பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 07–1–18

பதிவு செய்த நாள் : 07 ஜனவரி 2018

நான் உலக விஷயங்களை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், தமிழ்நாட்டில் ஒரே பரபரப்பு!

`அவள் வருவாளா? அவள் வருவாளா?’ என்கிற திரைப்படப்பாடல் போல் அவர் வருவாரா, அவர் வருவாரா என்று  செய்தி தொலைக்காட்சிகள் தொடர்ந்து தினமும் அலறிக்கொண்டிருந்தன.

கடைசியாக அவர் ஒரு தேதியைக் குறிப்பிட்டு `அந்த நாளில் என் முடிவை அறிவிப்பேன்’ என்கிறார். தமிழ்நாட்டின் ஏன் இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றப்போகும் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நாளாக தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிகைகளும் குறித்துக் கொண்டன.

`அந்தத் தேதியில் என்ன சொல்லப்போகிறார்? அவர் என்ன சொல்வார்’ என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று ஊடகவியலாளர்களும், பத்திரிகை நண்பர்களும் என்னை துளைத்துவிட்டார்கள்.

நான் மாற்றுக் கருத்துச் சொன்னால், என்னை `தேசத் துரோகி’யாக பார்த்து விடுவார்களோ என்கிற பயமே எனக்கு வந்துவிட்டது.

அதற்குக் காரணம் இருந்தது.  1985ம் வருடம் நான் அப்போது ஜூனியர் விகடன் பத்திரிகையின் தலைமை நிருபர்! அப்போது நான் அவரிடம் ஒரு பேட்டி எடுத்தேன்.

 இந்த பேட்டியின் சுருக்கமான சாராம்சம் இதுதான்!

`நீங்க அரசியல்ல குதிப்பீங்களா?’

சிறிது நேரம் யோசித்துவிட்டு `நோ’ என்றார்.

`நீங்க சொல்ற பதில்ல ஒரு `கன்விக்‌ஷன்’ இல்லையே?’

`இப்படியெல்லாம் சொல்லி என்னை வம்புல மாட்டாதீங்க. நிச்சயமா சொல்றேன். எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லேதான்.’

`அப்போ அரசியல் விவகாரம் எதுவுமே தெரியாதா?’

‘ஏன் தெரியாது? அன்னைக்கு வந்த நியூஸை நைட் படுக்கப் போகும்போது கண்டிப்பா படிப்பேன்.’

`நீங்க தேர்தல் பிரசாரம் செய்யப்போறதா  பேச்சு வந்ததே?’

`அதெல்லாம் சும்மா. வேறு ஏதாவது பேசலாமே …’

`இப்போ மத்த நடிகர்களுக்கும் அரசியல்ல  கிடைச்சிருக்கிற அங்கீகாரம் உங்களை `இன்ஸ்பையர்’ பண்ணலையா?’

`அதைப் பத்தி யோசிக்கலே. இப்போதைக்கு அரசியல்ல குதிக்கிற எண்ணமேயில்லே. பட் அப்படி இறங்கினா, பத்தோடு பதினொண்ணா இருக்க மாட்டேன். அது மட்டும் நிச்சயம்.’

இந்த பேட்டி முடிந்து இரண்டாண்டுகள் கழித்து, 1987ம் ஆண்டு அவரை சந்தித்தேன்.

`நீங்கள் காங்கிரசில் சேர்ந்துவிட்டதாக உங்களைப் பற்றி செய்தி!

(தன் ஸ்டைல் சிரிப்புடன்)  `யார் உங்களுக்குச் சொன்னது? நீங்கள் சொல்வது எனக்கே நியூஸ்! அரசியலில் குதிப்பதாக இருந்தால்,ரகசியமாகச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.  நான் அரசியல் குதித்தால் பாயும் புலியைப் போலத்தான் -  with a very big bang – நுழைவேன். ஆனால், அதற்கு இப்போது எந்தத் தேவையுமே ஏற்படவில்லை.’

`ராஜேஷ் கன்னா, பிரேம்நசீர் போன்றவர்கள் ஏற்கனவே காங்கிரஸில் சேர்ந்து மேற்கு வங்காளம், கேரளா தேர்தலில் பிரசாரத்துக்குப் போய்விட்டார்கள். அதைப் போல உங்களையும் மேலிடத்து பிரஷர் மூலம் கட்சியில் சேரவைத்து வருங்காலத் தேர்தலுக்கு உங்களைப் பயன்படுத்தினால்…?’

