கண்ணியம் காத்தது நீதிதுறை – கவனத்தில்கொள்ளுமா அரசு

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2018

தமிழகத்திற்கு ஒரு நீண்ட பாரம்பரிய வரலாறு உண்டு. காங்கிரஸ், ஆளுங்கட்சியாக இருந்து அதன் அந்திம காலம் நெருங்கிபொழுது, மொழி பிரச்சினையும் அரிசி விலையும் இறுதி கால முத்தாய்ப்புகளாக அமைந்தன.


திமுக ஆட்சிக் காலம் விவசாயிகளின் போராட்டம் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி இடையீடுபட்டது.

அதிமுக ஆட்சி ஒரு கல்யாணம் காரணமாக எதிர்பாராத காலத்தில் நெருக்கடியோடு முற்றுப்புள்ளியை சம்பாதித்து மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக, ஜெயலலிதாவின் மறைவால் தள்ளாட்டம் கண்டது. ஆனால், ஆட்சி எந்திரம், ஆட்சி அமைப்புகள், மக்களின் ஜனநாயக பண்பு காரணமாக மீண்டும் காலுன்ற முடிந்தது.

நித்திய கண்டம் பூர்ண ஆயுள் என்ற நிலையில் அதிமுக அரசு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் வேளையில், இன்றைய சமூகத்தின் இயல்பான அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர் துறையை பலப்பரிட்சைக்கு அழைக்கும் சூழல் தோன்றியுள்ளது.

தமிழகத்தின் போக்குவரத்து துறையின் சமீப காலக் கொள்கை குறிப்பின்படி அரசு போக்குவரத்து கழகங்களில் ஒட்டுமொத்தமாக 38,266 பேர் பணியாற்றுகிறார்கள். அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கை கொள்கை குறிப்பில் தரப்படாததால் அதனை சேர்த்துக்கொள்ள முடியவில்லை. இந்த அளவு எண்ணிக்கை உடைய தொழிற்சங்க அமைப்பு ஏதாவது தமிழகத்தில் இருக்குமா என்றால், இல்லை என்றுதான் சொல்லலாம்.

ரயில்வேயை விதிவிலக்காகக் குறிப்பிடலாம். ஆனால், அது என்றும் 100 சதவீத சேவை அமைப்பாகவே உள்ளது. அதனால், தமிழக போக்குவரத்து கழகங்களோடு அதனை ஒப்பிடுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறலாம்.

தமிழகத்தின் போக்குவரத்து கழகங்கள் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை பிரச்சினைகளின் கொள்கலன்களாகவே அவை இருந்து வந்துள்ளன.

மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே எத்தனை கலவரங்கள். இவையெல்லாம் என்றும் அரசுக்கும் போலீஸுக்கும் தலைவலியாகவே இருந்து வந்துள்ளது.

இப்பொழுது, போக்குவரத்து கழகங்களில் இடம்பெறும் வேலைநிறுத்தம் ஒரு பெரிய அரசியல் நெருக்கடியாகவே வெளிப்பட்டுள்ளது எனலாம்.

தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சமரச தீர்வினை எட்டுவதற்காக, உருவாக்கப்பட்ட அமைப்பு, தொழிலாளர் நலத்துறை. இங்கு, போக்குவரத்து கழகங்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களின் பிரதிநிதிகள் என்று குறிப்பிட முடியாத சிலரைக் கொண்ட சங்கங்களை எல்லாப் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றுகிற தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக சிலரை தமிழக தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகங்கள் அங்கீகரித்து 12(3) ஒப்பந்தம் ஒன்றை தொழிலாளர்கள்மீது திணித்திருக்கிறார்கள்.

நிர்வாகமும் தொழிலாளர் சங்கங்களும் நேருக்கு நேர் போடும் ஒப்பந்தங்கள் தொழிற் தகராறுகள் சட்டம் 18(1) விதியின் கீழ் வருகின்றன.

