தமிழகத்தில் 8 நாட்களுக்குப் பிறகு முழு அளவில் அரசு பேருந்துகள் இயங்கின

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 19:45

சென்னை,

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து 8 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் முழு அளவில் பேருந்துகள் இயங்க துவங்கியுள்ளன.

ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்  ஜனவரி 4-ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால்  வெளியூர் செல்லும் பயணிகளும், உள்ளூரில் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை கடந்த 5-ம்  தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த போராட்டத்துக்குத் தடை விதித்ததோடு, தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது.

ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தொழிற்சங்கங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக் கொள்வதாகவும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து ஊதிய உயர்வு பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பொதுமக்களின் நலன் கருதியும் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்கு வரத்து தொழிலாளர்களை கேட்டுக் கொண்டது.

நீதிமன்றத்தின் உத்தரவுபடி, இன்று முதல் பணிக்கு திரும்ப போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.

வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் இன்று காலை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கின.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியூர் செல்பவர்கள் பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர். பேருந்து அதிகளவில் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.