ஒரு பேனாவின் பயணம் – 141– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2018

‘ஊர்சுற்றிப் புராணம்’

 இந்திய கிரிக்கெட்டின்  காலம் என்பது கவாஸ்கரின் எழுச்சியோடு ஒத்துப்போனது.  இந்திய கிரிக்கெட்டின் எக்கு கோட்டையாகவும், கருப்பொருளாகவும் உருவாகி, இந்திய அணிக்கு ஒரு தனித்தன்மையும், சுயமரியாதையையும் தேடிக்கொடுத்தார் கவாஸ்கர்.

சாந்தமான இந்திய பாட்ஸ்மென்கள் வேகப் பந்து வீச்சுக்கு சுருண்டு கொண்டிருந்த காலம் அது! அப்போது இந்த `சின்ன எஜமான்’ (little master) கவாஸ்கர், அதை தகர்த்தெறிந்தார்.

உலகத்தின் மிகச்சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களை துணிச்சலோடு எதிர்கொண்டு ஒரு புதிய உத்துவேகத்தை இந்திய அணிக்குள் செலுத்தினார்.

1970-–80 கள் இந்த பத்தாண்டுகள் வேகப்பந்தை பதுங்கவைத்த, கவாஸ்கரின் பாட்டிங்கில் தொடங்கி, இந்தியா அதுவரையில் கண்டிராத வேகப் பந்து வீச்சாளரான கபில்தேவ் வுடன் முடிந்தது.

 இதே கால கட்டத்தில் இங்கே என் வாழ்க்கையில் அடுத்த கட்டம் துவங்க ஆரம்பித்திருந்தது. வீட்டில் எல்லோரும் என்னை ஏளனமாக பார்க்க ஆரம்பித்திருந்த நேரம்!

`இவன் மாலை நேரக் கல்லூரியில் படித்து, உருப்பட்ட மாதிரிதான்’ என்கிற பேச்செல்லாம் காதில் விழுந்து கொண்டிருந்தது. நொந்து போய் நெல்லைக்கருகே இருந்த தமிழறிஞரும், தமிழகத்தின் மூன்றாவது சாகித்ய விருது பெற்றவருமான என் கொள்ளுத் தாத்தா பி.ஸ்ரீக்கு ஓர் இன்லாண்ட் கவரில் கடிதமெழுதினேன்.  அந்த நேரத்தில் அவருக்கு வயது 92. அப்போது அவர் நெல்லைக்கு அருகேயிருந்த விட்டிலாபுரம் கிராமத்தில் இருந்தார்.

 இரண்டு நாட்கள் கழித்து, அதே கடிதம் வேறொரு கவரில் போட்டு எனக்கே திரும்பி வந்தது. தாத்தா கடிதத்தை படிக்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் நான் அனுப்பிய இன்லாண்ட் கடிதத்தின் இரண்டாவது பக்கத்தில் ஒரு நான்கு வரிகளை அப்படியே சுழித்து, அந்த சுழியிலிருந்து ஒரு கோட்டை கீழே அம்புக்குறியோடு இழுத்து,` இந்த தமிழை வைத்துக்கொண்டா உனக்கு இத்தனை தயக்கம்? நிறையப் படி. தமிழை நேசி!’ இதுதான் அந்தக் கடிதக் குறிப்பின் சாராம்சம்!

அந்த வரிகள் எனக்குள் ஒரு புதிய உற்சாகத்தை கொடுத்தது. அதுவரை அதிகமான ஆங்கில நாவல்களை படித்துக்கொண்டிருந்த நான், தமிழ் புத்தகங்களை தேடி ஓடினேன்.

ராகுல சாங்கிருத்யாயனின் ` வால்காவிலிருந்து கங்கைவரை’ புத்தகத்தை ஏற்கனவே படித்திருந்தேன். முதல் முறையாக அதை படித்தபோது, அது எனக்குள் ஒரு `கலாச்சார அதிர்ச்சி’ யை ஏற்படுத்தியது. அதை முதலில் நான் படித்த வருடம் 1977ம் வருடம். மீண்டும் 1980 களில் படிக்க ஆரம்பித்த போது, அதன் யதார்த்த உண்மைகள் புரிந்து கொள்ளும்படியாக இருந்தது.  ` மிகவும் சூடானது உண்மை’ தான் என்பதை எனக்கு புரிய வைத்த நூல் ` வால்காவிலிருந்து கங்கை வரை’ .

