பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 16

பதிவு செய்த நாள் : 07 ஜனவரி 2018

`உத்தமபுத்திரன்’ படத்தை பாமர ரசிகர்கள், அந்தக் கதையோடு ஒன்றிப்போய் பார்த்தார்கள்.

 ஆனால், சினிமா தெரிந்தவர்களும், அதன் நுணுக்கங்களை ரசிப்பவர்களும் அதைப் பார்த்தபோது அவர்களுக்கு ஒருவித வியப்பு ஏற்பட்டது.

 காரணம், கேமரா ஒரே கோணத்தில் கதையை சொல்லிக்கொண்டு போகவில்லை.

உதாரணமாக, மகாராணிக்கு பிறந்த முதல் குழந்தையை வேலைக்காரி கடத்திக் கொண்டு வந்து நம்பியாரிடம் கொடுப்பாள்.

 நம்பியார் அதை கையில் வாங்குவது ஒரு ஷாட்!

அதை அவர் எடுத்துக்கொண்டு போய் வேறொருவனிடம் கொடுத்து,` இந்த குழந்தையை கொன்று விடு. உன்னை குபேரனாக்குகிறேன்’ என்று சொல்லும்போது, கேமரா நம்பியாருக்கு பின்புறத்திலிருந்து நகர்ந்து அவரது இடது பக்கத்தைக் காட்டும்போது, அந்தக் குழந்தையை பெறுகிறவன் முகத்தை அழுத்தமாக படம் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைக்கும்.

அவர் கிளம்புவதற்கு முன், அங்கே உள்ளே இன்னொரு குழந்தை அழுகின்ற சத்தம்! அது என்ன?

இதை தெரிந்து கொள்வதற்கு முன், குழந்தையை கடத்திய வேலைக்காரியின் திகைப்பை காட்டுவார்கள்.

 அவள் குழந்தை அழுகின்ற திசையை நோக்கிப் பார்ப்பாள். அங்கே தாதி இன்னொரு குழந்தையை கையிலெடுத்துக் கொண்டிருப்பாள்.

சட்டென்று அங்கே நம்பியார் பக்கம் திரும்பும் கேமரா! அவர் முகத்தில் ஒரு திகைப்பு!

அவர் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் முன்னரே அமைச்சரின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்டுவிடும், `ஆஹா! மன்னருக்கு குழந்தை பிறந்து விட்டது’ என்று குரல் கொடுப்பார்.

இப்போது நம்பியார் முகத்தில் ஓர் ஏமாற்றம்! அடுத்த குழந்தையை ஒன்றும் செய்ய முடியாது என்பது அவருக்கு தெரிந்து விடும்.

உடனே ஒரு ஓலைக் குடிசை. திடீரென்று அங்கே கதவு தட்டப்படும் ஓசை! ஒரு பெண் கதவைத் திறப்பாள். திறந்தால் வெளியே ஓர் ஆண் குழந்தையோடு நிற்பான். அவள் வீட்டுக்குள் நுழையும்போது அந்தப் பெண் கேட்பாள். ` என்ன இத்தனை பதட்டம்?’

அவன் பதில் சொல்வதற்குள், அங்கே அரண்மனையில் வேட்டைக்கு போன மன்னர் திரும்பி வந்திருப்பார். தனக்கு பிறந்திருக்கும் குழந்தைகளை பார்க்க ஆவலோடு வருவார். நன்றாக இருக்கும் குழந்தையை அமைச்சர் எடுத்து மன்னர் கையில் கொடுப்பார். அடுத்த குழந்தையை மன்னர் பார்க்க வருவார். அப்போது மன்னருக்கு இடப்புறமிருந்து அந்த தொட்டிலின் சங்கிலியின் இடையில் தன் முகத்தை மட்டும் காட்டி நம்பியார் `இன்னொரு குழந்தை இறந்தே பிறந்தது’ என்பார்.

 அவர் அப்படி சொல்லும்போது, கேமரா நம்பியாருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதே, பார்ப்பவர்கள் மனதில் `படுபாவி, குழந்தையை கடத்தி கொன்னுட்டான்’ என்பது ஆழமாக பதிவாகும்.

 அந்தப் படத்தை பொறுத்தவரையில் ஷாட்டுகளை பிரித்தது, இயக்குநர் டி. பிரகாஷ்ராவா, அல்லது திரைக்கதை எழுதும்போதே காட்சிகளை பிரித்து ஸ்ரீதர் எழுதினாரா என்பது தெரியாது.

ஆனால், ஆரம்பம் முதலே எல்லாவிதமான ரசிகர்களுக்கும் ‘உத்தமபுத்திரன்’  ஒரு விறுவிறுப்பை அளித்தது..

அடுத்து ஒரு காட்டில் ஓர் உயர்ந்த இடத்தில் ஒரு பாலம். அதன் கீழே ஆறு!