சமரச பேச்சுக்கு உதவுகின்ற தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகங்கள் முன் நிர்வாகமும் தொழிலாளர் சங்கங்களும் கையெழுத்திடுகின்ற ஒப்பந்தம் 12(3) வகையைச் சேர்ந்தது. 18(1) வகை ஒப்பந்தம், கையெழுத்திட்டவரை மற்றும் கட்டுப்படுத்தும். ஆனால், 12(3) வகை ஒப்பந்தம் அந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றுகின்ற எல்லோரையும் கட்டுப்படுத்தும்.

பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற நேரத்தில், ஏற்றுக்கொள்ளமுடியாத ஒப்பந்தத்தை, ஏற்றுக்கொள்ள சட்ட அங்கீகாரம் அளிக்கும் வேலையை தமிழக தொழிலாளர் துறை செய்துள்ளது. இது, துரோகம் அல்லவா.

இதைச் செய்ய வைத்தது தமிழக அமைச்சர்கள்.

தொழிலாளர் துறையை துரோகம் செய்ய வைத்தது தமிழக அமைச்சர்கள். இப்பொழுது நாம் யாரை குறை சொல்ல. பேய் அரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள் என்றார் கவிஞர் பாரதி.


சட்டம் மீறலே சட்டமாகும்பொழுது தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியும்.

அப்பொழுதும்கூட நீ வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்று நம்முடைய நீதிமன்றங்கள் உரத்த குரலில் உத்தரவிட்டன.

வாதியாக, பிரதிவாதியாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆஜராகாத நிலையிலேயே நடந்தது சட்டவிரோத வேலை நிறுத்தம் என்று முத்திரை குத்தப்பட்டது.

தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ததற்கா, வேலையை விட்டு தூக்கலாம் என்றும் அனுமதியளிக்கப்பட்டது.

இந்த சம்பளம் போதாது என்றால், கூடுதல் சம்பளம் தரும் இடத்திற்கு வேலைக்கு போ என்று மனமிரங்கி உத்தரவும் போட்டார்கள்.

ஆனால், தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த முறை, அசைந்துகொடுக்க தயாராக இல்லை. ஓய்வூதியம் வாங்க வேண்டிய தொழிலாளர்களுக்கு கட்டிய பிஎஃப் பணமே மீண்டும் கிடைக்கவில்லை. 7 ஆண்டு கால கணக்கு இது.

ஓய்வுபெற்ற பின் 7 ஆண்டுகளாக அலுவலக வாயிலில் வந்து காத்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை தினமும் பார்த்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்காக பேருந்தில் கால் வைக்க எப்படி மனம் வரும். நாளை நாமும் ஓய்வுபெறும்பொழுது, நமக்கு வரவேண்டிய ஓய்வூதியம் எப்படி கிடைக்கும் என்ற கேள்வி அவர்கள் மனதில் மாம்பழத்து வண்டாக குடைந்தது.

விளைவு, யாரும் கூறாமலே, யாரும் எதிர்பாராத நேரத்தில் வேலை நிறுத்தம் வெடித்தது. அப்பொழுதும்கூட பேருந்துகளை சாலையில் நிறுத்தாமல், பேருந்து நிலையங்களில் நிறுத்தாமல், டெப்போக்களில் நிறுத்திவிட்டு வெளியேறினார்கள் தொழிலாளர்கள்.

நாளை டிஸ்மிஸ், நாளை மறுநாள் புதிய ஊழியர் தயார் என்றெல்லாம் அறிவிப்புகள் பறந்தன. ஆனால், பேருந்துகளுக்கு அறிமுகம் ஆகாத புதிய டிரைவர்கள் சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனங்களை குறிவைத்து பாய்ந்து நசுக்கின. உயிர்கள் பறிபோயின.

வழக்கம் போல வழக்காடுவதையே வாழ்க்கையாக கொண்ட சிலர் வழக்கு போட்டார்கள். அந்த வழக்குகளில் விசாரணைக்கு எடுக்கும்போதே, நீதிமன்றங்கள் வேலை நிறுத்தத்தை தடை செய்தன.

