முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க மூன்று தனித்தனி அரசுக்குழுக்கள் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2018 23:45

புதுடில்லி,

முல்லைப்பெரியாறு அணையில் எதிர்பாராமல் நடக்கும் பேரிடர்களை சமாளிக்க மத்திய அரசு, தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் தனித்தனிக் குழுக்களை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கேரளா, தமிழகம் எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை 180 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் அதன் ஆயுட்காலம் குறித்து சர்வதேச நிபுணர் குழு ஆய்வு செய்யவேண்டும் என கேரளாவை சேர்ந்த ரஸ்ஸல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மேலும் ‘‘அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் முல்லை பெரியாறு அணை அருகே வாழும் சுமார் 30 லட்சம் மக்கள் எந்த நேரத்திலும் அணையால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள். எனவே அந்த மக்களின் பாதுகாப்பை கருதி அணையின் பயன்பாட்டை நிறுத்தவேண்டும்’’ என தன் மனுவில் ரஸ்ஸல் ஜாய் கோரினார்.

இன்று இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம் கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில் ‘‘முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் ஆயுட்காலம் தொடர்பான விவகாரங்களை கடந்த 2014ம் ஆண்டு 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் நியமிக்கப்பட்ட குழுவினர் தொடர்ந்து விசாரிப்பர்’’

‘‘முல்லை பெரியாறு அணையால் ஏற்படக்கூடிய பேரிடர்களை சமாளிக்க மத்திய அரசு, கேரளா மற்றும் தமிழக அரசு மூன்றும் தனித்தனி கமிட்டிகள் அமைக்கவேண்டும். அணையின் பாதுகாப்பை தவிர மற்ற எந்த விவகாரங்களிலும் இந்த கமிட்டிகள் தலையிடக்கூடாது’’ என உச்சநீதிமன்ற  நீதிபதிகள் உத்தரவிட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.