கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 110

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2018சினிமா சிகரத்தைப் பிடித்த ரஜினிகாந்த் அரசியல் வானத்தை அளப்பாரா?

ஒரு செய்தி வரும் என்று பல வருடங்களாக காத்திருந்து, அது கடைசியில் டிசம்பர் 31ல் வருவதுபோல், ரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற கேள்விக்கு இப்போது விடை தெரிந்து விட்டது.

‘புலி வருது, புலி வருது’ என்று கடந்து 20 வருடங்களாக இருந்த எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியிருக்கிறது. புலி வரத்தான் போகிறது என்று தெரிந்துவிட்டது. ஆனால் அது தொடர்ந்து புலியாகத்தான் இருக்குமா என்ற கேள்வி சிலருக்கு உள்ளது!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்பது வெறும் கோஷம்தான், திரை பிம்பத்திற்கு கூடுதல் பொலிவு கொடுப்பதற்காக கையாளப்படும் ஒரு தந்திரம் என்று கூட சிலர் கருதிவிட்டிருந்தார்கள். செல்லுலாய்ட் புலி சினிமா தியேட்டருக்கு வரலாம், அரசியல் விவகாரத்திற்கு வரவே வராது என்ற அவர்களின் முடிவு இப்போது நிச்சயம் பொய்யாகியிருக்கிறது.

‘தமிழ் நாட்டில் அடுத்து வரும் சட்ட சபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று ரஜினிகாந்த அறிவித்துவிட்டார்!  அப்படிச் செய்ய அமைக்கப்படும் கட்சிக்கான கொடியைக் கூட உருவாக்கிக் கொண்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. வெற்றிக்கான வியூகங்கள்  வகுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர்., அறைகூவல் இட்டு, நிஜமாகவே தமிழ் நாட்டு முதல்வராகிவிட்ட சங்கதியைப்போல, முதல்வர் ஆகி, அரியணையில் அமர்ந்து, ‘இது எப்படி இருக்கு’ என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை ரஜினி கேட்கப்போகிறாரா?

அல்லது,  ரஜினியின் அரசியல் நுழைவு காலங்கடந்த ஒன்றாக அமைந்து,  சிவாஜியின் அரசியல் அத்தியாயத்தைப்போல் புஸ்வாணம் ஆகப்போகிறதா? அல்லது விஜயகாந்த்தைப்போல் திரிசங்கு சொர்க்கம் என்ற நிலை வருமா? இதுபோன்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

சென்னை அடையாறில் சிவாஜி மணிமண்டபம் திறந்த வைகப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற போது,  சிவாஜியின் அரசியல் வீழ்ச்சியைப் பற்றியும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

‘‘சிவாஜி ஸார் நடிப்பிலே மட்டும் இல்லை...அரசியலிலும் அவருடைய சந்ததிகளுக்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துட்டுப் போயிருக்கார்....அவர் அரசியல்ல தனிக்கட்சி ஆரம்பிச்சு..அரசியல்ல நின்னு, அவருடைய தொகுதியிலேயே தோத்துப்போயிட்டார்....’’ என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

அந்தத் தோல்வி, சிவாஜி கணேசனுக்கு அவமானம் இல்லை, அந்தத் தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம் என்று நடிகர் திலகத்தின்பால் உள்ள மரியாதை நிமித்தம் ரஜினி சப்பைகட்டுக் கட்டினாலும், சிவாஜிக்கு கிடைத்த அந்த அரசியல் அனுபவத்தின் பாடத்தைப் புட்டுவைக்க அவர் தவறவில்லை.

அந்தப் பாடம்தான், ‘‘அரசியலில் வெற்றி பெறுவதற்கு, சினிமாவில் கிடைக்கும் பேரு..புகழ்..செல்வாக்கு மட்டும் இருந்தால் போதாது,’’ என்பது.

இதை எத்தனையோ சினிமா மண்டையர்களும் கொண்டையர்களும் புரிந்துகொள்ளாமல், அவர்கள் பட்ட அவஸ்தைகள் அதிகம். ஒரே

எம்.ஜி.ஆர்., ஒரே ஜெயலலிதா என்பதுதான் தமிழ் அரசியல் சரித்திரத்தின் ஏடுகள் கூறும் பாடம்!

