இமயமலையில் குங்பூ கற்றுத்தரும் புத்தமத பெண் துறவிகள்

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017

நாம் புகைப்படங்களிலும் டீவி நிகழ்ச்சிகளிலும் பல புத்த மடாயலங்களைப் பார்திருப்போம். அங்கு வாழும் புத்த துறவிகளின் வாழ்க்கை முறையை பற்றி விரிவாக படித்திருப்போம். ஆனால் புத்த மடாலயங்களில் வாழும் பெண் புத்த துறவிகளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும். அது மிக மிக அரிது.

எனென்றால் புத்த மடங்களில் பெண் துறவிகளுக்கு சம அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. பெரும்பாலும் அவர்களின் பணி சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது தான். சுதந்திரம் தேடி மடாலயங்களுக்கு வரும் பெண் துறவிகளுக்கு இறுதியில் வழங்கப்படும் இடம் இதுதான்

ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த மடாலயங்களில் விதிவிலக்காக உலகிலேயே பெண் துறவிகளுக்கும் சம அதிகாரம் வழங்கும் புத்த மத பரம்பரை ஒன்று உள்ளது. அதன் பெயர் ‘துருக்பா’. திபெத்திய புத்தமதத்தை சார்ந்த இந்த பரம்பரை ஆயிரம் வருடங்கள் பாரம்பரியம் கொண்டது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 700 துருக்பா பெண் துறவிகள் உள்ளனர். இவர்களில்  பெரும்பாலானோர் இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ளனர்.

இந்தியாவின் இமயமலையில் திபெத்திய எல்லையில் உள்ள லடாக் பகுதியில் இவர்களது மடாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு தினந்தோரும் வழக்கமான பிராத்தனைகளுடன் பெண்கள் வித்தியாசமாக கூச்சலிடும் சத்தமும் கேட்பது வழக்கம்.

அந்த வித்தியாசமான சத்தத்திற்கு காரணம் மடத்தில் உள்ள பெண் புத்த துறவிகள் பெண்களுக்கு தற்காப்பு கலையை கற்றுதருவது தான்.

உலகின் மற்ற புத்த மடங்களில் பெண் துறவிகள் அமைதியாக பிராத்தனை செய்து கொண்டிருக்க துருக்பா மட பெண் துறவிகளோ ஆக்ரோஷமாக சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் பிண்ணனி மிகவும் சுவாரஸ்யமானது. 

மடங்களில் குங்பூ ஆரம்பமான கதை

ஆயிரம் ஆண்டுகளாக மற்ற மடங்களைப் போலவே துருக்பா மட பெண் துறவிகளும் அமைதியாக பிராத்தனையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த 2008ம் ஆண்டு இந்த நிலை மாறியது.

இந்திய – நேபாளம் துருக்பா பரம்பரையின் தலைமை குருவான கியால்வாங், வியட்நாமில் உள்ள துருக்பா மடாலயத்திற்கு சென்றிருந்த போது அங்குள்ள பெண் துறவிகள் குங் பூ பயிலுவதை பார்த்து ஆச்சரியமடைந்தார்.

வியட்நாம் பெண் துறவிகள் 1992ம் ஆண்டு முதல் தற்காப்பு கலையை பயில ஆரம்பித்தனர். அவர்களின் தலைமை குரு திச் வியென் தான்ஹ் இந்த நடைமுறையை துவக்கி வைத்தார். ஆரம்பத்தில் வியட்நாம் படை வீரர்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்தனர். தற்போது பல தற்காப்புக் கலை  வல்லுநர்கள் அவர்களுக்கு அக்கலைகளைக் கற்றுத் தருகிறார்கள்.தற்காப்புக் கலைகளைக் கற்ற வியட்நாம் பெண் துறவிகள் மிகவும் தன்னம்பிக்கையுடனும் வலிமையுடனும் இருப்பதை பார்த்த தலைமை குருவான கியல்வாங், இந்திய – நேபாள எல்லைகளில் வாழும் பெண் துறவிகளையும் குங் பூ பயிலும்படி உத்தரவிட்டார்.