இப்போது மீண்டும் படிக்க ஆரம்பித்த போது, எனக்கு கிடைத்த புத்தகம் ராகுலின் `ஊர் சுற்றிப்புராணம்’ அதன் முன்னுரையே என்னை அந்த புத்தகத்தை படிக்க தூண்டியது.

 அவருடைய முன்னுரை இதுதான். `ஊர் சுற்றிப் புராணம்’ எழுத வேண்டிய தேவையை உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். வாசகர்களின் மனதில் ஊர் சுற்றும் எண்ணத்தை தோற்றுவிப்பது இந்நூலின் நோக்கமல்ல. அதற்கு பதிலாக அந்த எண்ணத்தை வலுப்படுத்த, வழி காட்டுவதுதான் இதன் குறிக்கோளாகும்.  ஊர் சுற்றிகளுக்குத் தேவையான  எல்லா விஷயங்களுமே இந்நூலில் இடம் பெற்றுவிட்டன. என்று கூற முடியாது. நண்பர்கள் உதவி இருந்தால் இதிலுள்ள் குறைகளை அடுத்த பதிப்பில் களைய முயற்சிப்பேன்.

 நான் சொல்ல வரும் அறிமுகம் இதுதான்!  தனிநபருக்கும், சமுதாயத்திற்கும் மிகுந்த பயன் உண்டாக்கும் தலை சிறந்த பொருளைத்தான் ` அவா’ என்றும் `சிந்தனை’ என்றும் நமது சாத்திரங்கள் கூறுகின்றன. வியாசர் தமது சரித்திரத்தில் பிரம்மத்தைத் தலைசிறந்ததாகக் கருதி அதனைச் சிந்தனையின் பொருளாக்கினார் வியாசரின் சீடரான ஜைமினி மதத்தை முக்கியமாகக் கருதினார். பழங்கால முனிவர்களுடன் கருத்துவேற்றுமை கொள்வது ஒன்றும் பாவச் செயலன்று.

உலகத்திலுள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். ஊர் சுற்றுவதை விட மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் நன்மை செய்வது போன்ற சிறந்த செயல் வேறெதுவும் இல்லை. பிரம்மா, சிருஷ்டியைப் படைத்து, காத்து, அழித்துவிடும் பொறுப்பை தன்மேல் போட்டுக்கொண்டுள்ளார் என்று சொல்லுகிறார்கள். படைத்தலும் காத்தலும் ஒருபுறம் இருக்கட்டும். அவற்றின் உண்மையை எடுத்துக்காட்ட பிரத்தியட்ச உதாரணங்களும் பயன்படா, அனுமானத்தினாலும் தெளிவு ஏற்படாது. ஆனால் உலகை காத்தல் மட்டும் நிச்சயமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களில் யார் தலைமீதும் இல்லை. உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர் சுற்றிகளினால்தான்.

இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர்சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான். விவசாயம், தோப்புத்துரவு, வீடுவாசல் எதுவுமில்லாத அவன் வானத்துப் பறவைகளைப்போல் சுதந்திரமாக நிலத்தில் சுற்றிக்கொண்டிருந்தான்.

குளிர்காலத்தில் ஓர் இடத்தி லிருந்தால் கோடைக் காலத்தில் அங்கிருந்து மிகவும் தொலைவில் வேறோர் இடத்தில் இருப்பான்.

இப்போது ஊர்சுற்றிகளின் வேலையைப் பற்றி விவரமாக எடுத்துக்கூற வேண்டியுள்ளது. ஏனெனில், பலர் ஊர் சுற்றிகள் செய்த மாபெரும் வேலைகளையெல்லாம் தாங்களே செய்வதைப் போல் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

உலகமும் அவர்கள் சொன்னதை நம்பி செக்கிழுக்கும் மாடுகள்தான் எல்லாம் செய்து முடிக்கின்றன என்று நினைத்துக்கொண்டிருக்கின்றது.

புதுயுக விஞ்ஞானத்தில் சார்லஸ் டார்வின் மிகவும் புகழ் பெற்றவர்!

அவர்தான் உயிரினங்களின் உற்பத்தி பற்றியும், மனித வம்சத்தின் வளர்ச்சியைப் பற்றியும் ஆராய்ந்ததோடு, தம் அரிய ஆராய்ச்சியினால் மற்ற விஞ்ஞானங்களையும் வளர்ச்சியுறச் செய்துள்ளார். டார்வின் காட்டிய ஒளியில் எல்லா விஞ்ஞானங்களும் தம் வளர்ச்சிப் போக்கை மாற்றிக்கொண்டு வந்துள்ளது. டார்வின் ஒர் ஊர்சுற்றியாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இப்படிப்பட்ட மகத்தான பணிபுரிந்திருக்க முடியுமா?