அதில்கூட, ஜெயலலிதாவின் சரித்திரம் ஒரு தனிவிதம். எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் நடித்து முடித்தவர். திரை உலகுக்கு முழுக்குப்போட்ட பின், எம்.ஜி.ஆரின் பாதையில் பயணிக்கத்தொடங்கி, மிகப்பெரிய எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்தித்து விட்டுத்தான்,  அரசியல் தலைவி என்ற அந்தஸ்தைப் பெற்றார்.  எம்.ஜி.ஆரின் ஒரே வாரிசாக உருவாகி ஒரு விதத்தில் அரசியல் செல்வாக்கில் அவரையே கூட மிஞ்சிவிட்டார்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பெற்ற முதன்மை ஸ்தானத்தைப் போன்ற, ‘முழுமுதல்’ அரசியல் தலைமை என்ற நிலை ரஜினிக்குக் கிடைக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி. துணை வேடங்களில் சினிமாவில் சிலர் நடிப்பதைப் போன்றோ, துணை நடிகர்களாகப் பலர் வந்துபோவதைப் போன்றோ ஏராளமானவர்கள் சினிமாத்துறையிலிருந்து அரசியல் மேடைகளுக்கு வந்துவிட்டுப் போகலாம். இன்னொரு எம்.ஜி.ஆர்., வருவாரா?  அந்த எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்தா,  என்பதுதான் தற்போதய கோடி ரூபாய் கொஸ்சின்!

தனக்கு அரசியல் அனுபவம் 1996லேயே வந்துவிட்டதாக ரஜினிகாந்த் சொல்லிக்கொண்டாலும், தமிழ் நாட்டு அரசியலுக்கு அவர் புதியவராகத்தான் தென்படுகிறார். ‘உங்கள் கொள்கை என்ன’ என்று ஏதேவொரு கேமரா நிருபர் கேள்வி கேட்டவுடன் ஆடிப்போய் தலை சுற்றுவதாக சொன்னாரே அதிலிருந்து அவருடைய அனுபவம் இன்மை விளங்கியது. எள் அளவுகூட கொள்கை இல்லாததுகள் கூக்குரலிட்டு தைரியமாக வலம் வரும் போது, இவருக்கு அந்த வார்த்தை ஏன் பயத்தை உண்டாக்கவேண்டும்? தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு கொள்கையாவது ஒண்ணாவது?

ஒவ்வொரு மனிதனுக்கும் கைகள் இருப்பதைப்போல் கொள்கைகளும் இருக்கத்தான் செய்யும் என்று சொல்லி அந்தக் கேள்வியை சமாளித்திருக்கலாம்.

‘உங்கள் கொள்கைகள் என்ன’ என்ற கேள்விக்கு, ‘நாடோடி மன்னன் படத்தில் எல்லா கொள்கைகளையும் சொல்லிவிட்டேன்’ என்றல்லவோ எம்.ஜி.ஆர்., பதில் கொடுத்தார்.

 ‘படையப்பா முதல் பாபா வரை என் படங்களை நுணுக்கமாகப் பாருங்கள்..அப்புறம் உங்கள் கேள்விகளுக்குப் பதில் தருகிறேன்,’ என்று ரஜினி ஒரு புதிய வசனம் உதிர்த்திருக்கலாம்.

‘நான் நடித்து, 1993ல் வந்த ‘எஜமான்’ படத்தைப் பாருங்கள்,’ என்றுகூட ரஜினிகாந்த் கூறியிருக்கலாம்.

‘எஜமான்’ படத்தில் ஒரு காட்சி. கிராமத்து மக்களின் வாக்குகளை, விலை கொடுத்து வாங்க திட்டம்போட்டிருக்கும் ஊழல் மன்னரான ஓர் அரசியல்வாதி, கலக்டருடன் வருகிறார்.

கிராமத்து மக்கள் வாக்குகளைப் போடச் செல்லாமல், ஒரு பெரிய உண்டியலில் அவர் கொடுத்த பணத்தைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கிராமத்துக்காரர் ஒருவரை அழைத்து, ‘‘யோவ்...இங்கே வாய்யா...உங்களுக்கெல்லாம் வோட்டுப் போட காசு கொடுத்தா, இங்கே வந்து என்னய்யா பண்ணிக்கிட்டிருக்கீங்க?’’ என்கிறார் அரசியல்வாதி!

‘‘நீங்க வோட்டுப்போடக் கொடுத்த காசை ஒண்ணா சேக்கத்தான் உண்டியல்ல போட்டுக்கிட்டிருக்கோம்,’’ என்கிறார் கிராமத்துக்காரர்!

‘‘ஏண்டா டேய்...எவன் அப்பன் வீட்டுக்காசை எவன் ஒண்ணா சேக்கறது. என் கிட்டக் காசு வாங்கிட்டு இங்கே வோட்டுப்போடாம கூத்தடிக்கிறீங்களாடா? யோவ் கலக்டர்..கேளுய்யா என்னான்னு...’’ என்கிறார் அரசியல்வாதி.

