கேப்டவுன் டெஸ்ட்: இந்தியா ‘அவுட்’

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018 06:42


கேப்டவுன்:

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்ப இந்தியா 72 ரன்னில் பரிதாபமாக தோற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. இதில்,டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி, முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அறிமுக வாய்ப்பு பெற்றார். தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. டிவிலியர்ஸ் (65), கேப்டன் டுபிளசி (62) அரைசதம் அடித்தனர். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 4, அஷ்வின் 2, பும்ரா, பாண்ட்யா, முகமது ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின் தனது முதல் இன்னிங்சை துவக்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பாண்ட்யா அதிகபட்சமாக 93 ரன் விளாசினார். தென் ஆப்ரிக்கா தரப்பில் பிலாண்டர், ரபாடா தலா 3, ஸ்டைன், மார்கல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின் 77 ரன் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்சை தென் ஆப்ரிக்கா துவக்கியது. மார்க்ராம், எல்கர் இருவரும் சிறப்பான துவக்கத்தை கொடுத்தவர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த நிலையில், பாண்ட்யா வேகத்தில் மார்க்ராம் சரிந்தார். அதிரடியாக விளையாடிய இவர் 34 ரன் (43 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். அடுத்து இரவு ஆட்டக்காரராக ரபாடா களம் வந்தார். தொடர்ந்து அசத்திய பாண்ட்யா, எல்கர் (25) விக்கெட்டை வீழ்த்தினார். 2ம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன் எடுத்தது. ரபாடா (2), ஆம்லா (4) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாத நிலையில் ரத்தானது.

இதையடுத்து போட்டியின் நான்காம் நாளான  வருணபகவான் கருணை காட்ட ஆட்டம் துவங்கியது. முகமது ஷமி வேகத்தில் தொல்லை கொடுத்தார். இவரது வேகத்தில் ஆம்லா (4), ரபாடா (5) சரிந்தனர். பும்ரா பந்தில் கேப்டன் டுபிளசி ‘டக்-அவுட்’ ஆனார். குயின்டன் டி காக் (8) வெளியேறினர். தொடர்ந்து அசத்திய ஷமி, பிலாண்டரை (0) பெவிலியனுக்கு அனுப்பினார். புவனேஷ்வர் பந்தில் மகராஜ் (15), மார்னே மார்கல் (2) சரணடைந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த டிவிலியர்ஸ் (35), பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 130 ரன்னுக்கு ஆல்&அவுட் ஆனது. ஸ்டைன் (0) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா, ஷமி தலா 3, புவனேஷ்வர், பாண்ட்யா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

வெற்றிக்கு 208 ரன் தேவை என்ற நிலையில் தனத இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு முரளி விஜர் (13), தவான் (16) சொதப்பினர். புஜாரா (4) ஏமாற்றினார். கேப்டன் விராத் கோஹ்லி 28 ரன் எடுத்த நிலையில், பிலாண்டர் வேகத்தில் சரிந்தார். ரோகித் சர்மா (10), சகா (8), பாண்ட்யா (1) ஏமாற்றினர். ஓரளவு தாக்குப் பிடித்த அஷ்வின் 37 ரன் எடுத்தார். பிலாண்டர் வேகத்தில் முகமது ஷமி(4), பும்ரா (0) வெளியேற இந்தியா 42.4 ஓவரில் 135 ரன்னுக்கு பரிதாபமாக ஆட்டமிழந்ததோடு 72 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. புவனேஷ்வர் குமார் (13) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் அபாரமாக பந்து வீசிய பிலாண்டர் 6 (15.4-4-42-6) விக்கெட் வீழ்த்தினார். மார்கல், ரபாடா தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகனாக பிலாண்டர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் செஞ்சுரியனில் வரும் 13ம் தேதி தொடங்குகிறது.