சூரியன் வழிபட்ட கும்பகோணம் நாகேஸ்வரர்!

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018பொங்கல் நன்னாளை ஒட்டி, சூரியன் வழிபட்ட கும்பகோணம் நாகேஸ்வரர் பற்றி அறிந்து கொள்ளலாம். தை மாதத்தில் இங்கு சென்று வழிபடும் தம்பதிகள் ஏழு பிறப்புகளிலும் இணைந்து வாழலாம்.

தல வரலாறு: ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக் கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் பூமியை சுமக்க அவனால் இயலவில்லை. உடல் சோர்வு ஏற்பட்டது. எனவே, கயிலாயம் சென்று சிவபெருமானிடம், உலகைத் தாங்குவதற்கு உரிய சக்தியை தரும்படி கேட்டுக்கொண்டான். ஆதிசேஷனின் முறையீட்டுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், எந்தச் சூழலிலும், எவ்வளவு காலமானாலும் ஒரே ஒரு தலையினால் இந்த உலகைத் தாங்கும் சக்தியைத் தருவதாக உறுதியளித்தார். இதன் பிறகு ஆதிசேஷனுக்கு பரிபூரண சக்தி கிடைத்தது.

ஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்தது. பிரம்மா தன் படைப்புக்கருவிகளை, அமுதம் அடங்கிய ஒரு கும்பத்தில் வைத்து மிதக்க விட்டார். சிவன் அந்த கும்பத்தின் மீது ஒரு அம்பு எய்தார். அப்போது கும்பத்திலிருந்த வில்வ இலை சிதறி ஒரு இடத்தில் விழுந்தது.

ஆதிசேஷன் அந்த இடத்தில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். நாகராஜனான ஆதிசேஷன் பூஜித்ததால் அந்த சிவனுக்கு ‘நாகேஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. வில்வநேசர், பாதாள பீஜநாதர், மடந்தை பாகர், செல்வபிரான் ஆகிய பெயர்களும் இந்த சிவனுக்கு உண்டு.

சிறப்பம்சம்: இத்தலத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் உள்ளது. உள்ளே சென்றதும் இடப்பக்கம் நந்தவனமும், சிங்கமுக தீர்த்த கிணறும் இருக்கின்றன. வலப்பக்கம் அம்பாள் பிருகன்நாயகி சன்னிதியும், ஆனந்த தாண்டவ நடராஜர் சபையும் உள்ளன.

இந்த சபை தேர் வடிவத்தில் உள்ளது. இரு புறத்திலும் உள்ள கல் தேர் சக்கரம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இரண்டு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகள் இடம்பெற்றுள்ளன என்பதால், இந்த மண்டபத்திற்குள் நுழைந்தாலே கிரகதோஷம் நீங்கும் என்பர். நடராஜரின் நடனத்திற்கு ஏற்ப தாளம் போடும் பாவனையில் சிவகாமி அம்மையும், வேறு எங்கும் இல்லாத விசேஷமாக நடராஜரின் அருகில் மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் கண்டு ரசிக்கத்தக்கது.

காவல் தெய்வமான படைவெட்டி மாரியம்மன், வலஞ்சுழி விநாயகர், அய்யனார், சப்தமாதர், சுப்பிரமணியர், சப்த லிங்கங்கள், வைத்தீஸ்வரர், சோமாஸ்கந்தர், சண்டேஸ்வரர், தண்டூன்றிய விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, மகா காளி, அக்னி வீரபத்திரர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இது சூரியன் மற்றும் ராகு தோஷ நிவர்த்தி தலமாக உள்ளது. இக்கோயிலுக்குள் மகா காளி சன்னிதியும், எதிரே ருத்ர தாண்டவமாடும் அக்னி வீரபத்திரர் சன்னிதியும் உள்ளன.

ஞாயிறு விசேஷம்: இத்தலத்தில் சூரிய பகவான் சிவலிங்க பூஜை செய்துள்ளார். சித்திரை மாதம் 11,12,13ல் லிங்கத்தின் மீது ஒளிபடும். இங்குள்ள காளி, வீரபத்திரர் சன்னிதிகளில் சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 -– 6.00க்குள் ராகுகால வேளையில் பூஜை செய்தால் சகல நோய்களும் நீங்கும். தை மாதத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்வதால், இறுதிக்காலத்தில் உண்டாகும் மரண துன்பம் அறவே இல்லாமல் போகும். ரிஷபத்தின் முன் நிற்கும் உமையொரு பாகனை ஞாயிறன்று வழிபட்டால், பிரிந்த தம்பதியர் ஒன்றுகூடுவர். பிரியாமல் இருப்பவர்கள் ஏழேழு ஜென்மங்களும் சேர்ந்து வாழ்வர் என்பது ஐதீகம்.

பிச்சை எடுத்து கட்டிய கோயில்: 1923ம் ஆண்டில் இந்த கோயில் புதர் மண்டிக்கிடந்தது. பாடகச்சேரியை சேர்ந்த ராமலிங்க சுவாமி என்பவர் தனது கழுத்தில் பித்தளை செம்பு ஒன்றை கட்டிக்கொண்டு பிச்சை எடுத்து, சிறுகச்சிறுக பொருள் சேர்த்து திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வைத்தார். நாகேஸ்வரர் லிங்க வடிவில் உயரமான ஆவுடையாருடன் காட்சி தருகிறார். ஆனால் பாணம் சிறிதாக இருக்கிறது.

அம்பாள் பெரியநாயகி தெற்கு நோக்கிய சன்னிதியில் அபயகரத்துடன் காட்சி தருகிறாள். இத்தலத்திலுள்ள சூரியன், பிரளயகால ருத்திரர், விஷ்ணு துர்க்கை சன்னிதிகளை ஒருசேர வழிபட்டால், எவ்வளவு பெரிய துன்பமும் தீர்ந்து விடும். சூரிய திசை நடப்பவர்களும், ஜாதகரீதியாக சூரியனால் சிரமப்படுபவர்களும் சூரியனையும், நாகேஸ்வரரையும் வணங்கி நிவாரணம் பெறலாம். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 90வது தலம்.

இருப்பிடம் : கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., கும்பேஸ்வரர் கோயிலின் கிழக்கே உள்ளது.

நேரம்: காலை 6.00 -– 12.30, மாலை 4.30 –- இரவு 9.00 மணி