‘‘ஏன்யா..வோட்டுப் போடாம இருக்கிறது சட்டப்படி குத்தம்னு உங்களுக்குத் தெரியாதா?’’.  இது கலக்டர்.

கிராமத்துக்காரர், ‘‘எது சரி எது தப்பன்னு எங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கறது எங்க எஜமான ஒருத்தர்தான்,’’ என்று கூற, ‘யாருய்யா உங்க எஜமான்?’ என்று கலக்டர் கேட்க, கிராமத்துக்காரர், ‘‘ஜனங்கள்ளாம் யார் பின்னாடி இருக்காங்களோ அவர்தாங்க எங்க எஜமான்’’ என்கிறார்! (இப்படி, பதினைந்து வருடங்களுக்கு முன்பே, மக்கள் ரஜினிகாந்தின் பின்னே நிற்கிறார்கள் என்று கூறியாயிற்று).  

ஆனால் அதற்குப் பிறகு, ‘வானவராயர், கந்தவேலு வானவராயர்’ என்ற தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ரஜினிகாந்த் அன்றைக்கே கூறும் விஷயங்கள்தான், ‘இன்றை ஸிஸ்டம் (அமைப்பு) முற்றிலுமாக மாறவேண்டும்’ என்று அவர் சொல்வதற்கான அடிப்படை என்று கூறிக்கொள்ளலாம்.

நோட்டாவின் ஒருவிதத்தொடக்கம் என்று ரஜினி இன்று கூறிக்கொள்ளக்கூடிய காட்சியில், ‘வோட்டுப் போடாதே’ என்று தாம் சொன்னதாற்கான காரணங்களை ரஜினி கூறுகிறார்.

‘‘பதினைஞ்சு வருஷமா எங்க  கிராமத்துக்கு ரோடு போடுங்கன்னு கேட்டோம்...போடலை...

‘‘இந்த ஊரிலே இருக்கிற தெருக்களுக்கு விளக்குப் போடுங்கன்னு பதினஞ்சு வருஷமா கேடிட்டிருக்காங்க...போடலை...

‘‘குடிக்கத் தண்ணிக்கு சரியான ஏற்பாடு பண்ணிக்கொடுக்கச் சொன்னோம்..கொடுக்கலை....’’

 ....பெரிய வீர வசனம் மாதிரியெல்லாம் இல்லாம, எதுகை மோனைகளின் தோரணங்கள் எல்லாம் கட்டாமல், ‘எஜமான்’ படத்திலேயே அமைதியாக இப்படி எடுத்துச் சொல்லுகிறார் ரஜினிகாந்த்.

இப்படியெல்லாம் அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்துக் குருடர்களாக இருப்பதால், வோட்டுக்குக் கொடுக்கற காசை சேர்த்து, நாங்களே எங்கத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம் என்ற அர்த்தத்தில் ரஜினிகாந்த்  ‘எஜமான்’ படத்தில் பேசுகிறார்.

அன்று எஜமானாகப் படத்தில் சொன்னதை இன்று மக்கள் சேவகனாக நின்று, மக்களின் தேவைகளை, நேர்மையான முறையில், ஊழல் இல்லாமல் நிறைவு செய்யவேண்டும் என்று நினைக்கிறேன், அதுதான் என் கொள்கை என்று ரஜினிகாந்த் சொல்லலாம். அதுதான் ‘நாடோடி மன்னன்’ காட்டிய வழி! எம்.ஜி.ஆர்., என்ற வெற்றி நாயகரின் வழியைப் பின்பற்ற விரும்பாதவர்கள் யார்?

ரஜினியின் வெற்றிப்படமான ‘பாஷா’வில் ஒரு காட்சி. மாணிக்கம் என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுநராகப் புதிய வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பார், முன்னாள் பம்பாய் தாதாவான பாஷா.

ஓர் ஆட்டோ ஓட்டுநர் நோய்வாய்படும் போது, அவருக்கு ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்படும். ‘ஏற்பாடு செய்துவிட்டீர்களா’ என்று மருத்துவர் ஆட்டோக்காரரின் மனைவியை பார்த்து கேட்கிறார்.

அவர் பணம் இல்லாமல் தவிக்கிற போது, மாணிக்கம் கொடுத்தனுப்பிய பணம் வந்து சேரும். ‘‘அவர் நல்லா இருக்கணும்,’’ என்று ஆட்டோக்காரரின் மனைவி உணர்ச்சி வசப்படுவார்.