குழந்தையைப் பெற்றவன் தன் மனைவியிடம் அந்தக் குழந்தையை கொடுத்துவிட்டு, `இந்த குழந்தையை கொல்லச் சொல்லி அந்தப் பாவிகள் என்கிட்ட கொடுத்தாங்க. இனிமேல் நாமதாம் இந்த குழந்தையை பத்திரமாக பாத்துக்கணும். நீ உடனே இந்த குழந்தையை எடுத்துக் கொண்டு நம்ம முல்லைக் காட்டு பக்கம் போ. நான் உன்னை அங்கே வந்து சந்திக்கிறேன்’ என்று சொல்வான்.

அவள் வீட்டின் பின்புறம் வழியாக கிளம்புவாள். இவனோ அந்த மலையடிவாரத்தின் உச்சியில் இருந்த பாலத்துக்கு போவான். அங்கே நம்பியாரும், ஓ.ஏ.கே தேவரும் வருவார்கள். `என்ன சோமு, காரியத்தை கச்சிதமாக முடிச்சிட்டியா?’ என்றபடி அவன் கையில் ஒரு பரிசு பொருளைக் கொடுத்தபடியே நம்பியார் அவனை அப்படியே அங்கிருந்து தள்ளிவிடுவார். அவன் உச்சியிலிருந்து ஆற்றில் விழுவான்.

அது முக்கியமல்ல! இங்கே அவன் விழும் ஆறு உண்மையானது. ஆனால் அந்த மலையுச்சி அடிவாரத்தில் காட்டிய பாலம் இருக்கிறதே, அது படப்பிடிப்பு அரங்கில் போடப்பட்ட செட். அங்கேதான் ஆர்ட் டைரக்டர் கங்கா தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பார். படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே அந்த மலையடிவார செட் அத்தனை தத்ரூபமாக இருக்கும். ஆனால், நன்றாக விவரமறிந்தவர்களுக்கு, அது அரங்கத்தில் அமைக்கப்பட்டது என்பது தெரியும். படத்தில் சில விநாடிகளே வரும் காட்சி அது. அதற்கு அத்தனை பிரம்மாண்ட செட்டா என்று மற்றவர்கள் நினைத்திருப்பார்கள்.

 கறுப்பு – வெள்ளை படமாக இருந்தாலும்,  இந்த கதையில் சிவாஜி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அப்போது, அந்தக் காலத்தில் அவர் ஒரு வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார்! அவருக்கு அப்போதே ஏராளமான ரசிகர்கள். இந்த போட்டிக்கு ஆரம்பத்திலிருந்தே எம்.ஜி.ஆரிடமிருந்து போட்டி வேறு. ஒரே நாளில் இரு விளம்பரங்களும் நாளிதழ்களில் வந்ததால் நாடெங்கும் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு வேறு அதிகம். அதனால் எந்த இடத்திலும் படத்தின் கதையிலோ, கதை அமைப்பிலோ, இசையிலோ, அரங்க நிர்மாணத்திலோ, மன்னர் காலத்து கதை என்பதால் ஆடம்பரக்குறைவோ இல்லாமல் படம் எடுக்க வேண்டும் என்பதில் படத்தை தயாரித்த வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்களான கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர், கோவிந்தராஜன் மூவரும் உறுதியாக இருந்தார்கள்.

 அடுத்து கதையை நகர்த்திச் சென்ற விதம். இப்போது ஆற்றோரமாக அந்த குடிசைப் பெண் பொன்னி குழந்தையை எடுத்துக்கொண்டு நடந்து வருவாள். அப்போது குழந்தையை அங்கே வைத்துவிட்டு, ஆற்றில் நீர் குடிக்க போவாள். அப்போது அங்கே ஒருவர் நீரில் மிதந்து வருவார். `என்னங்க நீங்களா?’ இப்போதுதான் படம் பார்ப்பவர்களுக்கு  குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து தன் மனைவியிடம் கொடுத்தவர் சோமு, அவரை நம்பியார் ஆற்றில் தள்ளிவிட்டார் என்பது தெளிவாக புரியும்.

 அந்த தம்பதி  குழந்தையை வளர்க்கப்போகிறார்கள் என்பதும் தெளிவாகும். இது போன்ற இரட்டைக் குழந்தை கதையை கையாள்வதில் ஒரு தெளிவும், நேர்த்தியும் வேண்டும். இல்லையேல், எந்த சிவாஜி எங்கே இருக்கிறார் என்பதில் ரசிகர்கள் குழம்பிப் போவார்கள்.

 குழப்பத்தை தீர்க்கிற மாதிரி அடுத்த காட்சி–

 ஒரு பட்டுமெத்தையில் ஒரு குழந்தை. அந்தக் குழந்தையை நோக்கி ஒரு கை நீளும். `முத்தே, பவளமே, முக்கனியே, சக்கரையே,’ என்று துவங்கி குழந்தையை அந்த மகாராணி தொட்டிலில் கிடத்தி `ஆளப்பிறந்த என் கண்மணியே’ என்று பாடத்துவங்குவார். அங்கே கானகத்து தொட்டிலில் அந்த தாயோ இன்னொரு குழந்தையை வைத்துக் கொண்டு `ஏழை என் வீட்டுக்கு வந்தவனே! இணை இல்லாத ஆனந்தம் தந்தவனே’ என்று

பாடுவாள்.                                        

(தொடரும்)