எறும்பு! (நீத்தல் விண்ணப்பம்) – கிருபானந்தவாரியார்

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018

எல்லா உயிர்களும் வெவ்வேறு எண்ணங்களையுடையன. ஒருவர் எண்ணுவது போல் மற்றொருவர் எண்ணுவதில்லை; ஆனால், துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எல்லா உயிர்களும் ஒருமனதாக எண்ணுகின்றன. இந்த ஒன்றில் யாருக்கும் கருத்து வேற்றுமையில்லை.

அரசனுக்கும்தான் ஏதாவது துன்பம் இருக்கின்றது; ஆண்டிக்கும் துன்பம்; கோடீஸ்வரனுக்கும் துன்பம். துன்பம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வருகின்றது. துன்பம் இல்லாதவர்களே கிடையாது. பொருள் நிரம்பி இருந்தால், புதல்வர் பேறு இல்லாமல் இருக்கும். மக்கட்பேறு இருந்தால் செல்வம் இராது.  இரண்டும் இருந்தால் உடல்நலம் இராது. சிலருக்கு உத்தமமான பத்தினி இராது; சிலருக்கு நல்ல பிள்ளைகள் அமையாது.

இரு யானைகளின் இடையே கொசு!

சில குடும்பங்களில் தாய் மருமகளை துன்பப்படுத்துவாள். மகன் என் செய்வான்? தாய் பக்கம் சேர்ந்து பேசினால் மனைவியின் மனம் வருந்தும்; மனைவியின் பக்கம் சேர்ந்து பேசினால் தாய் மனம் வருந்தும். ஆகவே, இரு பக்கமும் சார இயலாது மனந்தளரும்.

மற்றும் பல்வேறு வகையில் இரு பக்கமும் திரும்ப முடியாதபடி இடர்கள் வரும். இரண்டு யானைகள் மோதுகின்ற போது, அதற்கிடையில் ஒரு கொசு அகப்பட்டுக் கொண்டால் அதன் கதி என்னவாகும்?

ஒரு சிலருக்கு அருள் தாகம் அளவுக்கு மேல் எழும். அருள் தாகத்தை தணிக்க எங்காவது ஆசாரியனை நாடி அல்லது இமயம் முதலிய புனித இடத்தை நாடிச் செல்ல வேண்டும் என்ற வேகம் எழும். அப்போது மனதில் ஒரு சிந்தனைப் போட்டி நிகழும்.

‘‘நாம் இமயம் அல்லது புனிதத்தலம் எங்காவது சென்று குருமொழியை பெற்று உய்வு பெற வேண்டாமா?’’

‘‘ஆமாம்! அப்படிப் போவதாயின் நம்பியிருக்கின்ற மனைவியையும் இளம் குழந்தைகளையும் அவலநிலையில் விடுத்துப் போன பாவம் வருமே?’’

‘‘நம்மையே நம்பியிருக்கின்ற இவர்களை காப்பது நமது கடமையல்லவா? கடமையை மறப்பது மடமை. ஆகவே, இந்த கடமைகளை செய்துகொண்டே பக்தி செய்தால் முக்தி வராதா?’’

‘‘குடும்பத்தில் இருந்தால் அதிக நேரம் உலக விவகாரத்தில்தான் கழிகின்றது. குடும்பத்திலும் பற்று, கடவுளிடத்திலும் பற்று.’’

‘‘இது இரண்டு படகுகளில் கால் வைப்பதுபோல ஆகின்றது. ஆகவே, நாம் குடும்பத்தை விடுத்தாலன்றி உய்வு ஏற்படாது. ஆகவே, இந்த வில்லங்கத்தை விட்டு, ஒழிக்க வேண்டும்.’’

‘‘அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல் வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு’’ என்பது திருவள்ளுவர் வாக்கு. ஆகவே, எல்லாவற்றையும் விட்டுத் தொலைத்தாலன்றிக் கடைத்தேற முடியாது.

– தொடரும்