தமிழக கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள் : 29 டிசம்பர் 2017 21:34

சென்னை:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் இன்று சொர்க்கவாசல் வாசல் திறக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர்
திருவல்லிக்கேணி - பார்த்தசாரதி

தமிழகத்தில் வைகுண்ட ஏகாதசி விழா அனைத்து வைணவத் தலங்களில் சிறப்புடன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட அனைத்து வைணவ திருத்தலங்களிலும் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் கோவிலில், இன்று அரங்கநாதர் கருவறையில் இருந்து வெளியில் வந்த நம்பெருமான், சரியாக அதிகாலை 5 மணியளவில் சொர்க்க வாசல் வழியாக வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மக்களும் பெருமளவில் திரண்டிருந்தனர். பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் 3,000க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டி இருந்தனர்.

சென்னை - திருவல்லிக்கேணி

இதேபோல் சென்னை - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலிலும், பார்த்தசாரதி பெருமாள் தாயார்களுடன் இணைந்து பரமபத வாசல் வழியாக வெளியே வந்தனர். அங்கு கூடியிருந்த பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்று கோஷமிட்டு பரவசத்தை வெளிபடுத்தினர். திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.