`என்னை எந்த பிரஷரும், மிரட்டலும் பணிய வைக்கவே முடியாது. நான் யார் பின்னாலும் போகவும் மாட்டேன்.’

`அப்படித்தான் பிரேம்நசீரும் சொன்னார். இப்போது என்னாயிற்று?’

`அவர், பிரேம்நசீர், நான் – ரஜினிகாந்த்.’

`பணம் சேர்ந்த பிறகு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பயந்துதானே ஆகவேண்டும்?’

`நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்கத் தெரிந்த எனக்கும் அதை நேர்மையாகக் காப்பாற்றவும் தெரியும். நேர்மையாக நாம் இருக்கும்போது, யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.’

`அரசியலில் குதிக்கமாட்டேன் என்கிறீர்கள். உங்களுக்கென்று ஏராளமான ரசிகர் மன்றங்கள்….. அவர்களுக்காக தினமும் காலையில் வீட்டு வாசலில் நீங்கள் தரும் தரிசனம்… நன்கொடை… ஏழைகளுக்காகப் பாடுபடுவதை உயர்த்திக் காட்டும் படக் காட்சிகள்…  இவையெல்லாம் எதற்காக?’

`ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மன்றங்களெல்லாம் பல ஊர்களிலுள்ள ரசிகர்கள் அவர்களாகவே உருவாக்கிக் கொள்வது. மன்றங்களை நான் ஆதரிப்பதுமில்லை, தடுப்பதுமில்லை. நான் வேண்டாமென்று சொன்னாலும் அவர்கள் அதை செய்யத்தான் போகிறார்கள். அப்படி மன்றம் அமைத்து என்னிடம் வருபவர்களிடம் `உங்கள் சொந்த வேலையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தை  நன்கு கவனியுங்கள்’ என்று ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறேன்.

காலையில் ரசிகர்களை சந்திக்கிறேன். கடவுள் தன் பக்தன் முன் தோன்றி அருள்பாலிக்கிற நினைப்பில் இதை நான் செய்வதில்லை. பல ஊர்களிலிருந்து என்னை ஆவலோடு பார்க்க வருகிறார்கள். அந்த அன்புக்குக் கட்டுப்பட்டுத்தான் காலை அவர்களைப் பார்க்கிறேன். உதவி, நன்கொடை என்று சொன்னீர்கள். இது வசதி உள்ளவன்,  இல்லாதவனுக்குக் கொடுக்கிற மிகச் சாதாரண பரோபகார சிந்தனைதான்.  படத்தில் ஏழைகளைக் காப்பாற்றுவது  மசாலா சினிமாவின்  பார்மூலா. அது ஒரு வகையான ஹீரோயிஸம். ஸோ, நீங்க சொன்ன இந்த காரியங்களுக்கெல்லாம் எந்தவித மோட்டிவ்வும் கிடையாது.’

`தமிழ்நாட்டில் இப்போது நிலவுகிற அரசியல் சூழ்நிலை, நாட்டு நிலைமையைப் பற்றி  உங்கள் கருத்து என்ன?’

`ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நம் ஜனநாயக அமைப்பு  முறையே ஏமாற்று வித்தை. எல்லோருக்கும் உணவு, உடை, வீடு, சமத்துவம், சகோதரத்துவம் என்று எழுத்தில்தான் இருக்கிறது. நடைமுறைக்கு உதவாத அந்த எழுத்துக்குப் பெயர், அரசியல் சட்டம். அதைப் போய் புனிதம்

என்று வேறு சொல்கிறோம். வேடிக்கைதான்.

ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாதவன் கூட தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலை வரவேண்டும். ஏழை தேர்தலில் நிற்க முடியுமா?  ஒரு எம்.எல்.ஏ. சட்டசபையில் நுழையவேண்டுமானால், ஐந்து லட்சம் ரூபாயாவது செலவு செய்ய வேண்டும்.  அவ்வளவு செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்றவரின் பொது வாழ்வில் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?  ஒரு சாதாரண பியூன் வேலைக்கு ஆள் எடுக்கும்போது கூட, அவரது கல்வித் தகுதி என்னவென்று கேட்கிறோம்.  ஆளப்போகிறவர்களுடைய தகுதியைப் பற்றி நாம் கவலைப்படுவதேயில்லை. அதனால்தான் பதவிக்கு வருகிறவர்கள் நம் வாழ்க்கைத் தரத்தைப்பற்றி கவலைப்படுவதில்லை.’

