2019ல் இந்தியாவில் 2ஜி வாடிக்கையாளர்களே இருக்க மாட்டார்கள்: ஆய்வறிக்கை தகவல்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 22:39

புதுடில்லி,

    இந்தியாவில் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2ஜி இணைய தள சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களே இருக்க மாட்டார்கள் என சைபர் மீடியா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இணையதள சேவையில் ஜியோ அறிமுகமான நிலையில், 2020ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 2ஜி இணையதள சேவையை பயன்படுத்தும் நுகர்வோர் யாரும் இருக்க மாட்டார்கள்” என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தையில் ஜியோ அறிமுகமான பின்னர், மொபைல் டேட்டாவின் விலை மின்னல் வேகத்தில் சரிந்தது.. அதாவது, ஒவ்வொரு காலாண்டிற்கும் 12 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இதற்கு முன்னர் இந்த வீழ்ச்சி வெறும் 3 சதவீதம் மட்டுமே இருந்தது என்பது ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

புதிதாக முளைத்துள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் பல்வேறு செல்போன் மாடல்களை சந்தையில் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. 4ஜி டேட்டாவுக்கான ஜிபி விலையையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, 4ஜி செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், 2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2ஜி இணைய தள சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களே இருக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.