சில பயண நூல்கள் ஊர்சுற்றும் மகிழ்ச்சியை அளிக்கின்றன என்பது உண்மைதான். எனினும் புகைப்படத்தைப் பார்த்து நீங்கள் இமயமலையின் அடிவாரத்திலுள்ள அடர்ந்த காடுகளையும் பனிமூடிய சிகரங்களின் இயற்கை அழகையும், அதன் மனமகிழ் மணத்தையும் எப்படி அனுபவிக்க முடியாதோ, அதைப் போலவே ஊர் சுற்றிக்குக் கிடைக்கக் கூடிய நிறைவான இன்பம் பயண நூல்களைப் படித்து நீங்கள் பெறமுடியாது. இப்படிப்பட்ட புத்தகங்களைப் படிக்கும் வாசகர்களுக்கு முழுக்குருடர்களைவிட, கொஞ்சம் அதிக ஒளி கிடைக்கிறதென்பது உண்மைதான்.

அந்தப் புத்தகங்களால் தூண்டப்பட்டு அவர்கள் கொஞ்ச நாட்களுக்கு ஊர் சுற்றிகளாகவும் மாறக்கூடும்.

ஊர்சுற்றி உலகத்தில் மிகச்சிறந்த செல்வந்தனாக ஏன் ஆகிறான்?

காரணம், இந்த புதிய உலகத்தை ஆக்கியவனே அவன்தான்!

பழங்கால மனிதர்கள் வசதியாக இருக்கிறதென்று ஏதேனும் ஒரு நதி ஓரத்திலோ, குளக்கரையிலோ தங்கிவிட்டிருந்தால், உலகம் முன்னேறி இருக்க முடியுமா ?

மனிதனின் இந்த ஊர்சுற்றும் மனப்பான்மை, பலமுறை ரத்த ஆறுகளை ஓடச் செய்திருக்கிறது. ஊர்சுற்றிகளினால் கலவரம் நிகழ்ந்து பலர் கொல்லப்படுவது நாம் விரும்பவில்லைதான்.

ஆனால் புராதன காலத்தில் ஊர்சுற்றிகளின் போக்குவரத்து நடந்திருக்காமலிருந்தால் மனித சமுதாயம் மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டிருக்கும். மனிதர்கள் மிருகங்களைவிட  வளர்ச்சியடைந்திருக்க மாட்டார்கள்.

 பழங்கால ஊர்சுற்றிகளில் ஆரியர், சகர், ஹூணர் தங்கள் ரத்தக்கறை படிந்த செய்லகளால் மனித சமுதாயத்தை முன்னேற்றிய விவரம் வரலாற்றினில் நமக்குத் தெளிவாகத் தென்படுவதில்லை.

ஆனால் மங்கோலிய ஊர்சுற்றிகளின் அற்புதச் செயல்களை நாம் நன்றாக அறிவோம்.

 மேற்கத்திய நாடுகளில் விஞ்ஞான யுகத்தை துவக்கியவை வெடிமருந்து, பீரங்கி, காந்தம், அச்சகம், திசைகாட்டி, மூக்குக்கண்ணாடி ஆகிய பொருட்கள்.

இப்பொருட்களை மேற்கு நாடுகளுக்குச் சென்று அளித்தவர்கள் மங்கோலிய ஊர்சுற்றிகள்தான்.

மேற்கு நாடுகள் முன்னேற வழிசெய்த கொலம்பசும், வாஸ்கோடகாமாவும் ஊர்சுற்றிகள் தான்!

ஒரு காலத்தில் அமெரிக்கா ஏறக்குறைய மனித சஞ்சாரமற்றுத்தான் இருந்தது. ஆசியா கண்டத்துக் கிணற்றுத் தவளைகளுக்கு ஊர்சுற்றுவது மறந்துவிட்டது.

அதனால் அமெரிக்காவில் தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை!

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆஸ்திரேலியா கேட்பாரற்றுக் கிடந்தது.

சீனாவிற்கும் பாரதத்திற்கும் தங்களின் பழமையான நாகரிகத்தின் மீது ஒரே பெருமை!

