மாநில லோக் ஆயுக்தா சட்டம் எப்பொழுது வரும்? ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2018 23:40

சென்னை:

2013ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்துக்கு மத்திய அரசு திருத்தம் நிலுவையில் உள்ளது. பிற மாநிலங்களில் உள்ள லோக்ஆயுக்தா சட்டங்களுடன் ஒப்பீடு நடக்கிறது.

முதன்மை சட்டத்துக்கான திருத்தங்கள் முடிவானதும் மாநில லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு இயற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் கே. பழனிசாமி அளித்த பதில் வருமாறு:

‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013’ என்ற சட்டம், மத்திய அரசால், 2014 ஆம் ஆண்டு, ஜனவரி 1 ஆம் நாள் முதல் அமல்படுத்தப்பட்டது.

லோக் ஆயுக்தா அமைப்பினைத் தமிழ்நாட்டில் அமைப்பது தொடர்பான பல்வேறு கூறுகளை விவாதித்திட, தலைமைச் செயலாளர் தலைமையில்

7 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, தமிழ்நாட்டிற்கான லோக் ஆயுக்தா அமைப்பினை ஏற்படுத்த லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 ஐ விரிவாக ஆய்வு செய்து ஒரு வரைவு கட்டமைப்பை (draft frame work) உருவாக்கியது.

19.12.2014 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவ்வரைவுக் கட்டமைப்பு (draft frame work)ஆய்வு செய்யப்பட்டது.

திருத்தம் செய்ய திட்டம்

இந்நிலையில், மத்திய அரசு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்  2013-க்கு பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள உத்தேசித்தது. எனவே,  மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பினை ஏற்படுத்த மத்திய அரசில்  நிலுவையிலுள்ள லோக் பால் சட்டத்தின் திருத்தங்களைப் பார்த்த பின் முடிவு செய்யலாம் என்று 14.2.2016-இல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், லோக் ஆயுக்தா வரைவுச் சட்டத்தை, மேலும் செம்மைப்படுத்தும் விதமாக, அவ்வரைவுச் சட்டத்தைப் பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள லோக் ஆயுக்தா சட்டங்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

ஆக, லோக் பால் சட்ட திருத்த மசோதா மத்திய அரசில் நிலுவையில் உள்ளதால், முதன்மை சட்டமான லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்

2013-க்கு முரண்பாடு ஏற்படுவதைத் தவிர்த்திடும் பொருட்டு, முதன்மைச் சட்டத்துடன் அது தொடர்பான திருத்தங்களையும் கவனத்தில் கொண்டு, இம்மாநிலத்திற்கான லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு இயற்றப்படும் என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார்.