ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 03–01–18

பதிவு செய்த நாள் : 03 ஜனவரி 2018

இளையராஜா ஞானி... எம்.எஸ்.வி., இசையின் சாமி!  ரஜினி!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

“சினிமா உல­கம் பெரி­யது. பல­ரும் வந்­தால் நிகழ்ச்­சி­யின் போக்­கும் சூழ­லும் மாறி­வி­டும் என்­று­தான் நான் யாரை­யும் அழைக்­க­வில்லை. அப்­ப­டிப்­பட்ட நிலை­யில் உங்­க­ளுக்கு மட்­டும் இங்கே வரத் தோன்­றி­யது எப்­படி?’’ - எதிர்­பா­ராது வந்த சூப்­பர் ஸ்டாரி­டம் இப்­ப­டி­யொரு கேள்­வியை இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­வால்­தான் கேட்க முடி­யும். மறைந்த  மெல்­லிசை மன்­னர் எம்.எஸ். விஸ்­வ­நா­த­னின் நினை­வாக இளை­ய­ராஜா நடத்­திய ‘என்­னுள்­ளில் எம்.எஸ்.வி.’ என்ற சிறப்பு இசை நிகழ்ச்சி அது. விழா­வில் அள்ளி வந்த சுவா­ரஸ்­யங்­கள் இனி...

இசை­ஞானி இந்த விழா­விற்கு அழைக்­கா­விட்­டா­லும், ரஜினி, பிர­காஷ்­ராஜ், விவேக், பார்த்­தி­பன் என சில பிர­ப­லங்­கள் வந்­தி­ருந்த பண்­பைக் கண்டு, இளை­ய­ரா­ஜாவே அதி­ச­யித்­தார்.  புது­மைப்­பித்­த­னின் சின்­ன­தொரு கவிதை அறி­மு­கத்­தோடு நிகழ்ச்­சி­யைத் துவக்கி வைத்­தார் பிர­காஷ்­ராஜ்.  தனது 14வது வய­தில் 'மாலைப் பொழு­தின் மயக்­கத்­திலே நான் கனவு கண்­டேன் தோழி’­­யைக் கேட்டு மயங்­கி­ய­தை­யும் அக்­கா­லம் தொட்டே மெல்­லிசை மன்­னரை மான­சீக குரு­வாக ஏற்று இசைப்­பித்­த­னாக மாறி­ய­தை­யும் குறிப்­பிட்டு, அவ­ரது மாட்டு வண்டி எம்.எஸ்.வியால் எப்­படி பாட்டு வண்­டி­யாக மாறி­யது என­வும் இசை­ஞானி சொன்ன விதம் அரங்­கில் இருந்த அனை­வ­ரை­யும் வியப்­பில் ஆழ்த்­தி­யது.

பொன்­வா­னம் பன்­னீர் தூவிக்­கொண்­டி­ருக்க, மாலை 7 மணிக்கு திரு­வா­ச­கத்­தி­லி­ருந்து சின்­ன­தொரு பாட­லு­டன் ஆரம்­பித்து, அப்­ப­டியே ‘நெஞ்­சம் மறப்­ப­தில்லை...’ கோர­ஸில் ரசி­கர்­கள் மெய்­ம­றக்­கத் தொடங்­கி­னர். கறுப்பு – வெள்ளை காலத்து பாடல்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்த ராஜா, எம்.எஸ்.வியு­டன் சேர்ந்து இசை­ய­மைத்த ‘மெல்­லத் திறந்­தது கத’­­வி­லி­ருந்து ‘ஊரு சனம்...’ பாட­லை­யும் பாடி­னார். 25 பாடல்­கள் பாடப்­பட்­டன.

பார்­வை­யா­ளர்­கள் வரி­சை­யில் இருந்த ரஜி­னியை வம்­புக்கு இழுத்து கலாய்த்­தார் இளை­ய­ராஜா. ‘‘‘மாலைப்­பொ­ழு­தின் மயக்­கத்­திலே’ பாடல் மாதிரி உச்ச ஹீரோ படங்­க­ளுக்கு பாட்டு அமைக்க முடி­யுமா? ஆனா­லும் ரஜி­னிக்கு நான் ‘சுந்­தரி கண்­ணால் ஒரு சேதி’ கொடுத்­தேன்’’ என இசை­ஞானி சொல்ல, அழ­கான புன்­மு­று­வல் பூத்­தார் ரஜினி. தனது மனை­வி­யு­டன் விழா­விற்கு வந்­தி­ருந்த யுவன், இளை­ய­ராஜா காலில் விழுந்து ஆசி பெற்­றார். ‘இந்த நிகழ்ச்­சிக்கு நான்கு டிக்­கெட் வேண்­டும்’ என பவ­தா­ரி­ணி­யி­டம் அவர் தோழி­கள் கேட்­டி­ருக்­கின்­ற­னர். அவர் கேட்­ட­தற்கு, ‘‘ஆன்­லைன்ல இருக்கு. விலை கொடுத்து வாங்­கிக்கோ’’ என கறா­ராக மக­ளி­டம் சொல்­லி­விட்­டா­ராம் ராஜா.

