பஸ் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது – தொழிற்சங்கங்கள் முடிவு

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 00:45

சென்னை:

அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக்கு கொண்டுவர ஏக மனதாக இன்று மாலை தீர்மானித்தன.


மத்தியஸ்தம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்புகளை ஏற்று, வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்தன.

இந்த முடிவை சிபிஎம் எம்.பி. டி.கே. ரங்கராஜன் முதலில் டுவிட்டரில் அறிவித்தார்.

முன்னதாக, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த பிரச்சினையில் மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமிப்பதாக இன்றைய வழக்கு விசாரணையின்போது அறிவித்தது.

சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி பத்மநாபனை அரசுக்கும் தொழிலாளர் சங்கத்திற்கும் மத்தியஸ்தராக நியமிப்பதாக உத்தரவிட்டது.

விடுபட்ட 0.13 சதவீத ஊதிய உயர்வு குறித்தும் மத்தியஸ்தர் முடிவு செய்யலாம்.

2.57 காரணி ஊதியம் தொடர்பாக மத்தியஸ்தர் முடிவெடுப்பார் என்றும், எந்த தேதியிலிருந்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை அவரே முடிவெடுப்பார் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் விரும்புகிறது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் இடைக்கால உத்தரவாக கருதப்படலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

வேலை நிறுத்தம் தொடர்பான குற்ற வழக்குகளை வாபஸ் பெறுதல் என்ற பிரச்சினைக்கு இடமே இல்லை. அதே போல வேலை நிறுத்த காலத்துக்கு ஊதியம் வழங்க முடியாது என்றும் அரசு தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதையும் பரிசீலிக்கலாம் என்று அரசு சற்று இறங்கி வந்தது.

தொழிற்சங்கங்கள் ஆலோசனை

உயர்நீதிமன்ற அறிவிப்புக்கு பிறகு போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்துத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் பரிசீலிக்கப்பட்டன.

மத்தியஸ்தம் தொடர்பான நீதிமன்ற ஆலோசனையை ஏற்று வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர சங்கங்களின் பிரதிநிதிகள் ஏகமனதாக முடிவு செய்தன.

கடந்த வியாழக்கிழமை மாலை தொடங்கிய வேலை நிறுத்தம் அடுத்த வியாழன் அன்று (11.1.2017) முடிவுக்கு வந்தது.

பொங்கலுக்கு வெளியூர் செல்லும் பயணிகள் ஆவலுடன் பேருந்து நிலையங்கள் நோக்கி விரைந்து செல்கின்றனர்.

தற்காலிக ஓட்டுநர்கள் அரசு பேருந்தை இயக்கியதால் எதிர்பாரத விதமாக பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் உயிர்பலிகளும் ஏற்பட்டன.