ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 10–01–18

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018

இளையராஜாவின் முதல் ஆங்கில படம் தியேட்டரில் வெளியாகாது!

(சென்ற வாரத் தொடர்ச்சி)
"அவள் ஒரு ஆஸ்­தி­ரே­லிய பெண்... பெற்­றோர் கிடை­யாது. அன்பு, அர­வ­ணைப்பு, பாசம், நேசம், உற­வு­கள் அறிந்­த­வள் இல்லை. ஒரு இந்­தி­யப் பையன், இவள் மீது காட்­டும் அன்பு, காத­லாய் மாறு­கி­றது. அவள் அந்­தக் காத­லைப் பூர­ண­மாய் உண­ரும் அந்­தத் தரு­ணத்­தில்... ஒரு பாடல் வேண்­டும்" இயக்­கு­நர் சொல்லி முடிக்­கி­றார். சரி­யாக எட்டு நிமி­டங்­கள் கரை­கின்­றன. அந்த கிடா­ரில் அற்­பு­த­மாய் ஒரு டியூன் உரு­வா­கி­றது. கொஞ்­சம் கொஞ்­ச­மாய் அது முழுப்­பா­ட­லாய் உரு­வா­கி­றது. ராஜா... இளை­ய­ராஜா இசை­ய­மைத்­தி­ருக்­கும் முதல் ஆங்­கி­லத் திரைப்­ப­டம். அந்த ஆங்­கி­லப் பாடல்... வேற லெவல்.
'லவ் & லவ் ஒன்லி' ( LOVE & LOVE ONLY ) என்ற இந்த ஆங்­கி­லப் படத்­தின் இயக்­கு­நர், ஆஸ்­தி­ரே­லிய வாழ் தமி­ழ­ரான ஜூலி­யன் கரி­கா­லன். இந்­தி­யா­வில் இருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எம்.பி.ஏ.  படிக்­கப்­போ­கும் ஹீரோ கிருஷ்ணா, அங்கு ஒரு டிபார்ட்­மெண்­டல் ஸ்டோரில் பார்ட் டைம் வேலைக்கு சேர்­கி­றார். சின்ன வய­தி­லேயே பெற்­றோர் பிரிந்­து­விட, தனியே வாழ்ந்து போரா­டிக் கொண்­டி­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யப் பெண் ஸ்டேசி­யும் அங்கு வேலை செய்து வரு­கி­றார். நட்­பா­கத் தொடங்­கும் உறவு, காத­லா­கி­றது. கலா­சார வேற்­று­மை­க­ளைக் கலைந்து, இரு­வ­ரின் வாழ்­வின் பிரச்­னை­க­ளைக் கடந்து ஒன்று சேர்ந்­தார்­களா என்­பதை... காதல் நிரம்­பிய காட்­சி­க­ளோடு, காதல் வழி­யும் ராஜா­வின்  இசை வழியே சொல்­கி­றது 'லவ் & லவ் ஒன்லி.'
தமி­ழில் 'இரண்­டாம் உல­கம்' படத்­தில் துணை நடி­க­ராக வரும் ரோஹித் கலியா ஹீரோ­வாக நடித்­துள்­ளார். ஆஸ்­தி­ரே­லிய படங்­க­ளில் துணை நடி­கை­யாக வரும் ஜியார்­ஜியா நிக்­கோ­லஸ் ஹீரோ­யி­னாக நடித்­துள்­ளார். இளை­ய­ரா­ஜா­வின் இசைக்கு அடுத்து, படத்­தின் பெரிய பல­மாக நிக்­கோ­ல­ஸின் நடிப்­பை­யும், காதல் வச­னங்­க­ளை­யும் சொல்­ல­லாம்.
"பிடித்த ஒரு விஷ­யம் கிடைக்­கா­மல், பிடிக்­காத ஆயி­ரம் விஷ­யம் கிடைத்­தா­லும்... அது எல்­லோமே வீண்­தான்...", "அந்­நி­யம் என்­ப­தாலே எதை­யும் ஒதுக்­கிட முடி­யாது. சம­யங்­க­ளில், அந்­நி­ய­மான சில விஷ­யங்­க­ளில் கூட ஒரு நெருக்­கம் இருக்­கும்...", "ஆண்­கள் மட்­டும்­தான் இப்­ப­டியா?  அல்­லது ஆண் இனமே இப்­ப­டித்­தானா?" போன்ற வச­னங்­கள் கவ­னிக்க வைக்­கின்­றன. ஹீரோ­வும், ஹீரோ­யி­னும் ஓட்­ட­லில் டின்­னர் சாப்­பி­டும் காட்­சி­யில், உணவு வேற்­று­மை­யின் வழி கலா­சார வேற்­று­மை­களை சொல்­லு­மி­டத்­தி­லும், நாயகி தன் வலி மிகுந்த பால்­ய­கால வாழ்வை சொல்­லும் காட்­சி­யி­லும் இளை­ய­ராஜா தன் கிளா­சிக் டச்­சைக் கொடுத்­தி­ருக்­கி­றார். காட்­சி­கள் பேசாத பல உணர்­வு­களை பின்­னணி இசை உணர்த்­து­கி­றது.