நிகழ்ச்­சி­யின் தொடக்­கத்­தி­லேயே வந்து விட்­டார் ரஜினி. மேடைக்கு முன்­பு­றம் பார்­வை­யா­ளர் வரி­சை­யில் இருந்த ரஜி­னி­யி­டம் ‘‘சொல்­லுங்க சாமி... சொல்­லுங்க’’ என அடிக்­கடி உரை­யா­டிக்­கொண்டே இருந்­தார் இளை­ய­ராஜா. ‘‘சாமி, மேடைக்கு வந்து சில வார்த்­தை­கள் பேசுங்க’’ என இளை­ய­ராஜா வேண்­டு­கோள் விடுக்க. உடனே மேடை ஏறிய ரஜினி, ‘‘இளை­ய­ராஜா இசை­ஞானி. ஆனால் எம்.எஸ்.வி. இசை­யின் சாமி. கட­வு­ளைப் பற்றி இந்த ஞானிக்­குத்­தான் தெரி­யும்!’’ என்று ஆன்­மி­கம் கமழ பேச்­சைத் துவங்­கி­னார் ரஜினி.

‘‘எம்.ஜி.ஆர்., சிவாஜி உட்­பட பல­ரை­யும்  புகழ் உச்­சிக்கு கொண்டு சென்­ற­வர் எம்.எஸ்.வி. ராம­ருக்கு உத­விய அனு­மன் போல்  இருந்­தா­லும், ஒரு அணில் மாதிரி வாழ்ந்­தார். அப்­ப­டிப்­பட்ட மகானை நான் பார்த்­த­தில்லை. இனி­யும் பார்க்­கப்­போ­வது இல்லை. இது­போன்ற நிகழ்ச்­சி­யில் நான் கலந்து கொண்­டது எனக்­குக் கிடைத்த ஆசீர்­வா­தம். திறமை என்­பது கட­வுள் தரும்  பரிசு. தாய், தந்­தை­ய­ரி­ட­மி­ருந்து வரு­வது கிடை­யாது. சரஸ்­வதி கடாட்­சம்  எம்.எஸ்.விக்கு கிடைத்­தி­ருக்­கி­றது!’’ என்று அரங்­கம் முழு­வ­தை­யும் நெகிழ வைத்­தார் ரஜினி. அவர் இவ்­வ­ளவு பேசு­வார் என யாருமே நினைத்­தி­ருக்­க­வில்லை. இசை­ஞா­னிக்கு முகம் முழுக்க ஆனந்த ஆச்­ச­ரி­யம்!

திரை பிர­ப­லங்­க­ளைக் கூட அழைக்­கா­மல், ‘டிக்­கெட் வாங்­கிட்டு வந்து பாருங்க’ என இளை­ய­ராஜா கண்­டிப்­பு­டன் சொல்­லக் கார­ணம், நிகழ்ச்சி மூலம் கிடைக்­கும் நிதி சிந்­தா­மல், சித­றா­மல் எம்.எஸ்.வி. குடும்­பத்­திற்­குக் கிடைக்­க­வேண்­டும் என்­ப­து­தான். அதற்­கா­கவே தனது அறக்­கட்­டளை மூலம் நிகழ்ச்­சியை நடத்­தி­னார்.  எம்.எஸ்.வி.யின் குடும்­பத்­தி­னரை மேடை­யி­லேயே வர­வ­ழைத்து, நிகழ்ச்­சி­யி­னால் கிடைத்த பெரும்­தொ­கையை இளை­ய­ராஜா கொடுக்க, ராஜா­வைக் கட்டி அணைத்­துக்­கொண்­டார் சூப்­பர் ஸ்டார்.

நிகழ்ச்­சி­யின் கடைசி பாட­லாக  ‘பட­கோட்­டி’­­யி­லி­ருந்து ‘பாட்­டுக்கு பாட்­டெ­டுத்து...’ பாட அரங்­கில் அத்­தனை பேரும் நெகிழ்ந்து கைதட்ட, அதுவே இசை போல் ஆனது. அந்­தப் பாடலை முடித்த  உட­னேயே இசை­ஞானி அரங்­கி­லி­ருந்து வெளியே காருக்கு வந்­து­விட, நிகழ்ச்சி  முடிந்­தது தெரி­யா­ம­லேயே அரங்­கில் ரசி­கர்­கள் பாட­லில் லயித்­தி­ருந்­த­னர்.