ஆனால் அவர்களில் யாருக்கும் ஆஸ்திரேலியா சென்று தங்கள் கொடியைப் பறக்க விட வேண்டுமென்ற எண்ணமே தோன்றவில்லை.

 இன்று நூறுகோடி மக்கள் பளூவினால் சீனாவும், இந்தியாவும் தத்தளிக்கின்றன.

ஆனால் நிலப்பரப்பில் பெரிதான ஆஸ்திரேலியாவில் ஒரு கோடி மக்கள் கூட இல்லை!

இன்று ஆசியாக்காரர்களுக்கு ஆஸ்திரேலியாவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன!

ஆனால் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அது நம் கைக்கெட்டும் பொருளாக இருந்தது.

சீனாவும் பாரதமும் ஆஸ்திரேலியாவின் அபார செல்வத்தை ஏன் கை நழுவவிட்டன ?

 அவர்கள் ஊர்சுற்றும் மனப்பான்மை இழந்துவிட்டனர் . மறந்துவிட்டனர்.

 ஆம்! இதை மறத்தல் என்றே கூறுவேன்.

 காரணம், பாரதமும், சீனாவும் ஒரு காலத்தில் புகழ்பெற்ற ஊர்சுற்றிகளைத் தோற்றுவித்திருக்கின்றன.

பல இந்திய யாத்ரீகர்கள் தெற்கிலும், கிழக்கிலும், இலங்கை, பர்மா, மலேயா, ஜாவா, சயாம், கம்போடியா, போர்னியோ, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளில் தங்கள் செல்வாக்கினைப் பரப்பியுள்ளார்கள். ஒரு காலகட்டத்தில் நியுசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் கூட இந்தியாவின் பகுதிகளாகும் சூழ்நிலை இருந்தது.

இருந்தும் என்ன செய்ய?

`கடலின் உப்பு நீருக்கும், இந்து மதத்திற்கும்  கடும்பகை’ என்று பாரதத்தின் முட்டாள்கள் உபதேசிக்கத் தொடங்கினார்கள்.

ஓர் இந்து கடலைத் தொட்டாலும் அவன் உப்புக்கட்டியைப் போல் கரைந்துவிடுவான்.

சமுதாய நலனுக்காக ஊர்சுற்றி மனப்பான்மை எவ்வளவு அவசியம் ஓரளவு நீங்கள் அறிந்திருக்கலாம்.

 இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்ட நாடும் இனமும் இந்து மதத்தில் கூறப்பட்ட தர்மம், அதர்மம், காமம், மோட்சம் என்ற நான்கு பலன்களையும் பெற்றன.

ஊர்சுற்றுதலை மறந்த இனத்திற்கு நரகத்தில் கூட இடமில்லை.

கடைசியாக ஊர் சுற்றும் மனப்பான்மை இழந்துவிட்டதினால்தான் எழுநூறு ஆண்டுகள் அந்நியரிடம் உதைவாங்கிக் கொண்டிருந்தோம்.

எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் உதை விட்டுக்கொண்டே போனார்கள்.

 நான் வைத்த இந்த வாதங்கள் கீலவுகமாகவும், சாத்திரங்களுக்கு விரோதமானவையாகவும் சிலருக்குத் தோன்றலாம். அப்படியானால், மதத்திலிருந்தே எடுத்துக்காட்டுக்கள் தரட்டுமா? உலகத்தில் தோன்றிய மதத் தலைவர்கள் அநேகர் ஊர்சுற்றி களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

மதத்தலைவர்களில் ஆசார அனுஷ்டானங்களிலும், அறிவுக் கூர்மையிலும்,  நற்பண்புகளிலும் சிறந்தவராக ஒளிர்ந்த புத்தர்பிரான் ஊர்சுற்றிகளின் அரசராகத் திகழ்ந்தார்.

 அவர்தம் வாழ்நாளில் இந்தியாவை விட்டு வெளிநாடு செல்லவில்லை.

 மாரிக்காலத்தில் மூன்று மாதங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் ஒரே இடத்தில் இருப்பது பாவம் என்று கருதினார்.

 அவர் மட்டும் ஊர்சுற்றியல்ல!

அவர்தம் சீடர்களுக்கு எப்பொழுதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்குமாறு பணித்தார்.

பவுத்த சந்நியாசிகள் தங்கள் தலைவரின் ஆணையை எவ்வளவு தூரம் நிறைவேற்றினார்கள் என்பதைக் கூறவும் வேண்டுமா ?