`குடிசைப் பகுதி மக்களுக்காக ஷபானா ஆஸ்மி மும்பையில் ஊர்வலம் போனார். அதே மாதிரி தமிழ் மக்கள் பிரச்னைகளுக்காக பேரணி நடத்துவீர்களா?’

`காலம் என்னை எப்படி கட்டாயப்படுத்துதோ, எனக்குத் தெரியாது.’

` நீங்கள் திட்டமே போடாமல் காலக் காட்டாயத்துக்காக காத்திருப்பேன் என்று சொல்வது நியாயமா?’

`நான் திட்டமே போடவில்லை யென்று உங்களுக்குத் தெரியுமா?’

பேட்டி: சுதாங்கன், 18.03.1987 ஜூனியர் விகடன்.

சென்ற வாரம்  ஜூ.வி. 3,000 ஸ்பெஷல் என்று ஒரு மலர் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் என்னுடைய இந்த இரண்டு பேட்டிகளும் வெளிவந்திருக்கிறது. அந்த பேட்டியைத்தான் நான் இங்கே எடுத்துப் போட்டிருக்கிறேன்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை.

ஆனால் ஊடகங்கள், பத்திரிகைகளின் கேள்விகளை என்னால் தவிர்க்க முடியவில்லை,  ஒரு வழியாக `உலக’மே எதிர்பார்த்த, அவர் சொன்ன தேதியும் வந்தது. அவரும் அறிவிப்பை வெளியிட்டார்.

ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். ஊடகங்கள் இந்த அறிவிப்பை நாளெல்லாம் தலையில் வைத்து கொண்டாடின. `….. என்று ‘நல்லவங்க எல்லோரும் உங்க பின்னாலே, நீங்க நினைச்சதெல்லாம் நடக்கும் உங்க கண்ணு முன்னாலே’ என்று ஊடகங்கள் பாடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு, திருவிழாவாக, மக்களை காக்க வந்த ஆபத்பாந்தவன், அனாதைரட்சகன் அவதரித்து விட்டதாகவே நினைத்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

கூடவே, என்னிடம் தொலைபேசியில் பேட்டிகள்.  பொதுவாக இந்த பகுதியில் நான் அரசியல் எழுதுவதோ, அலசுவதோ இல்லை. இதைப் பற்றி என்னால் எழுதாமலும்  இருக்க முடியவில்லை. ஊரெல்லாம் பேசுகிறான். இங்கே எழுத மட்டும் என்ன ஓரவஞ்சனை என்று தினமலர் வாசகர்களின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது! என்ன செய்வது?

வெகுநேர யோசனைக்குப் பின்தான் எழுத முடிவு செய்தேன்.

`ரஜினி என்ன அரசியலுக்கா வந்திருக்கிறார்? வரவில்லையே! 2021 சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கவும்தானே வரப்போகிறார்? இதிலே எங்கே அரசியல் வந்தது? அரசியல் வேறு, ஆட்சியைப் பிடிப்பது வேறு என்கிற ஒரு புதிய தெளிவை எனக்கு ரஜினி கொடுத்துவிட்டதால் நான் தைரியமாக அவருடைய அறிவிப்பை பற்றி இங்கே எழுத முடிவு செய்தேன்.

ஒரு தூய்மையான ஆட்சியை அவர் கொடுக்க வேண்டுமென்றால், நேரடியாக தேர்தலை சந்திப்பதுதானே சிறந்த வழி? இப்போதே கட்சி ஆரம்பித்து அதற்கு செலவு செய்து, அதற்கு கட்சி பதவிகளில் சிலரை நியமித்து, அந்த நியமித்தவர்கள், தனக்கு கீழே உள்ளவர்களை நியமிக்க இப்போதே வசூல் வேட்டை இதெல்லாம் எதற்கு? ரஜினி, நம் நாட்டில் அரசியலில் சாணக்கியர் போல உலக அரசியலில் `மாக்கியவல்லி’தான்!

* * *