மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 85

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018

 நஞ்சை உண்ட பிறகும் திருநாவுக்கரசர் எந்தவித தீங்கும் அடையவில்லை.  முன்பொரு காலத்தில் பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷம் சிவபெருமானுக்கு அமுதமாயிற்று என்றால், அவர்தம் அடியார்க்கும் இச்சிறு நஞ்சும் அமுதமாகியதில் வியப்பொன்றுமில்லை!

  நஞ்சு கலந்த உணவை திருநாவுக்கரசர் உண்டு உயிர்  பிழைத்திருப்பதைக் கண்ட சமணர்கள் திடுக்கிட்டு, ‘இவனுக்கு நஞ்சும் அமுதமாயிற்று, இவ்விடத்தில் இனியும் இவன் உயிர்  பிழைத்திருந்தால் நமக்கெல்லாம் ஒரு முடிவே நேர்ந்துவிடும்’ என்று பயந்தார்கள். அதனால் முறை தவறி செயல்புரியும் அரசனிடம் அவர்கள் சென்று, ‘‘நாம் நஞ்சு கலந்த உணவை அவனுக்கு ஊட்டியும் அவன் சாகவில்லை. நமது சமண சமயத்தில் விஷம் தீர்ப்பதற்கு எளிதான ஒரு மந்திர சாதனை உண்டு! அதை அவன் நன்கு கற்றிருப்பதால் விஷத்தால் சாவு நேராதபடி தடுத்துக் கொண்டான். அவனை ஒழிக்கும் வகை இனி நம்மிடம்  ஒன்றுமில்லையென்றால், எங்கள் உயிரும்  உம் அரசாட்சியும் ஒழிந்து விடுவது திண்ணம்’ என்று சூழ்ச்சியோடு கூறினார்கள்.

 அவர்களுடைய சொல்லைக் கேட்டு மதிகெட்ட மன்னனும், ‘நம் மதத்தை கெடுத்த அப்பகைவனை இனி தண்டித்து ஒழிக்கும் வகை என்ன?’ என்று கேட்டான்.

‘மன்னா! அவனது மந்திர சாதனையை ஒழித்திட வேண்டுமென்றால், உமது பட்டத்து யானையை அவனெதிரே விட்டு கொல்லும்படி ஏவுக!’ என்று கூறினார்கள். அரசன் ` அப்படியே நம் மதயானையை ஏவி விடுக!’ என்று ஆணையிட்டான். அவன்  பூபாலனாகக் கொலுவீற்றிருந்தும் ஆட்சியில் நெறி தவறியதால் கொலைத் தொழில் புரியும் புலையனாகவும் மாறிவிட்டான்.

 அரசனின் ஆணை பிறந்ததும்  கோபாதிசயம் என்னும் மதயானை ஒரு கருங்குன்று போல் புறப்பட்டு தன் கூடாரத்தைத் குத்தி பிளந்துகொண்டு வெளிப்பாய்ந்தது. மாடங்களை இடித்து, மண்டபங்களை எடுத்தெறிந்தது, குத்துக்கோல் வீச்சுக்காரர்களின் தலைகளை கல்வீச்சில் இடறியது. யானை வேடமெடுத்து வரும் யமனைவிட வலியமையாகத் தோன்றியது. அது தன் கழுத்தில் கட்டிய கயிற்றையும், காலில் பூட்டிய சங்கிலியையும் அறுத்தது. இடிபோல பிளறியது. வானத்துப் பறவைக் கூட்டம் வெகுண்டு மிரள, அந்த யானை தன் தும்பிக்கையை தூக்கிச் சுழற்றியது. மதநீர் பொழிய வெறி கொண்டு எதிரே பாய்ந்தது. அதன் காலடிகளை தாங்காமல் நிலம் நெளிய காற்றினும்  கடிதென ஓடி ஊழித் தீயைப் போல் பாய்ந்து சென்றது. வழியில் குதிரைக் கூட்டங்கள் குலைந்து மரியும்படி அந்த மதயானை மிகவும் மூர்க்கமாக பாய்ந்தோடியது. தன் வலிய கொம்புகளால் மதில்களையும் திண்ணைகளையும் முறித்தது. ஆங்காங்கேயுள்ள அலங்காரச் சின்னங்களையெல்லாம்  அழித்தெறிந்தது. இவ்வாறு விளையாடியவாறு, அந்த யானை ஒரு விசாலமான வெளியிடத்தில் வந்து சேர்ந்தது.