அவர்களுக்கு குங்பூ கற்றுக்கொடுக்க நான்கு வியட்நாம் பெண் துறவிகளையும் கியல்வாங் தன்னுடன் அழைத்து வந்தார். வியட்நாம் பெண் துறவிகள் லடாக் மடாலயத்தில் உள்ள பிட்சிணிகளுக்கு குங் பூ கற்றுதர ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் சிறிது கூச்சப்பட்டாலும் நாளடைவில் தற்காப்பு கலையில் நல்ல தேர்ச்சி பெற்றனர்.

தலைமை குரு கியால்வாங்கின் தாயார் பெண் சமஉரிமை தொடர்பான எண்ணங்கள் கொண்டவர். அவரது எண்ணங்களால் ஈர்க்கப்பட்ட காரணத்தால் தான் புத்த மடாலயங்களில் பாலின வேறுபாடுகளை நீக்க வேண்டும் என்ற கியால்வாங் நினைத்தார். அதன் காரணமாகவே பெண் புத்த துறவிகளைத் தற்காப்பு கலை பயிலுமாறு ஊக்கப்படுத்தினார்.
மேலும் பெண் துறவிகளுக்கு தலைமை பொறுப்புகளை அளித்து அவர்கள் வெறும் புத்த மத புத்தகங்களை மட்டும் படிக்காமல் அதையும் தாண்டி பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவினார்.
அதன்பலனாக இன்று பல பெண் புத்த துறவிகள் எலக்டிரிஷியன்களாகவும் பிளம்பர்களாகவும் உள்ளனர். பெண்களுக்கு சம உரிமை கிடைக்காத வரை உலகில் அமைதி நிலவ வாய்ப்பில்லை என்பது கியால்வாங்கின் ஆழமான நம்பிக்கை.

இதை தவிர பெண் துறவிகள் மடங்களிலேயே காலத்தை கழிக்காமல் சமுதாய பணிகளில் ஈடுபடுமாறும் கியால்வாங் அவர்களிடம் கூறினார். அதன் காரணாமாக கண் தான முகாம், விலங்குகள் பராமரிப்பு, மலைப்பகுதிகளில் சைக்கிளில் சென்று சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு சமுதாய பணிகளில் பெண் புத்த துறவிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 2015ம் ஆண்டு நேபாளில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு கால்நடையாக சென்ற பெண் புத்த துறவிகள் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.


2016ம் வருடம் ஜனவரி மாதம் சுமார் 235 துருக்பா பெண் புத்த துறவிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இந்தியாவின் பீகார், உத்தரபிரதேசம், டில்லி ஆகிய மாநிலங்களுக்கு சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் சம உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சைக்கிள் பேரணியை அவர்கள் நடத்தினர்.
தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வது குறித்து அவர்கள் கூறுகையில் ‘‘இந்த கலையை கற்க ஆரம்பித்தப்பின் எங்கள் யோகா பயிற்சியிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக தியானம் செய்யும் போது மனதை சுலபமாக ஒரே நிலைக்கு கொண்டு வர முடிகிறது’’ என பெண் புத்த துறவிகள் கூறுகிறார்கள்.

பெண்களைப் பாதுகாக்க தற்காப்பு கலை

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கேள்விப்பட்ட துருக்பா பெண் துறவிகள் மிகவும் கவலை அடைந்தனர்.

மேலும் நூற்றுக்கணக்கான சிறுமிகள் மற்றும் பெண்கள் இந்திய நேபாள எல்லைகளில் கடத்தப்படுவது குறித்தும் அறிந்தனர். பணத்திற்காக ஆண்கள் தங்கள் சகோதரிகள், மகள்கள் ஏன் தாயாரை கூட அடிமைகளாக விற்க துணிவது கண்ட பெண் புத்த துறவிகள் அதிர்ச்சியடைந்தனர்.  

இந்தக் கொடுமைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க தங்கள் கற்ற தற்காப்பு கலையை மற்ற பெண்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை பெண் புத்த துறவிகள் உணர்ந்தனர்.அதன் காரணமாக பெண் துறவிகள் இளம் பெண்களுக்குத் தற்காப்பு கலை வகுப்புகளை நடத்த ஆரம்பித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் 13 முதல் 28 வயதுடைய நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று தற்காப்பு கலையை பயின்று வருகிறார்கள்.

ஆபத்தான சமயங்களில் எவ்வாறு தற்காத்து கொள்வது, பின்னால் இருந்து தாக்கப்படும் போது எப்படி அதை தடுப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களை சமாளிக்கும் வழிமுறைகள் ஆகியவை முக்கியமாக கற்றுத்தரப்படுகின்றன.

தங்கள் அனுபவம் குறித்து பெண் புத்த துறவிகள் கூறுகையில் :
லடாக்கில் பெண்கள் பொதுவாக வெளியே செல்வது தடுக்கப்படுகிறது. அவர்கள் எங்கும் செல்லக்கூடாது, யாருடனும் பேசக்கூடாது.
இப்படிப்பட்ட நிலைமையில் வாழும் பெண்களுக்கு எங்களை பார்த்து தான் தைரியம் வர ஆரம்பித்தது.
நாங்கள் மக்கள் மத்தியில் ஆண்கள் போல் சைக்கில் ஓட்டுவோம், பல கடுமையான வேலைகளை எந்த உதவியும் இல்லாமல் நாங்களே செய்வோம். எங்களை பார்க்கும் மக்கள் ஆண்கள் கூட செய்யமுடியாத வேலைகளை இவர்களால் செய்ய முடிகிறதே என ஆச்சரியப்படுவர்.


அப்போது அவர்களிடம் ‘‘எங்களால் இதை செய்ய முடிந்தால் உங்கள் மகள்களால் ஏன் முடியாது? ஏனென்றால் நீங்கள் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுப்பதில்லை. எங்கள் குருநாதர் எங்களுக்கு வாய்ப்பளித்தார். அதனால் நாங்கள் இவற்றை செய்கிறோம். நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் உங்கள் மகள்களாலும் இவற்றை செய்ய முடியும்’’ என்று அவர்களிடம் கூறுவோம்.

நாங்கள் கூறுவதை 90 சதவீத பெற்றோர்கள் ஏற்றுகொள்கின்றனர். நாங்கள் எங்கள் மகள்களைப் பற்றி இவ்வாறு நினைத்து பார்த்ததில்லை என அவர்கள் எங்களிடம் கூறுவர்.

எங்கள் முயற்சிகளுக்கு பல அதிகாரிகளும் உதவி செய்கிறார்கள். வாரம் ஒருமுறை எங்களுடன் அவர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு வருவார்கள். சமீபத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் கலந்து கொண்டு ஜெயித்தனர். மாற்றம் ஒரேயடியாக வராது. சிறிது சிறிதாக தான் வரும்.

பெண்களால் அனைத்து விஷயங்களையும் சாதிக்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொண்டால் அவர்கள் தங்கள் மகள்களை நேசிக்க தொடங்குவார்கள்.  வெறும் சுமையாக பார்க்க மாட்டார்கள். அப்போதுதான் ஆண்கள் தங்கள் மகள்கள், தங்கைகள், தாயாரை காசுக்காக விற்கும் அவலநிலை மாறும்.

இந்த விஷயத்தில் நாங்கள் சந்திக்கும் பெரிய சவால் எதுவென்றால் ஆண்களை கண்டு பெண்கள் பயப்படுவதுதான். அதை மாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் தற்காப்பு கலையை கற்றுக்கொடுப்பது மூலம் அதை சாதிக்க முடியும் என துருக்பா பெண் புத்த துறவிகள் தெரிவித்தனர். 


கட்டுரையாளர்: நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation