபி என்ற குறியீடுகள் சுகாதார துறை அமைச்சரையும், காவல்துறை ஆணையரையும் குறிக்கிறது என மாதவ ராவ் கூறியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழக அரசு குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை அறிக்கை எதுவும் இல்லை என நீதிமன்றத்தில் கூறியது பொய் என அம்பலமாகியுள்ளது.

முன்னதாக முன்னாள் தலைமை செயலாளர் பி. ராம் மோஹன் ராவ் வருமான வரித்துறை தமிழக அரசிடம் குட்கா விவகாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்ததாகவும் அதை அவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குட்கா விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டிருந்ததாகவும் ராம் மோஹன் ராவ் தெரிவித்தார்.