 வஞ்சனையால் திருநாவுக்கரசரைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துள்ள கொடியவர்கள் அந்த மதயானையை நாவுக்கரசர் எதிரே செலுத்தி அவரைக் கொல்லும்படி ஏவினார்கள். அதைக் கண்டு நாவுக்கரசர் திடுக்கிட்டு நடுங்கவில்லை! விடைமீது ஏறும் சிவபெருமானைத் தியானித்தபடி நின்று, ஒரு திருப்பதிகம் பாடினார்,

‘‘கண்ணவெண் சந்தனச் சாந்தும்

சுடர்த்திங்கள் சூளாமணியும்

வண்ணவுரிலை உடையும்

வளரும் பவள நிறமும்

அண்ணல் அரண்முரணேறும்

அகலம் வளாய அரவும்

திண்ணன் கெடிலப்  புனலும்

உடையார் ஒருவர் தமர்நாம்

அஞ்சுவதி யாதொன்றும் இல்லை.

அஞ்ச வருவதும் இல்லை’’    

– தேவாரம்.

இவ்வாறு தொடங்கும் திருப்பதிகத்தை உலகத்தோர் உய்யும்படி எடுத்து திருநாவுக்கரசர் மகிழ்ச்சியோடு பாடினார். வஞ்சகம் ஏவிய மதயானையை அவர் ஏறிட்டு நோக்கியபடியே எதிர் நின்று, ‘‘வெஞ்சுடர் மூவிலைச் சூலவிரட்டர் தம் அடியோம் நாம்! அஞ்சுவதில்லை!’’ என்றே அழுத்தி கூறி அருந்தமிழில் இனிய பதிகம் பாடியவாறு இறையன்பிலே உறைந்து நின்றார்.  அவருடைய அன்பு நிலையைக் கண்டதும், மதயானை அவரை வலம் வந்தது. எத்திசையோரும், காணும்படி தாழ்ந்து, தரையில் பணிந்து வணங்கி எழுந்து அப்புறம் சென்றது. ஆனால் அதன் மீதிருந்த பாகர்கள் அதைக் கட்டுப்படுத்தி திருப்பி திருநாவுக்கரசரைக் கொல்லென்று காட்டி மீண்டும் அதை ஏவினார்கள்! ஆனால் யானையோ அவர்களையே கீழே தள்ளிக் கொன்றது! பிறகு சமணர்கள் மேலே பாய்ந்து கொல்ல ஓடிற்று. ஆங்காங்கே நின்ற சமணர்களைத் தேடி ஓடி அவர்களைக் கதிகலங்கச் செய்தது. அவர்களில் சிலரை மிதித்தும் கிழித்தும் கொன்றது. இவ்வாறு நகர் முழுவதையும் கலக்கி அந்த யானை பலவாறாகவும் சுழன்று திரிந்தது. அதனால் அரசன் துயரக்கடலில் மூழ்கினான்.

 அந்த மதயானைக்குத் தப்பிப் பிழைத்த சமணர்களெல்லோரும் ஒன்று கூடினார்கள். மானம் இழந்து மதிமயங்கி, மனம் வருந்தியவர்களாய் அவர்கள் பல்லவ மன்னனிடம் விரைந்து சென்று, அவனது காலில் தனித்தனியே விழுந்து புலம்பினார்கள்.  மேன்மை நெறி இழந்த மன்னன் வெகுண்டு, அவர்களை நோக்கி, ‘இனி செய்வது என்ன?’ என்று சீறினான்.

 அதற்கு அச்சமணர்கள், ‘‘நம்முடைய சமய நூல்களிலிருந்தே தருமசேனன் கற்றுக்கொண்ட மந்திர வலிமையினால் நாம் ஏவிய யானையைக் கொண்டே  எதிர்த்தேவி எங்கள் பெருமையை அழித்தான். உம் ஆட்சிமுறையையும் சிதைத்து அவமானப்படுத்தினான்! அவன் அழிந்து போனால்தான் உமக்கு ஏற்பட்ட அவமானமும் தீர்ந்து போகும்! பொங்கும் நெருப்பு அழிந்து போனால், அதன்பின் புகையும் அகன்று போய்விடுமல்லவா?’’ என்றார்கள்.