பா.ஜ.க.விலிருந்து ராஜினாமா செய்த மகாராஷ்டிர எம்.பி. காங்கிரசில் சேர்ந்தார்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 01:06

புதுடில்லி,

    விவசாயிகளின் பிரச்னைகளை முறையாக பிரதமர் மோடி கையாளவில்லை என்று கண்டித்து மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் நானா படோல்.

பாரதீய ஜனதா கட்சியிலிருந்தும் டிசம்பர் 8ம் தேதி குஜராத் சட்டமன்ற முதல் கட்ட தேர்தலுக்கு முந்திய நாளில் ராஜினாமா செய்தார்.

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்தார்.  பந்தரா– கோண்டியா மக்களவை தொகுதியில் நானா படோல் வெற்றி பெற்றார்.

ஜனவரி 3ம் தேதி நானா படோல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என மகாராஷ்டிர மாநில பொறுப்பாளரான மோகன் பிரகாஷ் இன்று அறிவித்தார். விவசாயிகள் மத்தியில்  கட்சியை வலுப்படுத்த நானா பாடுபடுவார் என்றார் மோகன் பிரகாஷ்.

நானா படோலை ராகுல் காந்தி மகிழ்ச்சியாக வரவேற்பதாக டுவிட்டரில் காங்கிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்தி, நானா படோல், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ண விகே பாடில், மும்பை நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் உள்ள புகைப்படமும் டுவிட்டர் செய்தியுடன் இணைக்கப்பட்டிருந்தது.