 அவர்கள் மேற்கில் மக்டூனியா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து, கிழக்கில் ஜப்பான் வரையிலும்,வடக்கில் மங்கோலியாவிலிருந்து, தெற்கில் பாலத்தீவுகள் வரையிலும் சுற்றித் தீர்க்கவில்லையா ? ஒரு பரந்த இந்திய செல்வாக்கை நிர்மாணித்தவர்கள் இவர்களே! புத்தர் மட்டும் ஊர்சுற்றும் மனப்பான்மையை வளர்த்து விடவில்லை.

அவருக்கு முன்பே ஒரிரு ஊர்சுற்றிகளின் முக்கியத்துவம் நிறைந்திருந்ததினால்தான் புத்தரைப் போன்ற மாபெரும் ஊர்சுற்றி தோன்ற முடிந்தது.

அந்தக் காலத்தில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் மதத்தை பரப்பும் நோக்குடன் ஊர்சுற்றிக் கொண்டிருந்தனர்.

 அவர்கள் கிணற்றுத் தவளை ஆண்களை தோற்கடித்து வீராங்கனைகளாக நாடு முழுவதும் பவனி வந்தனர். பெண்களும் ஊர்சுற்றிகளாக இருக்க முடியுமா ?

அவர்களும் இம் மாபெரும் விரத்தை கைக் கொள்ள முடியுமா? என்று சில பெண்கள் வினா எழுப்புகின்றனர். அவர்களுக்கு நமது பதில் இதுதான்!

ஊர்சுற்றி மனப்பான்மை குறுகிய புத்தி படைத்ததன்று!

இதில் ஆண்களுக்குள்ள உரிமைகளைப் போல் பெண்களுக்கும் நிச்சயம் இடம் உண்டு!

புத்தர்பிரான் ஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் இவ்விரத்தத்தை கைக்கொள்ளுமாறு உபதேசிக்கிறார்.

பாரதத்தின் தொன்மையான மதங்களில் ஜைன மதமும் ஒன்று!

அம்மதத்தை நிறுவிய மகாவீரர் மட்டும் யாராம்?

 அவர்கூட ஓர் சுற்றிதாம்.

ஊர்சுற்றுவதிலே வருகின்ற சிறு பெரும் தடங்கல்களையும், பட்டம், பதவிகளையும் அவர் துறந்துவிட்டார்.

கையிலே கவளமும், மரத்தடி வாசமும், தாம் அவரின் தாரக மந்திரமாக ஒலித்து வந்தது.

வானத்தையும், திசைகளையும், ஆடையாக அவர் அணிந்ததற்குக் காரணம் ஊர்சுற்றுதலில் சிறு தொல்லையும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

ஜைன மதத்திலுள்ள பிரிவுகள் தங்கள் தங்கள் கண்ணோட்டத்தில் மகாவீரரின் சிறப்புகளை விவரிக்கிறது!

 ஆனால் அவர் பெரிய ஊர்சுற்றி!

அவர்தம் வாழ்நாள் முழுவதும் ஊர்சுற்றிக்கொண்டேயிருந்தார்.

 வைசாலி நகரில் பிறந்த அவர் பாவா என்னுமிடத்தில் இயற்கை எய்தினார்.

புத்தரையும், மாகவீரரையும்விடத் தான் பெரிய தியாகி, தவசி, நல்லெண்ணம் படைத்தவன் என்று எவனாவது தன்னைச் சொல்லிக் கொண்டால் அவனை நான் தற்பெருமை அடித்துக்கொள்ளும் தண்டோராக்காரன் என்றுதான் கூறுவேன்.

அதே போல் பிரம்மத்தின் சாட்சாது மறு உருவமான ஆதிசங்கரர் பாரதத்தில் நாலா பாக்கங்களிலும் ஏன் சுற்றிக்கொண்டிருந்தார்.

நமது வரலாற்றில் குருநானக் மிகவும் ஊர்சுற்றியாகத் தான் திகழ்ந்தார்.’

இதுதான் `ஊர்சுற்றிப் புராணம்’ நூலில் ஒரு பகுதி முன்னுரை!

இதில் அவர் சொன்ன `ஊர்சுற்று’ என்கிற வார்த்தையை விட அவர் மேற்கோள் காட்டிய மனிதர்கள் என்னைக் கவர்ந்தார்கள்.

அதன் விளைவு?

(தொடரும்)