2, 3, 4 என நாட்கள் பறந்தன. வேலை நிறுத்தம் வலுவானது. இந்நிலையில் இன்னும் வேலை நிறுத்தம் வலுவானதை உணர்ந்த நீதிமன்றம், முழு விவரங்களையும் அறிய வாய்ப்பு கிடைத்தது. நிலைமையை நேர் செய்ய இதுவே தருணம் என தான் போட்ட உத்தரவுகளை வாபஸ் பெற்றுக்கொண்டது நீதிமன்றம். நீதி தேவதையின் கண்ணியம் நிலை நாட்டப்பட்டது.

நிலமையை சீர்செய்வது இப்பொழுது, அரசின் பொறுப்பு என நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மீறப்பட்ட, எண்ணற்ற உத்தரவுகளோடு இதையும் ஒன்றாக சேர்த்துக்கொள்ள அமைச்சர்களும், அரசும் தயாராக உள்ளதா என்பதுதான் இன்றைய கேள்வி.

தொழிலாளர் துறையோடு சம்பந்தப்பட்டதாக தொழில்நிறுவனங்களும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால், அந்த இலாகாவுக்கு தொழிலாளர் துறை என்று தான் பெயர். தொழில்துறை என்று பெயர் இல்லை. தொழில் துறை என்ற பெயரில் வேறுஒரு துறை உள்ளது. இந்த பெயரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ கூட்டத்தில் கோரப்பட்டது. அதற்கு ராஜாஜி கூறிய பதில், மிகவும் பரிசீலிக்கத் தகுந்தது.

தொழிலாளர்களுக்கு நியாயம் பெற்றுதர என்னாலும் முடியாது, உன்னாலும் முடியாது, இந்த அரசாலும் முடியாது. பெயரையாவது வைத்துக்கொண்டிருந்து போகட்டும். அதையும் பறித்தால் அவன் கையில் வைத்திருக்கின்ற சுத்தியலை நம் தலையில் போட்டுவிடுவான். இந்த கருத்து இன்று பொருந்துமா என்பதை கூற முடியாது.

ஆனால், உள்ளாட்சி தேர்தல் தலைவாயில் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை விஜயபாஸ்கரும், இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் அறிவார்கள்.

தமிழகமெங்கும் தினந்தோறும் ஒரு நாளைக்கு 92.55 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயண் செய்கின்ற டிரைவர்களும், கண்டக்டர்களும் ஒரு செய்தியை மூலை முடுக்கெல்லாம் பரப்புவதற்கு ஒரு நாள் போதாதா? அல்லது இரண்டு நாளாகுமா!

அடுத்தது, சட்டமன்றத் தேர்தல் வருமா? ஆட்சி மாறுமா? என்ற கேள்வி குறி எல்லார் மனதிலும் உள்ளது.

இதற்கு விடையை தயாரித்து, அதனை நிலைநாட்டக்கூடிய வல்லமை யார் கையிலும் இல்லை. ஏனெனில் அதற்கான விடை தேர்தல் ஆணையத்தில் பிறப்பெடுத்து, தனபால் தவழவிட்ட உத்தரவுகளின் அடிப்படையில், உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையாக அமையக்கூடும். அந்த ஆணை இடியாக அமைந்தால், மேல்முறையீடு செய்து தப்பித்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு நிரந்தர பாதுகாப்பு அல்ல.

இத்தகைய இக்கட்டான சூழலில் சமூகத்தின் முக்கியமான, அங்கம் ஒன்றை விரோதியாக்கிக்கொள்ள ஏன் அரசு முயற்சி எடுக்க வேண்டும். அதுதான் புரியவில்லை.

காலம் இன்னும் கடந்துவிடவில்லை. நாளையோ நாளை மறுநாளோ பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்களை அழைக்காமலேயே 2.57 பெருக்கல் காரணியோடு ஊதிய உயர்வு கேட்டார்கள். அதை தந்திருக்கிறோம். ஓய்வூதியர்களுக்கான பாக்கி காசோலைகளாக சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கலாம். ஆனால், உடனே பணிக்கு திரும்புமாறு போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிடும் நிலைதான் உள்ளது.

சிம்ஸன் போராட்டம், திமுக அரசுக்கு திருப்பு முனையாக அமைந்தது. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் அதிமுக அரசுக்கு திருப்பு முனையாக அமையக்கூடாது.


கட்டுரையாளர்: க. சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation