குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – ஓர் ஆய்வு

பதிவு செய்த நாள் : 18 டிசம்பர் 2017

குஜராத்தின் தலைவிதியை பாகிஸ்தான், காங்கிரஸ் உதவியுடன் நிர்ணயிக்க முயற்சி என்று மோடி தந்த தலைப்பு செய்தி குஜராத் மக்களை ஒரு நிமிஷம் வேறு திசைப் பயணத்திற்கு மாற்றிவிட்டது.

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டமாக கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் ஹிமாச்சல பிரதேசத்திற்கு ஒரே நாளில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் வெளியாக துவங்கியுள்ளன.

அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளும், வாக்கு எண்ணிக்கை போக்கும் 2 மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெறும் என்பதை காட்டுகின்றன.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 183 சட்டமன்ற இடங்களில் 1 இடம் நியமன உறுப்பினருக்கு ஒதுக்கப்படுகிறது. மீதம் உள்ள 182 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. வாக்கு பதிவு சராசரியாக 68.41 சதவீதம்தான்.
2012இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் 71.32 சதவீதமாகும்.
வாக்களிக்க வாருங்கள் என்று மத்திய, மாநில அரசுகள், தேர்தல் ஆணையம் எல்லாம் விளம்பரம் செய்த பிறகும் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2017 சட்டமன்றத் தேர்தலில் நோட்டா என்று புதிதாக ஒரு வேட்பாளர் வாக்குச் சீட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
திங்கள் கிழமை மதிய நிலவரப்படி சராசரியாக 2 சதவீதத்திற்கு மேலாக வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியிருக்கின்றன. 2 சதவீத வாக்குகள் பெறாத பதிவு செய்யப்பட்ட 3 அல்லது 4  அரசியல் கட்சிகள் குஜராத்தில் உள்ளன.
வாக்குப் பதிவு குறைவு, பதிவான வாக்குகளில் 2 சதவீதத்திற்கு மேல் எந்த வேட்பாளரும் சரியில்லை என்று மக்கள் நிராகரித்துள்ள நிலை ஆகியவையும் மக்களின் மனநிலையைக் காட்ட உதவும்.

6வது முறையாக ஆட்சியமைக்க பாஜக களமிறங்கியது.

22 ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டைவிட்டதை பிடிக்க காங்கிரஸ் தேர்தல் களத்தில் போட்டியிட்டது. இந்த 20 ஆண்டு காலத்தில் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே பாஜக பாடுபட்டது. அந்த முயற்சியை சாதனைகளை மக்கள் நிச்சயம் அங்கீகரித்து வாக்களிப்பார்கள். பாஜகவுக்காக அளிக்கும் வாக்கும் அதன் வளர்ச்சித் திட்டங்களுக்காக அளிக்கும் வாக்கு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

குஜராத் மாநில தேர்தலில் மோடிக்கு சிறப்பு அக்கரை ஏன் வந்தது. அது அவர் சொந்த மாநிலம். பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்னாள், குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தார்.

அகில இந்தியத் தேர்தலின்போது, குஜராத் வளர்ச்சியைப் பாருங்கள். அந்த வளர்ச்சி அகில இந்திய அளவில் ஏற்படவேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்கள்.

இந்த பின்னணியில் குஜராத் மாநில மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டார்கள் என்றால் மோடிக்கும், பாஜகவுக்கும் அது பெரிய தர்மசங்கடமாக அமையும்.

அதுவும், சில்லறை விலையிலும் மொத்த விலையிலும் பண வீக்கம் புகுந்து வானளாவிய சதவீதங்களை எட்டும்போது, வளர்ச்சி வீதம் அகில இந்திய அளவில் சரியும் நிலை காணப்படுகிறது.

தொழில்துறை உற்பத்தி, குறைந்து வருகிறது. ஏற்றுமதி மதிப்பு அதிகரித்தாலும், அளவு குறைந்து வருகிறது. சிறு தொழில் துறையின் உற்பத்தி 40 சதவீதம் சரிந்துவிட்டது.

நவம்பர் மாத ஜிஎஸ்டி வருமானம் 12 ஆயிரம் கோடி குறைந்துவிட்டது. இப்படி 8 திசையிலும் மூச்சுவிடமுடியாத அளவுக்கு சிக்கலில் தவிக்கும் மத்திய அரசுக்கு மூச்சுவிட வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றால் அது குஜராத் வெற்றியால் மட்டுமே முடியும்.

சொந்த ஊர் என்கிற காரணத்தினால் பிரதமர் என்ற பதவியில் இருந்துகொண்டே, அடிக்கடி தேர்தல் பிரச்சாரத்தை கலக்கினார் மோடி.
அவருடைய அரசியல் அனுபவம், அவரது பிரச்சாரத்திற்கு மூலதனமாக அமைந்தது. ராஜ தந்திரத்திற்கு அது கை கொடுத்தது. எதிரில் நிற்கும் ராகுல்காந்தி இந்த ராஜ தந்திர வித்தை படிக்காதவர்.

