ஆஷஸ் : சதம் அடித்த சகோதரர்கள் வெற்றி விளிம்பில் ஆஸி., அணி

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2018 08:45சிட்னி 

: இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பிரசித்திப் பெற்ற ஆஷஸ் தொடரின் கடைசி மற்றும் 5வது

போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸி., அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. 4வது போட்டி  டிராவானது. இந்நிலையில், 5வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் களம் இறங்கிய இங்கிலாந்து டாஸ்  வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 346 ரன் விளாசியது.

இதற்கு பதிலடி கொடுத்த ஆஸி., அணி பேட்டிங்கில் தூள் கிளப்பியது. ஆஸி., அணியின் தொடக்க வீரர் கேமரான் பான்கிராப்ட் டக் அவுட்  ஆனார். ஆனால், வார்னர் 56, கவாஜா 171, ஸ்மித் 83, டிம் பெய்னி 38 ரன் விளாசினர். இதில் மார்ஷ் சகோதரர்களான ஷான் மார்ஸ் 156  ரன், மிட்செல் மார்ஷ் 101 ரன் குவித்தனர். சகோதரர்களின் சதத்தால் ஆஸி., அணி 193 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள்  குவித்து, டிக்ளேர் செய்தது.

ஆஸி., அணியைவிட 303 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி தன் 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களான அலிஸ்டர் குக் 10 ரன்னிலும், மார்க் ஸ்டோன்மேன் டக் அவுட்டிலும் வெளியேறினர். தொடர்ந்து ஜேம்ஸ் வின்சி  18 ரன், டேவிட் மாலன் 5 ரன்னில் வெளியேறினர். நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 46 ஓவர்கள் முடிவில் 4  விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் 42 ரன், ஜானி பெயர்ஸ்டோ 17 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

ஆஸி., அணியைவிட 210 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், கடைசி நாளான இன்று ஆட்டத்தை டிரா செய்ய இங்கிலாந்து முயற்சி செய்யும்.  எனினும், முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாத நிலையில், இங்கிலாந்து விரைவில் ஆட்டம் இழக்கும் நிலையில், ஆஸி., அணி இன்னிங்ஸ் பெற்று  கோப்பையைக் கைப்பற்றும்.