100ஆவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 19:47

ஸ்ரீஹரிகோட்டா

       இஸ்ரோவின் 100 ஆவது செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ”கார்ட்டோ சாட்” செயற்கைகோள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான 28 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. இதில் 710 கிலோ எடைகொண்ட கார்ட்டோ சாட்-2 செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி40 ரக ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தியது. இது இஸ்ரோ அனுப்பும் 100ஆவது செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த 28 செயற்கை கோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. அந்த 28 செயற்கைகோள்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பின்லாந்து, கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவையாகும்.

ராக்கெட் புறப்பட்ட 17ஆவது நிமிடத்தில் இந்தியாவின் 100ஆவது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2  பி எஸ் எல் வி யிலிருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதறகு உரிய விண்வெளிப் பாதையில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், பூமியின் மேற்பரப்பை துல்லியமாக படம் எடுக்கும் திறன் கொண்டது.

இஸ்ரோவின் இந்த சாதனையை பாராட்டி குடியரசு தலைவர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்  ஆகியோர் இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் வாழ்த்து

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த டுவிட்டரில்,”இந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோள் கார்டோசாட்-2 மற்றும் 6 கூட்டணி நாடுகளின் 28 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது நாட்டின் ஒவ்வொரு இந்தியனுக்கு பெருமையாக கருதும் தருணமாகும். 100 ஆவது செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோவின் அசாதாரணமான ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். நம் நாட்டிற்கு இது ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பதிவில்,

”இஸ்ரோவிற்கும் அதன் விஞ்ஞானிகளுக்கும் பிஎஸ்எல்வி ராக்கெட்-ஐ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த புத்தாண்டில் கிடைக்கப்பெற்ற இந்த வெற்றி, நம் நாட்டின் விண்வெளி தொழில்நுட்பத்தால் மக்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும். இஸ்ரோ தனது 100 ஆவது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதன்ன்மூலம் அது மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இந்திய விண்வெளி திட்டங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தி  வாழ்த்து

மீண்டும் சாதனை படைத்துவரும் இஸ்ரோவிற்கு என உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கடினமான உழைப்பும் அர்ப்பணிப்பும் விண்வெளி துறையில் இந்தியாவுக்கு முதலிடம் பெற்று தந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

இவ்வாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.