இளை­ய­ராஜா  இந்த படத்­திற்கு இசை­ய­மைக்க ஒப்­புக்­கொண்­ட­தற்கு முக்­கிய கார­ணம்... இந்த படம் தியேட்­டர்­க­ளில் வெளி­யா­காது என்­ப­தால்­தான். இது ஆன்­லை­னில் மட்­டுமே வெளி­யி­டப்­ப­டும் புது­மு­யற்சி என்­ப­தால்­தான். 75 ரூபாய் கட்டி இந்த படத்தை ஆன்­லை­னில் பார்த்­துக் கொள்­ள­லாம்.
ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிறைத்­து­றை­யில் கைதி­கள் குறித்த ஆவ­ணப்­ப­டங்­களை இயக்­கும் வேலை ஜூலி­ய­னு­டை­யது. சினிமா மீதான ஆர்­வத்­தால், பட­மெ­டுக்க முடிவு செய்­கி­றார். படத்­தின் பட்­ஜெட் லட்­சங்­க­ளில்­தான். படத்­தின் மொத்த குழு 10 பேர்­தான். அதில் பெரும்­பா­லும் ஜூலி­ய­னின் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­களே. சர்­வ­தேச திரைப்­பட விழாக்­க­ளி­லும் இப்­ப­டம் பங்­கேற்று வரு­கி­றது.  படத்­தின் மூலம் நிச்­ச­யம் பொரு­ளா­தார வெற்­றி­யும் கிடைக்­கும் என்று நம்­பிக்­கைத் தெரி­விக்­கி­றார் ஜூலி­யன்.
இளை­ய­ராஜா இந்த படத்­திற்­குள் எப்­படி வந்­தார்?
"ஒரு முறை இளை­ய­ராஜா பேட்­டி­யில், இளை­ஞர்­க­ளின் புது முயற்­சி­க­ளுக்கு நான் முழு ஒத்­து­ழைப்பு தரு­வேன்'' என்று சொல்­லி­யி­ருந்­தார். என் படத்தை எடுத்து முடித்­த­தும், அவ­ரி­டம் கொண்டு வந்து காட்­டி­னேன். படம் பார்த்­தார். ஒரு இரண்டு மணி நேரம் ஒன்­றுமே சொல்­லா­மல் இருந்­தார். பின்பு, " எனக்­குப் படம் பிடிச்­சி­ருக்கு... அதை­விட முக்­கி­யமா உன்­னு­டைய இந்த புது முயற்­சிக்கு நான் ஏதா­வது செய்­ய­ணும். நிச்­ச­யம் பண்­றேன்னு" ஒத்­துக்­கிட்டு இந்த படத்­திற்­கான இசை வேலை­களை செய்து கொடுத்­தார்.
 அந்த ஆங்­கி­லப் பாடல் எப்­படி உரு­வா­னது?
"சிச்­சு­வே­ஷன் சொல்லி சில நிமி­டங்­க­ளி­லேயே ராஜா சார் டியூனை பிடித்து விட்­டார். அதை யாரா­வது ஆஸ்­தி­ரே­லியே பெண்ணே பாடி­னால் நன்­றாக இருக்­கும் என்று சொன்­னார். ஆஸ்­தி­ரே­லி­யா­வில் விளம்­ப­ரம் கொடுத்து சில குரல்­களை தேர்ந்­தெ­டுத்­தேன். அதில் ராஜா சார், ரேச்­செல் லிய­கார் என்ற இந்த பெண்­ணின் குர­லைத் தேர்ந்­தெ­டுத்­தார். இந்­தப் பெண்­ணிற்கு டனல் விஷன் என்ற பார்வை குறை­பாடு இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ராஜா சாருக்கு இன்­னும் கூட இந்த விஷ­யம் தெரி­யாது. அந்த பெண் அற்­பு­த­மாய் பாடி­யி­ருப்­ப­தாக ராஜா சாரே சொன்­னார்."
சினிமா எடுக்­கும் முயற்­சி­யில் கோடம்­பாக்­கத்­தில் வாழ்வை அட­மா­னம் வைத்து போரா­டும் எத்­த­னையோ உதவி இயக்­கு­நர்­க­ளுக்­கான ஒரு மாற்று வழியை ஜூலி­யன் திறந்து விட்­டுள்­ளார். அவ­ரின் இந்த புது­மை­யான முயற்­சிக்­கா­க­வும், இளை­ய­ரா­ஜா­வின் இசைக்­கா­க­வும்... நிச்­ச­யம் இந்த படத்­தைப் பார்க்­க­லாம்.