மாணிக்கம் அனுப்பிய ஆட்டோக்காரர், ‘‘நாம என்ன சொல்றது தாயி.. அதான் நாடே சொல்லுதே,’’ என்பார்!

‘பாஷா’ வந்து இருபத்தி மூன்று வருடங்கள் சென்றுவிட்டன. இன்றும் அந்த வசனம் மெய்யாகுமா? அல்லது அன்றே கூட அது வெறும் சினிமா வசனம் தானா? ‘பாஷா’வில் வரும் வாக்குப்படி நடந்தால், சட்டசபை தேர்தலில் அந்த நல்லுணர்வு வாக்குகளாக மாறும் சாத்தியக்கூறு இருக்கலாம்.

அரசியல் பிரவேச அறிப்புடன் ரஜினி தெரிவித்த இன்னொரு கருத்து, மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பது!   ‘‘நான் மீடியாக்காரனா கூறுகிறேன்...இந்த விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இரு,’’ என்பது சோ ஸாரின் எச்சரிக்கையாம். அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் செய்திகளைத் திரித்துக்கூறும் விஷயம் நடந்துகொண்டே இருக்கிறது. இதில் ரஜினிகாந்த் தொடர்பான ஓர் உதாரணம்.

சிவாஜி மணிமண்டபத்திறப்பு விழாவில் கமலஹாசனும் கலந்துகொண்டபோது நடந்த விஷயம் இது. அப்போது அரசியல் பிரவேசத்தைக் குறித்து ரஜினி தனது அறிவிப்பை வெளியிட்டிருக்கவில்லை. அந்த சமயம் பார்த்து கமலஹாசன் பொத்தென்று அரசியல் கோதாவில் குதித்துவிட்டிருந்தார். ‘‘சினிமா புகழைத்தாண்டி, அரசியலில் வெற்றி பெற வேறு ஏதோவொன்று வேண்டும், அது என்ன என்று மக்களுக்குத்தான் தெரியும். எனக்கு சத்தியமா தெரியாது,’’ என்று கூறிய ரஜினிகாந்த், கமலஹாசனின் திடீர் அரசியல் பிரவேசத்தை மனதில் கொண்டு, ‘கமலுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்,’ என்று கூறினார். அது நடபுணர்வோடு கூடிய ஒரு ஹாஸ்யம்...காயப்படுத்தாத நையாண்டி.

ஆனால் ரஜினிகாந்த பேசியதை லண்டனில் உள்ள ஒரு செய்தி ஸ்தாபனம் திரித்து வெளியிட்டது. ‘‘அரசியலில் ஒரு நடிகர் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அந்த ரகசியம் கமலுக்குத் தெரியும்’’, என்று ரஜினி சொன்னதாக அந்த ஸ்தாபனம் தவறாகப் பதிவு செய்தது.

சிவாஜியின் அரசியல் தோல்வியைக் கூட கமலை மனதில் வைத்துக்கொண்டுதான் ரஜினி வெளியிட்டாரோ என்று நினைப்பதற்கு இடம் இருந்த பேச்சில், வேண்டும் என்றே, ரஜினிக்குத் தெரியாது, கமலுக்குத் தெரியும் என்ற மாயத்தை அந்த செய்தி ஏற்படுத்தியது.

இதே போன்று, மதரீதியிலான உள்நோக்கம் கொண்டவர்கள்,  ‘ஆன்மிக அரசியல்’ என்ற ரஜினியின் சொற் பிரயோகத்தைப் பார்த்து அரண்டுபோயிருக்கிறார்கள். ஆன்மிக அரசியல் என்றால் இந்துத்துவா அரசியலா அல்லது இந்து மத அரசியலா என்று கூவுகிறார்கள். கீதை சுலோகத்தை மேற்கோள் காட்டித்தான், தன்னுடைய அரசியல் செய்தியை ரஜினி கூறினார். அவர் எந்த மதத்தையும் வெறுப்பவர் இல்லை என்றாலும், இந்து மதம் தொடர்பான ஆன்மிகத்தில் மிகப்பெரிய அளவில் நாட்டம் கொண்டவர். அதை எந்த நேரத்திலும் வெளியிடத்தயங்காதவர். இந்து மதம் மட்டும் எட்டிக்காய் என்ற கொள்கை உடைய திராவிட சூழலில் ரஜினியின் இத்தகைய போக்கும் மாறுதலான ஒன்றுதான். இது அவருக்கு சாதாகமாக இருக்கிறதா, பாதகமாக அமைகிறதா என்பது போகப்போகத்தான் தெரியும்.

(தொடரும்)