முதல் சுற்று தேர்தல் நடந்து முடிந்தபிறகு, காங்கிரஸுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. காங்கிரஸுக்கு திட்டங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் வகுத்து தருகிறார்கள். ஏற்கனவே, பாஜக முகத்தில் கரியை பூசிய அகமது பட்டேலை குஜராத் மாநில முதல்வராக்க பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது என்று பிரதமர் மோடி போட்ட போடு, காங்கிரஸுக்கு எதிரான அதிரடி, மின்னல்வேக தாக்குதலாக அமைந்தது.

இந்தப் பிரச்சார உத்தி காரணமாக, 22 ஆண்டுகளில் பாஜக அரசு என்ன வளர்ச்சிகளை குஜராத்திற்கு கொண்டு வந்தது என்று யோசித்துக்கொண்டிருந்த மகக்ளை வேறு திசைக்கு வெற்றிகரமாக திருப்பிவிட்டார் மோடி.

குஜராத்தின் தலைவிதியை பாகிஸ்தான், காங்கிரஸ் உதவியுடன் நிர்ணயிக்க முயற்சி என்று மோடி தந்த தலைப்பு செய்தி குஜராத் மக்களை ஒரு நிமிஷம் வேறு திசைப் பயணத்திற்கு மாற்றிவிட்டது.

காங்கிரஸுக்கு அளிக்கும் வாக்கு பாகிஸ்தானுக்கு அளிக்கும் வாக்காக மாற்றிய மந்திரக்காரர் மோடி.

89 தொகுதிகளில் நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவின்போது குஜராத் மாநிலத்தின் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் காங்கிரஸுக்கு முதல்நிலை வாக்கு கிடைத்திருக்கிறது என்று தேர்தல் ஆய்வாளர்கள் இப்போது கூறுகிறார்கள்.

93 தொகுதிகளில் நடந்த இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது, அங்கு எல்லா பகுதிகளிலும் பாஜக முன்னோடியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

எனவே, தேர்தல் என்பது பிரச்சாரம், இணையதள பிரச்சாரம், எல்லாவற்றையும் மீறி, எதிரியை சம்மட்டி கொண்டு தாக்குகிற அல்லது, சட்டை வேட்டியை கழற்றிக்கொண்டு ஓட விடுகிற பிரச்சாரமாக மாறிவரும் நிலையில், மக்கள் யாரை நம்புவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

விளைவு நோட்டாவுக்கு மொத்த வாக்குகளில் 2 சதவீதத்திற்கு மேல் வாக்கு கிடைத்துள்ளது.

பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

பாரதீய ஜனதா பிரம்மாண்டமாக சித்தரிக்கிற வளர்ச்சி என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய தொழில்துறை நிறுவனங்களின் வளர்ச்சியாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு மெல்ல தேய்ந்து, குறைந்து, கரைந்து போய்விட்டது.

குஜராத் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் 9.1 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் 12 தொகுதிகளில் நானா, நீயா என்பதை நிர்ணயிக்கக்கூடிய அளவில் இருக்கிறார்கள்.

அந்த தொகுதிகளில் 3 தொகுதிகளில் காங்கிரஸும், 9 தொகுதிகளில் பாஜகவும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், குஜராத்தில் 22 ஆண்டு கால ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது பாஜக என்பதைத் தவிர, வேறுவிதமாக யோசிப்பதெல்லாம் நடைமுறைக்கு உதவாத வேலை.

தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி தெரிவித்திருக்கிற முத்தாய்ப்பான கருத்துக்கள் அடுத்து குஜராத் அரசு எந்தப் பாதையில் செல்கிறது என்பதற்கு வழிகாட்டுவதாக உள்ளது.

பாஜக மீது குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மக்கள் வைத்திருக்கின்ற அசையாத நம்பிக்கையை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.

குஜராத்தின் நல்லாட்சி மீதும் பாஜக மீதும் மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது. இதற்கு காரணமான பாஜக தொண்டர்களுக்கு என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும்.

எனவே, குஜராத் அரசு திரும்ப பழைய ராஜபாட்டையில் தனது பயணத்தைத் தொடரும்.

மேவானி மிகவும் உஷாராக தன் மக்களை கோழி போல இறகுகளுக்குள் பொத்தி காப்பாற்ற வேண்டும்.

அப்லேஷ் தாகூர், ஹர்த்திக் பட்டேல் மூச்சு விடும்போதுகூட உரத்த சத்தத்தோடு மூச்சுவிடக்கூடாது என்ற விழிப்புணர்வோடு இனிமேல் இயங்க வேண்டும்.

காங்கிரஸுக்கு ஒரு ஆறுதல். அது, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் வருகை காரணமாக காங்கிரஸின் வாக்குகள் அதிகரித்துள்ளன.

தெருவில் காங்கிரஸ் கொடியை கையில் ஏந்திக்கொண்டு செல்ல குஜராத்தின் மண்ணின் மைந்தர்கள் கூச்சப்படாமல், அச்சப்படாமல் நடக்கின்ற நிலை உருவாகியுள்ளது. இது காங்கிரஸின் பெரிய சாதனை.


கட்டுரையாளர்: க. சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
பத்மநாபன் வரதராஜன் 22-12-2017 01:03 PM
காமா சோமா ஆய்வு.

Reply Cancel


Your comment will be posted after the moderation